பரதனின் மகிமை (பகுதி 3 )



'ரகுநந்தனா, நானும் பதினான்கு ஆண்டுகள் வரை சடைகள் தாங்கி, மரவுரி தரித்து, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, உங்களது வருகையை எதிர்நோக்கி நகரத்துக்கு வெளியே வாழ்வேன். எதிரியைப் பொசுக்குபவரே! அவ்வளவு நாட்களுக்கும் இந்த அரசை நடத்தும் பொறுப்பு இப்பாதுகைகளிடமே இருக்கும். ரகுகுல ஏந்தலே! பதினான்கு ஆண்டுகள் நிறைவுற்றவுடனே அதே நாளில் உங்களது தர்சனம் கிடைக்கப் பெறவில்லை என்றால் நான் எரியும் நெருப்பில் புகுந்துவிடுவேன்!' என்று சூளுரைத்தார்.


பரதன் கூறிய இச்சூளுரையைக் கேட்ட பகவான் மகிழ்ச்சி யுடன் அதை ஏற்றுக்கொண்டார். பிறகு பரதனிடமும், தம்பி சத்ருக்னனிடமும், தாயான கைகேயினிடமும் நல்லமுறையில் நடந்துகொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார். இருவரையும் மார்புறத் தழுவிக்கொண்டார். விடையும் கொடுத்தார். அப்போது பரதனின் பிரிவைத் தாங்காமல் ஸ்ரீராமனுடைய கண்களில் கண்ணீர் நிரம்பிற்று. ditative


இதற்கப்பால் பரதன் பகவானுடைய பாதுகைகளைத் தம் தலைமேல் ஏந்தியவாறு, மிக்க மனநிறைவோடு தேரேறினார். வழியில் பரத்வாஜ முனிவரைச் அனைத்தையும் உரைத்து. சந்தித்து, நடந்தவை அவரிடம் அனுமதி பெற்று சிருங்கபேரபுரம் வழியாக அயோத்தி வந்தடைந்தார். தாய்மார்களை அரண்மனையில் இருக்கச் செய்துவிட்டு, பரதன்



'நான் நந்திகிராமம் செல்லப்போகிறேன். இதற்கு உங்கள் எல்லோருடைய அனுமதியையும் வேண்டுகிறேன். மஹாராஜா சொர்க்கம் போய்விட்டார். வந்தனைக்குரிய என்னுடைய தலைவர் இராமபிரான் காட்டில் வசிக்கிறார். இந்த இரண்டுமே மிகவும் துயரம் தருபவை. எனவே நான் நந்திக்கிராமத்திலேயே வாழ்ந்து கொண்டு ஸ்ரீராமனை விட்டுப் பிரிந்து இந்த எல்லாத் துயரங் களையும் பொறுப்பேன். அரசை ஆள ஸ்ரீராமன் எப்போது வருவார் என்று எதிர்பார்த்திருப்பேன். பெரும் புகழுக்குரிய ஸ்ரீராமன்தான் நம் எல்லோருக்குமே அரசர்' என்றார். 


(வால்மீகி ராமாயணம்2/115/2-3)



பரதன் இவ்விதம் கூறியதைக் கேட்ட புரோஹிதர் வஸிஷ்டர் மந்திரிகளுடன் சேர்ந்து கொண்டு


'பரதா! தமையனிடம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியினால் நீ சொன்னவை எல்லாம் மிகவும் போற்றத்தக்கவை. உண்மையில் உன்னுடைய நற்குணத்திற்கேற்றவாறு உன் பேச்சு அமைந்துள்ளது. உன் அண்ணனைத் தர்சிக்க எப்போதும் நீ துடித்துக் கொண்டிருக்கிறாய். அவரது நலனிலே அக்கறை கொண்டுள்ளாய். மிகவும் உத்தமமான வழியிலேயே சென்று கொண்டிருக்கிறாய். எனவே நீ சொல்வதை யார்தான் சரி என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்?' என்று அவரைப் புகழ்ந்தார். 


(வால்மீகி ராமாயணம்2/115/5-6)


மேற்கூறியபடி எல்லோருடைய அனுமதியையும் பெற்று பரதன் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதுகைகளைத் தலை மேல் தாங்கியவராய், சத்ருக்னனுடன் நந்திக்கிராமம் சென்றார். அங்கே தேரிலிருந்து இறங்கியவுடன்



  'இந்த அரசைச் சிறந்த அடகுப் பொருளாக என்னிடம் என் அண்ணன் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய இப்பொற் பாதுகைகளே எல்லோருடைய நலனையும் நிர்வஹிக்கப் போகின்றன. இவற்றை அந்த மாமனிதரின் திருவடிகளாகவே நான் மதிக்கிறேன். நீங்கள் விரைவிலேயே இவற்றின் மேல் குடையைப் பிடியுங்கள். என் தலைவருடைய இந்தத் திருப்பாதுகைகளின் வல்லமையால் தான் இந்த நாட்டில் தர்மம் நிலைபெறும். அவருடைய அளவு கடந்த பாசத்தினால்தான் இங்கு விலைமதிப்பிலாக் காப்பீட்டுப் பொருளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். எனவே அவர் திரும்பிவரும் இவற்றை நான் பாதுகாப்பேன். அவர் வரை வந்தவுடனேயே பகவானுடைய பாதங்களில் இப்பாதுகைகளை அணிவித்து அவற்றால் ஒளிபெறும் அவருடைய திருவடிகளைத் தரிசிப்பேன். ஸ்ரீரகுநாதன் வந்தவுடனேயே இந்த நாட்டையும், அரசையும் அவரிடம் ஒப்படைத்துவிடுவேன். பிறகு என் சுமையெல்லாம் குறைந்துவிடும். நான் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டவனாக இருந்துகொண்டு அவருக்குத் தொண்டு செய்துகொண்டிருப்பேன். அடகுப் பொருளாக என்னிடம் தரப்பட்ட ராஜ்யம், பாதுகை, அயோத்தி அனைத்தையும் ஸ்ரீராமனுடைய சந்நிதியில் ஒப்புவித்து விட்டு நான் எல்லாப் பாபங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுபட்டு விடுவேன்' என்று அங்கு குழுமியிருந்த பெரியோர்களிடம் கூறினார்.


(வால்மீகி ராமாயணம்2/115/14, 16-20)


பின்னர் மனவுறுதி படைத்த பரதன் சடையும். மரவுரியும் தாங்கியவராய் ஒரு முனிவரின் கோலம் பூண்டு, நந்திக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். அரசுக்குரிய எல்லாச் செயல்களையும் பகவானுடைய திருவடி நிலைகளிடம் விண்ணப்பித்துவிட்டே செய்தார். அவற்றிற்குத் தாமே குடைபிடிப்பார்; சாமரம் வீசுவார். அவர் தம் அண்ணன் ஸ்ரீராமபிரானுடைய பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து, அரசர்க்குரிய எல்லாப் பணிகளையும் செய்தார். அரசின் எல்லாச் செயல்களையும் முதலில் பாதுகைகளிடம் தெரிவித்துவிட்டுப் பிறகு நடத்துவார். ஏதாவது விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் வந்தால் அவற்றை முதலில் பாதுகைகளுக்கு அர்ப்பணம் செய்துவிட்டுப் பிறகு பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்வார்.


இலங்கையை வெற்றிகொண்ட பிறகு பகவான் ஸ்ரீராமன் விபீஷணனுக்கு அரசை அளித்துவிட்டு ஸீதாதேவியுடனும், லக்ஷ்மணனுடனும் அயோத்திக்குத் திரும்பிவரத் தயாரானார். அப்போது விபீஷணன் ஸ்ரீராமனிடம், நீராடி ஆடையலங்காரம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பகவானோ பரதனது பக்தியை நினைவுபடுத்திக் கொண்டு சொல்கிறார்: 


'உண்மையில் தர்மாத்மாவும், ஈடுபாடு கொண்டவனும், பெரும்புயத்தானும், உடலழகு மிகுந்தவனுமான பரதன் எல்லாவிதமான ஸுகபோகங்களையும் துய்க்க வேண்டியவன். இருந்தும் எனக்காக அவற்றைத் துறந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். தர்மத்தின் வழிநடப்பவனும் கைகேயியின் புதல்வனுமான பரதன் இன்றி எனக்கு நீராடுவதிலும், ஆடையணிகள் அணிவதிலும் மனம் செல்லவில்லை. அந்தத் தம்பி பரதனைக் காண என்மனம் துடித்துக்கொண்டிருக்கிறது'. இதிலிருந்தே பரதனிடம் ஸ்ரீராமன் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பது தெரிய வரும்

(வால்மீகி ராமாயணம் 6/121/5-6, 18)



அதற்குப் பிறகு லக்ஷ்மணனுடனும் மற்றுமுள்ள எல்லோருடனும் கூட புஷ்பக விமானத்தில் ஸ்ரீராமன் அயோத்திக்குப் புறப்பட்டார். பரத்வாஜ ஆசிரமம் வந்து சேர்ந்தவுடன், ஹநுமானை அழைத்துத் தாம் வந்துவிட்ட நற்செய்தியைத் தம் அன்புத்தம்பி பரதனிடம் தெரிவிக்க அனுப்பிவைத்தார். ஹனுமானும் நந்திக்கிராமத்துக்கு வந்தார். அங்கே என்ன கண்டார்?


'நகருக்கு வெளியே பரதன் ஆசிரமத்தில் வசிக்கிறார். அண்ணனின் பிரிவாற்றாமையால் உடல் மெலிந்து இருக்கிறது. மேலே ஒரே அழுக்குப் படிந்திருக்கிறது. முகம் வாடிக் காணப்படுகிறது. துயருற்ற வறியவன் போல் தோற்றம் அளிக்கிறார். அவர் பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழ்கிறார். புலன்களை முழுமையாக அடக்கி இருக்கிறார். தலையின் மேல் நீண்ட சடைகளின் சுமை; உடலில் மரவுரியும், மான்தோலும்; அறவழி நடப்பது எனும் தவம் செய்து கொண்டிருக்கிறார். அவர் மனம் தறிகெட்டுத் திரியாமல் காக்கப்பட்டுத் தியானத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது. அவர்தம் உடற்பொலிவு பிரம்மரிஷிகளுடையது போன்று இருக்கிறது. அவர் ஸ்ரீராமனின் பாதுகைகளுக்கு ஸேவை செய்துகொண்டு உலகை ஆண்டு வருகிறார்.'


(வால்மீகி ராமாயணம் 6/125/ 30-32)


இதுமட்டுமா? பரதனின் அன்பினாலும், செயல்களினாலும் ஈர்க்கப்பட்ட அமைச்சர்களும், புரோஹிதர்களும், படையின் மிக முக்கிய அதிகாரிகளும்கூட காவி உடை அணிந்து கொண்டவர்களாக அவரருகிலேயே இருக்கிறார்கள் என்பதையும், ஹனுமான் காண்கிறார்.


ஹனுமான் பரதனிடம் ஸ்ரீராமனின் வருகையைத் தெரிவித்தார். ஹனுமானின் வாய்மொழியாக அண்ணன் வந்துவிட்ட செய்தி கேட்ட பரதன் மகிழ்ச்சியால் உருகிவிட்டார். அவர் தம் சுயநினைவை இழந்துவிட்டார். சற்றுநேரத்தில் தம் நிலையை அடைந்து அவர் ஹனுமானை மார்புடன் தழுவிக் கொண்டார். அன்புடன் கண்ணீரால் நீராட்டியவாறே அவரிடம்,


தே வோ வா மாநுஷோ வா த்வமநுக்ரோஸாதி ஹாக,த:

ப்ரியாக் யாநஸ்ய தே ஸௌம்ய த த ாமி ப்ருவத: ப்ரியம் || 


(வால்மீகி ராமாயணம்.6/125/43)


பஹூநி நாம வர்ஷாணி க தஸ்ய ஸுமஹத்,வநம்

ஸ்ருணோம்யஹம் ப்ரீதிகரம் மம நாத,ஸ்ய கீர்தநம் !! 


(வால்மீகி ராமாயணம்.6/126/1)


'என் மீது தயவுகாட்டி வந்துள்ள நீ தேவனா? மனிதனா? சாந்தமானவரே! எனக்கு மிகவும் பிரியமான செய்தியை சொன்னாய். இதற்காக நீ எதை விரும்பிக் கேட்டாலும் நான் கொடுத்துவிடுவேன். என்னுடைய அண்ணன் அடர்ந்த காட்டுக்குச் சென்று பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றுதான் அவரைப் பற்றிய மகிழ்ச்சி அளிக்கும் செய்தியைக் கேட்கிறேன்' என மொழிந்தார்.


இதற்குப் பிறகு பரதன், 'வானரர்களுடன் இராமபிரானுக்கு நட்பு ஏற்பட்டது எப்படி?' என்று கேட்டார். காட்டுக்குச் சென்றதிலிருந்து இலங்கை சென்றது. அங்கே நடந்தது, திரும்பி பரத்வாஜ ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தவரையிலான எல்லா விஷயங்களையும் ஹனுமான் சொன்னார். இதைக்கேட்ட பரதன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அருகில் நின்ற சத்ருக்னனிடம்


நகரை அலங்கரிக்க ஏற்பாடு செய்து, மக்கள் எல்லோரிடமும் ஸ்ரீராமனை வரவேற்கத் தயாராகும்படி அறிவித்துவிடச் சொன்னார். செய்தியறிந்த நகரமாந்தரிடையே அன்பும், ஆனந்தமும் வெள்ள மாய்ப் பெருக்கெடுத்து ஓடின. எல்லோரும் பெருமானுடைய வரவை எதிர்பார்த்து நின்றனர்.


தர்மம் அறிந்த பரதன் ஸ்ரீராமனுடைய பாதுகைகளை அழகான மாலைகளால் அலங்கரித்துத் தம் சிரஸின் மேல் வைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு அவற்றின் மேல் தங்கக் குடையைக் கவிழ்த்தார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வெண்சாமரத்தை எடுத்து வீசினார். அப்படி வீசிக்கொண்டே சென்றவர் சிறிது தூரம் சென்றபின்னர் இராமபிரான் வருவதைக் காணாமல், அன்பினால் கலங்கி, ஹனுமானிடம், 'ஹனுமானே! இது என்ன? இன்னமும் ரகுகுல திலகனான இராமபிரான் வரக்காணோமே?' என்று கேட்டார். கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீபரதன், விமானம் வருவதைக் கண்டார். அதில் அமர்ந்திருந்த ஸ்ரீராமனை தரிசனம் செய்து பக்தியுடன் அவரை வணங்கினார். விமானமும் இராமபிரானது திருவுள்ளப்படி கீழே இறங்கியது.



விமானத்தில் இருந்த இராமபிரானைக் கண்டு மனம் பூரித்தவராக பரதன் மீண்டும் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினார். ஸ்ரீராமசந்திரனும் பலநாட்களுக்குப் பிறகு கண்ட பரதனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அன்பு ததும்ப, மகிழ்ச்சி பொங்க, அவரை அணைத்துக் கொண்டார். பிறகு பரதன் லக்ஷ்மணனைச் சந்தித்துவிட்டு, ஸீதாதேவியின் திருவடிகளில் வணங்கினார். மேலே, தர்மம் அறிந்த பரதன் இராமபிரானுடைய திருப்பாதுகைகளைக் கைகளில் எடுத்து ஸ்ரீராமன் திருவடிகளில் சேர்த்தார். கைகளைக் கூப்பிச் சொன்னார்:


‘என்னிடம் அடைக்கலப் பொருளாக, காப்பதற்காக வைக்கப் பட்டிருந்த உங்களுடைய அரசு முழுவதையும் இன்று திருப்பிக் கொடுத்துவிட்டேன்! இன்று என் பிறவி பயனுள்ளதாகிவிட்டது. என் மனோரதங்கள் எல்லாம் பூர்த்தி அடைந்துவிட்டன! நீங்கள் அயோத்தி திரும்பி வந்ததைக் கண்டுவிட்டேன்!' இவ்விதம் அண்ணனிடம் அன்பு கொண்ட பரதன் சொல்வதைக் கேட்ட அரக்கர் கோமானான விபீஷணனுடைய கண்களிலிருந்தும், ஸுக்ரீவன் முதலான வானரர்களுடைய கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. பின்னர், ஸ்ரீராமனுடைய பட்டாபிஷேக வைபவம் நடந்தேறியது. பரதனும் லக்ஷ்மணனைப் போல் இராமபிரானுடைய ஸேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 

(வால்மீகி ராமாயணம்.6/127/55-56)


சிலநாட்கள் சென்ற பிறகு இராமபிரான் பரதனுடைய அம்மானிடமிருந்து வந்த செய்தி கிடைத்ததும், கந்தர்வர்களை வெற்றி கொள்ள பரதனை அனுப்பிவைத்தார். பரதனும் அரசரின் ஆணையைச் சிரமேற்கொண்டு அங்கே சென்று கந்தர்வர்களை வென்றார். அதன் பின்னர், அண்ணலின் ஆணையின்படி அந்த நாட்டுக்கு அரசராகத் தம் புதல்வர்களுக்கு முடிசூட்டிவிட்டு விரைவிலேயே பெருமானிடம் வந்துசேர்ந்தார். எல்லா விஷயங்களையும் ஸ்ரீராமனிடம் கூறினார். அவர் வந்து தெரிவித்த செய்திகள் அனைத்தையும் கேட்டு இராமபிரான் மனம் மகிழ்வுற்று பரதனைப் புகழ்ந்தார்.


முடிவில் லக்ஷ்மணனைத் துறந்தபிறகு, தாம் பரமபதம் (ஸ்ரீவைகுண்டம்) செல்ல விரும்புவதால், பரதனுக்குப் பட்டாபி ஷேகம் செய்விக்கும் கருத்தை இராமபிரான் வெளியிட்டார். ஆனால் பரதன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவர் அந்தப் பேச்சை எடுத்தவுடனேயே நினைவிழந்தார். நினைவு வந்தவுடன்,


'மஹாராஜா! ஸத்யத்தின் மேலும், சொர்க்கத்தின் மேலும்ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களை விட்டுத் தனித்து என்னால் இருக்கமுடியாது. அரசையும் நான் விரும்பமாட்டேன்' எனத் தெரிவித்தார். 

                                                                    (வால்மீகி ராமாயணம்.7/107/6)



அப்போது ஸ்ரீராமன் பரதனது கருத்தை ஏற்று, குசனுக்கும், லவனுக்கும் முடிசூட்டி அவர்களை அரசர்களாக்கி, சத்ருக்னனையும் அழைத்துக்கொண்டு அனைவருடனும் பரமபதம் எழுந்தருளினார்.


உண்மையில் ஸ்ரீராமனிடம் பரதன் கொண்டிருந்த பக்தி உலக வரலாற்றிலேயே ஒப்பிட இயலாததாகும். அவருடைய தியாகம், புலனடக்கம், விரதம், நியமம் முதலியவை எல்லாமே போற்றுதற்கரியன; பின்பற்றத்தக்கன. இவர்தம் சரித்திரத்திலிருந்து சுயநலத்தைத் துறத்தல், பணிவு, சகிப்புத்தன்மை, எளிமை, பொறுமை, வைராக்யம், ஸ்வாமிபக்தி போன்ற எண்ணற்ற நற்குணங்களையும், படிப்பினையாக நாம் பெறவேண்டும். பக்தியுடன், பற்றற்றவராக இல்லறத்தை நடத்திக்கொண்டே குடிமக்களைக் காத்துவந்த பரதாழ்வானது தூய வாழ்க்கை நம் அனைவருக்குமே ஓரழகிய, அரிய முன்னுதாரணமாகும்.





🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more