பரதனின் மகிமை (பகுதி 2 )

 


பரதன் சித்ரகூடத்தை நெருங்கினார். அப்போது வானத்தில் புழுதி எழும்பிப் படர்ந்தது. அதைப் பார்த்த ஸ்ரீராமன் லக்ஷ்மணனிடம் அதற்குரிய காரணத்தை அறிந்து வரச் சொன்னார். லக்ஷ்மணன் ஒரு மரத்தின் மேல் ஏறிப் பார்க்கிறார். பரதன் தான் படையுடன் வருகிறார் என்று உறுதி செய்துகொள்கிறார். அவர் மேல் ஸந்தேஹம் கொண்டு கடுமையான சொற்களை வெளியிடுகிறார். அப்போது ஶ்ரீ ராமன் பரதனுடைய நற்குணங்களையும், அன்பையும் பெருமைப்படுத்திப் புகழ்ந்து சொல்கிறார்:


இச்சமயம் பரதன் நம் எல்லோரையும் சந்திக்க வருகிற முறையைப் பார்த்தால், அது எல்லாவிதங்களிலும் சரியானதாகவே படுகிறது. நமக்கு இதமில்லாதபடி நடப்பதை அவன் மனத்தாலும் எண்ணமாட்டான்; நீ பரதனை இவ்வாறு ஸந்தேஹிக்கவும், அவனிடம் அஞ்சவும் நேரும்படி அவன் உனக்கு எப்போது தீங்கு செய்திருக்கிறான்? பரதன் இங்கு வந்தபின், இம்மாதிரி கொடூரமான, அன்பில்லாத வார்த்தைகளை நீ சொல்லாதே. நீ அவனிடம் விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டாலும், பிரியமில்லாத சொற்களைச் சொன்னாலும், அவையெல்லாம் என்னிடமே நீ சொன்னதாகவும், நடந்து கொண்டதாகவுமே கருதுவேன். அரசைப் பெறும்பொருட்டு இந்தக் கொடிய வார்த்தைகளைச் சொல்கிறாய் என்றால், அவன் வந்த பிறகு நான் அவனிடம் 'லக்ஷ்மணனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிடு' என்று சொல்லிவிட்டால், அவன் கட்டாயம் என் பேச்சை ஏற்றுக் கொண்டு, உனக்கு அரசைத் தந்துவிடுவான்'.  


 (வால்மீகி ராமாயணம் 2/97/13-15, 17-18)


இவ்விதமாக பரதன் முற்றிலும் நல்லவராகவும், குற்றமற்ற வராகவும் இருப்பினும் எல்லோருடைய ஸந்தேஹங்களுக்கும் இலக்காக நேர்ந்தது. பரதனைப் போன்ற முற்றிலும் பற்றற்ற தர்மாத்மாவும். தியாகியும் ஆன மாமனிதர் இவ்விதம் எல்லோருடைய சந்தேஹங்களுக்கும் இலக்காவதென்பது உலக சரித்திரத்தில் அபூர்வமான ஒரு விஷயமாகும். அப்படி இருந்தும் பரதன் அமைதியுடன் எல்லாவற்றையும் ஸஹித்துக் கொண்டார். அவரது அன்பை என்ன சொல்வது? அது பாராட்டுக்குரியது! அவரது ஸ்வாமி - பக்தியும் போற்றி!! அவருடைய பொறையும் போற்றி!!!


இங்கே பரதன், தம்பி சத்ருக்னன், குஹன் முக்கியமான மந்திரிகள் ஆகியோரிடம் இராமபிரானின் ஆசிரமம் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு


“அண்ணன் ஸ்ரீராமபிரானுடைய தாமரை இதழ்கள் போன்ற கண்களையும், சந்திரன் போன்ற அழகிய அவருடைய முகத்தையும் பார்க்காதவரை எனக்கு அமைதி கிடைக்காது. எதுவரை அரச லக்ஷணங்கள் கொண்ட என் தமையனாரின் இரண்டு கால்களிலும் சிரம் தாழ்த்தி வணங்கவில்லையோ, அதுவரை எனக்கு அமைதி கிட்டாது. எதுவரை அரசுக்கு உண்மையான உரிமையானவரான பகவான் இராமபிரான் புனித முடிசூட்டு நீரால் நனைந்து தன்னுடைய தகப்பனார், பாட்டனார் ஆகியோர் வழிவழியாக வந்த பேரரசின் அரசராக ஆகவில்லையோ. அதுவரை எனக்கு அமைதி கிட்டாது" என்று பலவாறு புலம்பித் தவிக்கிறார்.  


(வால்மீகி ராமாயணம் 2/98/7, 9-10)


இவ்விதமாகப் பலவாறு சொல்லிவிட்டு மனிதர்களிற் சிறந்த பரதன் கால்நடையாகவே ஸ்ரீராமனைத் தேடிக்கொண்டு அந்த அடர்ந்த காட்டில் புகுந்தார். ஓர் உயரமான மரத்தின் மேலேறித் தொலைவில் ஸ்ரீராமன் உறையும் ஆசிரமத்தைக் கண்டார். அங்கு அவர் அமர்ந்திருப்பதை அடையாளம் கண்டுகொண்டார். அதைக் கண்டதும் அவர் புத்துயிர் பெற்றார். அவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டு குஹனைத் தம்முடன் வரச்செய்து ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்டார்.



ஸ்ரீராமன் உறையும் குடிலுக்கு அருகில் சென்ற பரதன், பூவுலகம் அனைத்துக்கும் இறைவனும், தர்மசீலருமான பகவான் இராமபிரான் ஸீதாதேவியுடனும், லக்ஷ்மணனுடனும் ஒரு மேடையின் மேல் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இராமபிரான் கருத்த மான்தோலையும், மரவுரியையும் அணிந்திருந்தார். அவரது திருமுடியில் சடைகள் அழகாக மிளிர்ந்தன. அவர் தோள்கள் சிங்கத்தின் தோள்கள் போல் தோற்றம் அளித்தன. நீண்ட பெரிய கைகள்; தாமரை போன்ற கண்கள்; இராமபிரானை இந்த நிலையில் கண்டு, மஹாத்மா பரதன், துயரத்தில் ஆழ்ந்து மூழ்கிவிட்டார். அண்ணலின் பக்கமாகப் பார்வை சென்றவுடனேயே, பரதன் துயரம் நிறைந்த, தழுதழுத்த குரலில், புலம்பிக் கொண்டு சொல்லத் தொடங்கினார்.


'ஐயோ! அரசவையில் அமர்ந்து குடிமக்களாலும் அமைச்சர் வர்கத்தினராலும் பாராட்டப்படவேண்டியவர் என் அண்ணன். இங்கே காட்டுமிருகங்கள் சூழ அமர்ந்திருக்கிறார். எவர். முன்பு ஆயிரக்கணக்கில் மதிப்புடைய ஆடைகளை அணிந்தாரோ, அவர் இன்று இரண்டு மான் தோல்களையே அணிந்துகொண்டு அமர்ந்திருக்கிறார். ஐயோ! அவர் எல்லா வகையாலும் ஸுகம் துய்க்க வேண்டியவர் ஆயிற்றே. அந்த பகவான் ஸ்ரீராமன் என் நிமித்தமாக எவ்வளவு கஷ்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்! நானும்தான் எத்தனை கொடியவன்! உலகமே நிந்திக்கும் என் வாழ்க்கை வெறுக்கத்தக்கது! சீ! சீ! இது ஒரு வாழ்க்கையா!'.


(வால்மீகி ராமாயணம்2/99/31-32, 36)


இவ்விதம் பலவும் சொல்லிப் புலம்பிய பரதன் துயரத்தால் நைந்து கண்ணீர் போனார். தாமரையையொத்த அவரது முகத்தில் தாரையாக ஒழுகத் தொடங்கிற்று. அளவற்ற பெருந்துயரால் மனமுடைந்து போன அவர் ஸ்ரீராமனுடைய பாதங்களைத் தொடுவதற்கு முன்பே, 'என் ஐயனே!' என்று சொல்லிக்கொண்டே அவரருகிலேயே தீனனாகக் கீழே விழுந்து விட்டார். துயரத்தால் அவருடைய தொண்டை அடைபட்டு விட்டது. ஒன்றும் பேச இயலவில்லை. தொடர்ந்து சத்ருக்னனும் அழுதுகொண்டே இராமபிரானுடைய திருவடிகளில் பணிந்தார். சடையும், மரவுரியும் தரித்திருந்த பரதன் கைகளைக் கூப்பிக்கொண்டு தரையில் கிடப்பதைப் பார்த்த ஸ்ரீராமனுக்கு அவரை அடையாளம் தெரிந்து கொள்ளவே கடினமாயிருந்தது. அவர் இரண்டு தம்பியரையும் தூக்கி எடுத்து மார்புடன் அணைத்துக்கொண்டார். பரதனது நிலைகண்ட காட்டுவாழ் மக்கள் வாய்விட்டு விம்மத் தொடங்கினர்.


பிறகு இராமபிரான் வைத்துக்கொண்டு, 'தம்பி! இப்படி மரவுரி, மான்தோல், எதற்காக வந்தாய்?' எனறு தந்தை இறந்த செய்தியைச் சொன்னார்:






பிறகு இராமபிரான் பரதனை மடியில் இருத்தி ராஜ்யத்தை விட்டுவிட்டு வைத்துக்கொண்டு, 'தம்பி! நீ ராஜ்யத்தை இப்படி மரவுரி, மான்தோல், சடை தரித்துக்கொண்டு இங்கு எதற்காக வந்தாய்?' என்று கேட்டார். அதற்கு விடையாகத் தந்தை இறந்த செய்தியைச் சொல்லி விட்டு பரதன் மேலே சொன்னார்:



யாவரையும் மதித்துப் போற்றும் ரகுநந்தனா! மரபு வழியிலும், உங்களுடைய தகுதியாலும் நீங்களே இந்த அரசுக்கு உரிமையுள்ளவர். எனவே இந்த அரசை தர்மப்படி ஏற்றுக்கொண்டு உங்களிடம் நல்லெண்ணம் கொண்டுள்ள நண்பர்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். அதுவே நியாயம். நான் உங்கள் தம்பி; சீடன்; தொண்டனும்கூட. இந்த மந்திரிகளுடன் நானே உங்களுடைய திருவடிகளில் தலைதாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன். என்மேல் கருணை காட்டுங்கள்'

 (வால்மீகி ராமாயணம்2/101/10, 12)



இவ்வாறு சொல்லி பரதன் கண்களில் நீரை பெருக்கிக் கொண்டு, இராமபிரானுடைய பாதங்களில் விழுந்தார். (அயோத்திக்கு) திரும்பி வந்து முடிசூடிக் கொண்டருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அப்போது ஸ்ரீராமன் சாஸ்த்ரங்களிலிருந்து அநேக தத்வங்களை எடுத்துக்கூறியும், தந்தையின் ஆணைக்குள்ள மஹத்வத்தைக் சுட்டிக்காட்டியும், நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்குமாறு பரதனை அறிவுறுத்தினார். ஆனால் பரதனுக்கு இது ஏற்புடையதாக, மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. அவர் சொன்னார்: 'பகவானே! உங்களுக்குச் சமமாக யார் பேச முடியும்? உங்களுக்கு ஸுகம் -துக்கம், பெருமை-சிறுமை,நிந்தை துதி இவை எல்லாமே சமமானவை. உங்கள்ளவு பேரறிவு படைத்தவன், எத்தகைய இன்னல் நேரினும் துயருற மாட்டான். ஆனால் நான் அப்படிப்பட்டவன் அல்லன். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் உங்களுடைய பாதங்களில் விழுந்து வேண்டுகிறேன். தயை புரியுங்கள். நீங்கள் மனிதருள் மாணிக்கம். எனக்கும், என் தாயாருக்கும் ஏற்பட்ட கறையைக் கழுவி, வணங்குதற்குரிய பிதாவையும் பழிச்சொல்லினின்றும் காப்பாற்றுங்கள்' என்று மேலும் பலவும் சொன்னார்.


பரதன் இவ்விதமெல்லாம் சொல்வதைச் செவியுற்ற வேள்விசெய்வோர். நகரமாந்தர், பல்வேறு சமுதாயங்களின் தலைவர்கள், தாய்மார்கள் அனைவரும் தங்களை மறந்தவர்களாகி கண்ணீர் பெருக்கி, அவரைப் புகழத் தொடங்கினர். மேலும் அவர்கள் எல்லோருமே, திரும்பி வரும்படி ஸ்ரீராமனிடம் தங்கள் நிலைக் கேற்றவாறு வேண்டிக்கொண்டனர்.


அதற்குமேல் இராமபிரான் நியாயமும், தர்மமும் பொதிந்த பல வார்த்தைகளைச் சொல்லி, பரதனுக்கு அறிவுறுத்தினார். இவ்விதம் என்ன சொல்லியும் இராமபிரான் திரும்பிவருவதற்கு உடன்படாததைப் பார்த்த பரதன் அளவற்ற வருத்தம் அடைந்து, 'என் அண்ணன் என் வேண்டுகோளை ஏற்காதவரை, நீர் பருகாமல், ஆகாரம் உண்ணாமல் அவர் எதிரே உட்கார்ந் திருப்பேன்' என்று சொல்லிவிட்டு அப்படியே தரையில் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்.


அப்போதும் ஸ்ரீராமன் பரதனைச் சமாதானப்படுத்திச் சொன்னார்: 'நீ செய்யும் இந்தச் செயல் அறத்துக்கு மாறானது. இந்த வீண் பிடிவாதத்தை விட்டுவிடு.' இதைக் கேட்டு பரதன் உடனே எழுந்து நின்று எல்லோருடைய முன்னிலையில் இவ்வாறு கூறினார். 'தந்தையின் சொல்லைக் காக்க இவர் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசிக்க வேண்டும் என்றால், இவருக்குப் பதிலாக நான் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாசம் செய்வேன்' என்று சொன்னார். இராமபிரான் மேலும் எடுத்துக்கூறினார். 'தம்பி பரதா! இவ்விதம் மாற்றுவதற்கு நமக்கு உரிமை இல்லை', என்று சொல்லிவிட்டு எல்லோரிடமும்,



'பரதன் மிகுந்த பொறுமை உள்ளவன். பெரியவர்களை நன்கு மதித்து நடப்பவன் என்பதை நான் அறிவேன். உண்மையைக் காப்பாற்றும் விரதம் பூண்ட இந்த மஹாத்மாவிடம் எல்லா நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. நான் வனவாஸம் முடிந்து திரும்பி வந்தவுடன் என்னுடைய தர்மசீலரான தம்பியுடன் சேர்ந்து இந்தப் பூமியில் சிறந்த அரசன் ஆவேன். கைகேயி, அரசனிடம் வரம் பெற்றார். நான் அவர் கட்டளையை ஏற்றுக் கொண்டேன். எனவே தம்பி பரதா! நான் சொல்வதைக் கேள். நம் தந்தையை அஸத்யம் என்னும் தளையிலிருந்து விடுவி!' என்று பின்வருமாறு சொன்னார்.

 (வால்மீகி ராமாயணம்/111/30-32)


இரு ஸஹோதரர்களும் ஒப்பற்ற பிரதாபம் உள்ளவர்கள். அவர்களிடையே நிகழ்ந்த உரையாடல் உடல் சிலிர்க்கச் செய்கிறது. அதையும், அவர்கள் ஒருவர் மேல் மற்றவர் கொண்டிருந்த அன்பையும் கண்டு அங்கே வந்திருந்த அவ்வளவு மக்களும், முனிவர்களும், வியப்படைந்து மெய்மறந்தனர். ஆகாயத்தில் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து நின்ற முனிவர்கள், எதிரே கண்களின் பார்வைக்குப்பட அமர்ந்திருந்த முனிவர்கள் ஆகிய அனைவரும் இரு ஸஹோதரர்களையும் வாயார, மனமாரப் புகழ்ந்தனர்.


இதற்குப் பிறகு எல்லா ரிஷிகளுமே ஸ்ரீராமன் சொல்வதைக் கேட்டு நடக்கும்படி பரதனுக்கு அறிவுறுத்தினர். இராம பிரானுக்கும் இதனால் மனநிறைவு ஏற்பட்டது. ஆனால் பரதனுக்கு திருப்தி ஏற்படவில்லை. அவர் கைகளைக் கூப்பிக்கொண்டு இராமபிரானிடம், 'பெருந்தகையே! நான் இந்த அரசை ஆளவல்லேனல்லன். நீங்கள் இந்த ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டு வேறு யாரையாவது ஆட்சிப் பொறுப்பை ஏற்கச் செய்யுங்கள்' என்று குரல் தழுதழுக்க உரைத்தார். இவ்விதம் சொல்லிவிட்டு பரதன், அண்ணனுடைய பாதங்களில் வணங்கினார். அப்போது ஸ்ரீராமன் அவரைத் தூக்கி எடுத்து மடியில் அமர்த்திக் கொண்டு


'அன்புத் தம்பியே!இயற்கையாகவும், பயனாகவும் பணிவோடு கூடிய இந்த அறிவு உனக்குக் பூவுலகம் கிடைத்திருக்கிறது. அதைக்கொண்டே, இந்தப் முழுவதையும் காக்க நீ நல்ல திறமை பெற்றவனாவாய் என்று இனிமையான குரலில் சொன்னார்.

 (வால்மீகி ராமாயணம்2/112/16)


ஸூர்யதேவனுக்கொப்பான தேஜஸ் கொண்ட ஸ்ரீராமசந்திரனுடைய அன்பு நிறைந்ததும், அறிவு புகட்டுவதுமான இவ்வார்த்தைகளைக் கேட்டும் அவர் மனஉறுதியைப் பார்த்தும் பரதன் சொன்னார்:



'ஐயனே! இதோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பொற்பாதுகைகள் இருக்கின்றன. நீங்கள் இவற்றின்மேல் உங்கள் பாதங்களை வையுங்கள். இவையே அனைத்துலக நலன்களையும், நிலைத்த பேற்றையும் நல்கும்.'

(வால்மீகி ராமாயணம்2/112/21)           


பரதனுடைய உயர்ந்த உணர்வுகள் போற்றி!

எத்துணை உயரிய கருத்துக்கள் பரதனுக்கு இருந்தன!


பகவான் ஸ்ரீராமன் அந்தப் பாதுகைகளின் மேல் மங்களம் தரும் தம்முடைய அடியிணையை வைத்து அவற்றைப் பரதனிடம் கொடுத்தார். பரதன் அவற்றை வணங்கிவிட்டு இராமபிரானிடம்


நாளை . .


'ரகுநந்தனா, நானும் பதினான்கு ஆண்டுகள் வரை சடைகள் தாங்கி, மரவுரி தரித்து, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, உங்களது வருகையை எதிர்நோக்கி நகரத்துக்கு வெளியே வாழ்வேன்.  . . . . 


தொடரும் . . .


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more