பரதனுடைய ஆதர்ச வாழ்க்கை
ஸ்ரீபரதனுடைய வாழ்க்கை மிகவும் பொலிவு மிக்கது. எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அவரிடம் எந்த இடத்திலும், எந்தக் குறையும் காணப்படவில்லை. அவருடைய மஹிமை எல்லையற்றது. பரதன் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரம் என்றே வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் அவருடைய சரித்திரம், அவரை ஒரு ஸாதுக்களில் தலைசிறந்தவராகவும், பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு யஜமான பக்தராகவும். மஹாத்மாவாகவும், பற்றற்றவராகவும், பக்தியை முதன்மையாகக் கொண்ட கர்மயோகியாகவும் நிரூபிக்கிறது. பரதன் தர்மத்தையும், நீதியையும் அறிந்தவர்; நற்குணங்கள் நிறைந்தவர்; தியாகசீலர்; புலனடக்கமும், நன்னடத்தையும் உள்ளவர். அன்பு, பணிவு இவற்றின் உருவமாய்த் திகழ்ந்தார். சிரத்தை கொண்டவராகவும், அறிவாளியாகவும் விளங்கினார். வைராக்யம், ஸத்யம், தவம், பொறை, சகிப்பு, கருணை, வாத்ஸல்யம், தீரம், வீரம், ஆழம், எளிமை, சாந்தம், இனிமை, தற்பெருமை கொள்ளாமை, எல்லோரையும் நண்பராக்கிக் கொள்ளும் தன்மை, முதலிய குணங்கள் இவரிடத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்து காணப் படுகின்றன. ஸஹோதர பாசத்துக்கு இவர் உயிருள்ள உருவே போன்றவர்.
பரதனுக்குத் தந்தையிடமிருந்த பக்தி
திருமணம் முடிந்த உடனேயே பரதன் தம்முடைய அம்மானுடன் பாட்டனார் வீட்டுக்குப் போய்விட்டார். அதனால் ராமாயணத்தில் பரதன் பிதாவிடம் கொண்டிருந்த பக்தியைக் காட்டும் வர்ணனை சிறப்பாக இடம் பெறவில்லை. ஆனால் பாட்டனார் வீட்டில் இருந்தபோது ஒருநாள் அவர் நண்பர்களின் கூட்டத்தின் இடையே தாம் கண்ட கெட்ட கனவைப் பற்றிச் சொல்லித் தம்முடைய தகப்பனார் விஷயமான துயரம், பிறகு அயோத்தி வந்தபிறகு அன்னையிடம் தந்தையின் சொர்க்கவாசம் பற்றிய செய்தியைக் கேட்டபோது துயரால் அவருக்கு ஏற்பட்டநிலை. அப்போது தந்தையைக் குறித்து இவர் அழுது புலம்பிய முறை. - இவற்றின் மூலம் அவருக்குத் தந்தையிடம் இருந்த சிரத்தையுடன் கூடிய உண்மையான அன்பு நன்கு தெரிய வருகிறது. அவரிடம் 'தைரியமாக இரு' என்று அன்னை சொன்னபோது பரதன் சொல்கிறார்:
அபிஷேக்ஷ்யதி ராமம் து ராஜா யஜ்ஞம் நு யக்ஷ்யதே
இத்யஹம் க்ருதஸங்கல்போ ஹ்ருஷ்டோ யாத்ராமயாஸிஷம்
ததி தம் ஹ்யந்யதபூதம் வ்யவதீர்ணம் மநோ மம
பிதரம் யோ ந பயாமி நித்யம் ப்ரியஹிதே ரதம்
(வால்மீகி ராமாயணம் 2/72/27-28)
'பேரரசர் ஸ்ரீராமனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைப்பார். முடிசூட்டி வைப்பார்; வேள்விக்கான தீக்ஷை ஏற்பார் என்று அல்லவா நான் எண்ணியிருந்தேன். நான் அங்கிருந்து புறப்படும் போது இந்த நம்பிக்கையின் காரணமாகவே மகிழ்ச்சியுடன் இருந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தால் எல்லாம் விபரீதமாக அன்றோ இருக்கிறது. என் தந்தை எப்போதுமே என்னிடம் அன்பு கொண்டவராகவும், நன்மை செய்பவராகவும் இருந்தார். அவர் இனிக்காணக் கிடைக்கமாட்டார் என்று ஆகிவிட்டதும் என் உள்ளம் உடைந்துபோய் விட்டது'.
ஸஹோதர பாசம்
இவ்விதமாகத் தந்தையை நினைத்து வருந்தும்போதே பரதனது உள்ளத்தில் இராமபிரானிடம் இருந்த அன்பு பொங்கி வருகிறது.
யோ மே ப் ராதா பிதா பந்துர்யஸ்ய தாஸோஸ்மி ஸம்மத:
தஸ்ய மாம் ஸ்ஸீக் ரமாக் யாஹி ராமஸ்யாக்லிஷ்டகர்மண:
பிதா ஹி பவதி ஜ்யேஷ்டே தர்மமார்யஸ்ய ஜாநத:
தஸ்ய பாதௌ க்ரஹீஷ்யாமி ஸ ஹீத நீம் க திர்மம
(வால்மீகி ராமாயணம் 2/72/32-33)
‘எனக்கு அண்ணனாகவும், தந்தையாகவும், உறவினராகவும் எவர் உள்ளாரோ, எவருக்கு நான் மிகவும் பிரியமான தொண்டனோ. எவர் எப்போதும் புனிதமான செயல்களையே புரிவாரோ, அப்படிப்பட்ட ஸ்ரீராமனிடம், நான் வந்த செய்தியை உடனே சொல்லுங்கள்; தர்மம் அறிந்த சிறந்த மனிதர்களுக்கு, தமையன் தந்தைக்கு நிகரானவர் அன்றோ? நான் அவருடைய திருவடிகளில் வணங்குவேன். இனி அவர்தான் எனக்குப் புகலிடம்' என அவர் மொழிகிறார்.
பரதன் இவ்வாறு கூறிய பின்னர் கைகேயி அவருக்கு நடந்ததை எல்லாம் எடுத்துக்கூறி அரசை ஏற்கும்படி சொன்னார். கைகேயியினால் ஸஹோதரர்கள் காட்டுக்குப் போனதைக் கேட்ட பரதன் பெருந்துயரால் வேதனை நிறைந்த உள்ளத்தவராகித் தாயைக் கடுமையான சொற்களால் சாடுகிறார்.
லுப் தயா விதி,தோ மந்யே ந தேஹம் ராக வம் யதா |
ததா ஹ்யநாதோ ராஜ்யார்தம் த்வயாநீதோ மஹாநயம்!!
(வால்மீகி ராமாயணம்2/73/13)
'நீ ஆசை வசப்பட்டதால், ஸ்ரீராமசந்திரனிடம் எனக்கு எவ்வித உணர்வு இருக்கிறது என்பதை இதுவரை அறியாமல் இருந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். அதனால்தான் அரசைப் பெறும் பொருட்டு இவ்வளவு பெரிய தீங்கை நீ செய்துவிட்டாய். எனத் தம்முடைய தாயை நிந்திக்கிறார்.
இதற்கு மேலும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி பரதன் தாயைப் பற்றிப் பல சொன்னார். அதற்கு பிறகு, தம்மை பார்க்க வந்துகொண்டிருந்த கோசலையை வழியிலேயே சந்தித்தார். அவர் மடியில் விழுந்து அழத்தொடங்கினார். எவ்வளவோ சபதங்கள் கூறி, ஸ்ரீராமன் காட்டுக்குப் போவதற்கு தனக்கு ஒப்புதல் இல்லை என்று நம்பிக்கை ஊட்டினார்.
இதற்குப் பிறகு, வஸிஷ்டமுனிவரின் ஆணையின்படி தசரதருக்கு ஈமச்சடங்குகள் தொடங்குகின்றன. அச்சமயம் அரசனுடைய சடலத்தைப் பார்த்து. பரதன் அழுது கொண்டே புலம்புகிறார்.
கிம் தே வ்யவஸிதம் ராஜந் ப்ரோஷிதே மய்யநாக தே
விவாஸ்ய ராமம் தார்மஜ்ஞம் லக்ஷ்மணம் ச மஹாபலம்!
(வால்மீகி ராமாயணம்2/76/6)
'அரசே! நான் வெளியூர் சென்றிருந்தேன். உங்களிடம் வந்துசேரக்கூட முடியவில்லை. அதற்கு முன்பே, நீங்கள் தர்மம் அறிந்த ஸ்ரீராமசந்திரனையும் மிகவும் வலிமை வாய்ந்த லக்ஷ்மணனையும் காட்டுக்கு அனுப்பிவிட்டீர்களே, நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்".
பரதன் அழுவதைக் கண்ட வஸிஷ்ட மாமுனிவர் அவருக்கு மீண்டும் ஸமாதானம் கூறுகிறார். அதற்குப்பின் விதிமுறைப்படி தசரதருடைய ஈமச்சடங்குகள் நடந்தேறின. அரண்மனைக்குத் திரும்பிவந்த பிறகு பரதன் பத்து நாட்கள் வரை பூமியிலேயே படுத்துக்கொண்டு பெருந்துயரத்துடன் நாட்களைக் கழித்தார்.
சிரார்த்தம் முதலியவை முடிந்தபிறகு அரசவையில் வஸிஷ்ட முனிவரும் மற்ற அவை உறுப்பினரும் பரதனுக்கு அறிவுறுத்தி அவரை அரசை ஏற்கும்படி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். அப்போது பரதன் கூறினார்: 'இந்த அரசு, நான் - இரண்டுமே இராமபிரானுக்குச் சொந்தம். நீங்கள் எனக்கு தர்மத்தை எடுத்துக்கூறுங்கள். இராமபிரான் எவ்வகையிலும் எனக்குப் பெரியவர்.
ராமமேவாநுக ச்சாமி ஸ ராஜா த் விபதாம் வர:
த்ரயாணாமபி லோகாநாம் ராக வோ ராஜ்யமர்ஹதி
யதி த்வார்யம் ந பக்ஷ்யாமி விநிவர்தயிதும் வநாத்
வநே தத்ரைவ வத்ஸ்யாமி யத ர்யோ லக்ஷ்மணஸ்தத|
ஸர்வோபாயம் து வர்திஷ்யே விநிவர்தயிதும் பலாத்
ஸமமார்யமிஸ்ராணாம் ஸாதூ நாம் கு ணவர்திநாம்
(வால்மீகி ராமாயணம் 2/82/16,18,19)
'புருஹோத்தமனான ஸ்ரீரகுநாதன் இந்த அயோத்தி என்ன. மூன்று உலகங்களுக்குமே அரசனாகத் தகுதி வாய்ந்தவர். நான் அவரையே பின்பற்றி நடப்பேன். உங்களைப் போன்ற குணசாலிகளான நல்லோருடைய முன்னிலையிலேயே அவரைப் பிடிவாதமாக அழைத்து வர எல்லா உபாயங்களையும், மேற் கொள்வேன். அப்படியும் இராமபிரானைக் காட்டிலிருந்து திரும்ப அழைத்துவர இயலாதவனாக ஆகிவிட்டேனானால் என்னுடைய சிறந்த தம்பியான லக்ஷ்மணன் காட்டில் இருப்பதுபோல், நானும் இருந்துவிடுவேன்' என்றார். ஸஹோதர அன்பில் தோய்ந்த பரதனுடைய சொற்களைக் கேட்ட அவையினர் அனைவருடைய கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.
ஸ்ரீராமனைத் திருப்பி அழைத்துவர பரதன் பெரும் படையுடனும், மக்கள் வெள்ளத்துடனும் சித்ரகூடம் செல்லும் பொழுது வழியில் வேடர்களின் அரசரான குஹனை சந்திக்கிறார். இவருடன் நால்வகைப் படையும் வருவதைக் கண்ட குஹனது மனத்தில் சந்தேஹம் ஏற்படுகிறது. அதை வெளிப்படுத்தி விடுகிறார். அப்போது பரதன், அவரிடம்
மா பூத் ஸ காலோ யத் கஷ்டம் ந மாம் ஸங்கிதுமர்ஹஸி
ராக வ: ஸ ஹி மே ப் ராதா ஜ்யேஷ்ட பித்ருஸமோ மத:
தம் நிவர்தயிதும் யாமி காகுத்ஸ்த,ம் வநவாஸிநம்
(வால்மீகி ராமாயணம் 2/85/9-10)
வேடுவ அரசே! இப்படித் துயரம் தரும் நேரம் வரவே வேண்டாம்! நீ என் மேல் ஸந்தேஹம் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ரகுகுலரத்தினமான ஸ்ரீராமன் என் மூத்த ஸஹோதரன். அவரை நான் தந்தைக்கு நிகராகவே கருதுகி காட்டில் வசிக்கும் ஸ்ரீராமனைக் காட்டிலிருந்து திரும்ப அழைத்துவரவே நான் சென்று கொண்டிருக்கிறேன்' என்று குஹனது ஐயத்தை நீக்குகிறார். அவருடைய வார்த்தையைக் கேட்ட வேடர் தலைவனுடைய முகம் மலர்ந்தது.
தந்யஸ்த்வம் ந த்வயா துல்யம் பஸ்யாமி ஜக தீதலே
அயத்நாத ாக தம் ராஜ்யம் யஸ்த்வம் த்யக்துமிஹேச்ச ஸி
(வால்மீகி ராமாயணம்2/85/12)
'முயற்சியில்லாமலே கிடைத்த அரசை வேண்டாம் என்று விட்டுவிட விரும்பும் நீங்கள் பாராட்டுக்குரியவர். எனவே இந்த பூமண்டலத்தில் உங்களைப் போல் வேறு ஒருவரும் இருப்பதாக என எனக்குத் தோன்றவில்லை. மகிழ்ச்சி ததும்ப குஹன் பரதனைப் புகழ்கிறார்.
இதே ரீதியில் இருவருக்குமிடையே நீண்ட நேரம் உரையாடல் நிகழ்ந்தது. ஸ்ரீராமனது பிரிவில் அவரைப் பற்றியே எண்ணியெண்ணித் துயரத் தீயில் வாடியதால் பரதன் திடீர் என்று மூர்ச்சை அடைந்து விழுந்துவிட்டார். அருகில் அமர்ந்திருந்த சத்ருக்னனும் அவரைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து நினைவிழந்தார். இதைக் கண்ட குஹன் மயங்கி நின்றார். சற்று நேரம் கழித்து,
ப்ராதா மே க்வாவஸத், ராத்ரௌ க்வ ஸீதா க்வ ச லக்ஷ்மண
அஸ்வபச்ச யநே கஸ்மிந் கிம் புக்த்வா குஹ பஸம்ஸ மே
(வால்மீகி ராமாயணம் 2/87/13)
"வேடர்களின் அரசே! அன்று இரவு என் அண்ணன் ஸ்ரீராமன் ஸீதாதேவியுடனும், லக்ஷ்மணனுடனும் எங்கே தங்கியிருந்தார்? என்ன அருந்தினார்? எங்கு சயனித்தார்? எல்லாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வாயாக!" என குஹனிடம் வினவுகிறார்.
பரதன் இவ்விதம் கேட்டவுடன் குஹன் மன மகிழ்ச்சியடைந்தார். நடந்ததை எல்லாம் விரிவாக அப்படியே எடுத்துக்கூறினார். அவர் அங்கே இருந்த இலுப்பை மரத்தையும். தர்ப்பைப் படுக்கையையும் காட்டினார். அதன் மேல்தான் அன்று ஸ்ரீராமனும், ஸீதாதேவியும் உறங்கினர். அந்த இடத்தைப் பார்த்த பரதனது நிலை விவரிக்கவொண்ணாததாக ஆயிற்று. பலவாறாகப் புலம்பத் தொடங்கிவிட்டார்.
ஹா ஹதோஸ்மி ந்ருபம்ஸோஸ்மி யத் ஸப ர்ய: க்ருதே மம
ஈத் ருஸீம் ராக,வ: ஸய்யாமதி போதே ஹ்யநாத,வத்!!
ஸார்வபெ ளமகுலே ஜாத: ஸர்வலோகஸுகவஹ:
ஸர்வப்ரியகரஸ்த்யக்த்வா ராஜ்யம் ப்ரியமநுத்தமம்
கத மிந்தீ வரஸ்யாமோ ரக்தாக்ஷ: ப்ரியதர்ஸந:
ஸுக,பாகீநது:கார்ஹ: பயிதோ புவி புவி ராக வ:
த,ந்ய: கலு மஹாபாகோ லக்ஷ்மண: ஸுபலக்ஷண:
ப்ராதரம் விஷமே காலே யோ ராமமநுவர்ததே ராமமநுவர்ததே!
(வால்மீகி ராமாயணம் 2/88/17-20)
'ஐயோ! நான் கெட்டேன்! நான் மிகவும் கொடியவன். அதனால் அல்லவா என் ஸ்ரீரகுநாதன் கற்புக்கரசியான ஸீதாதேவியுடன் இப்படிப்பட்ட படுக்கையில் படுத்து உறங்கவேண்டி நேரிட்டது. சக்ரவர்த்திகளின் குலத்தில் பிறந்தவர்; எல்லா மக்களுக்கும் ஸுகம் அளிப்பவர்; எல்லோருக்கும் பிரியமானதைச் செய்பவர்; நீலத் தாமரை போன்ற நிறம், செம்மை நிறக்கண்கள் கொண்டவர்; எல்லாவிதங்களிலும் இன்பம் துய்க்கத்தக்கவர்; துயருறத்தகாதவர். இப்படிப்பட்ட, காட்சிக்கு இனிய அந்த ஸ்ரீரகுநாதன் மிகவும் தலைசிறந்த அரசைத் துறந்துவிட்டு, எப்படி பூமியின் மேல் தூங்கினார்? நல்லிலக்கணங்கள் கொண்ட லக்ஷ்மணன் அன்றோ பாராட்டுக்குரியவர். பெரும்பேறு பெற்றவர். சங்கடமான சமயத்தில் அவர் அண்ணன் இராமபிரானுடன் தங்கியிருந்து அவருக்கு உதவி புரிகிறார். இதேவிதமாக பரதன் அழுது புலம்பினார்.
அடுத்து பரதன் பரத்வாஜர் ஆசிரமத்தை அடைகிறார். அங்கே மஹரிஷி, பரதனிடம் நலம் விசாரித்தபிறகு, பரதனின் குற்றமற்றவர்களும், அறமே உள்ளத்தை நோகச் செய்யக்கூடிய ஒரு கேள்வியைக் கேட்டு விடுகிறார் - 'பரதா! நீ காட்டுக்கு வருவதற்கு என்ன காரணம்? வடிவெடுத்தவர்களுமான ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் தீங்கு ஏதும் இழைக்க விரும்பவில்லையே!' இதைக் கேட்டதும் பரதனுடைய கண்களில் நீர் நிரம்பிவிட்டது. துயரத்தால், நடுங்கும் குரலில், தடுமாறும் சொற்களில் சொன்னார்:
ஹதோஸ்மி யதி,மாமேவம் ப.க வாநபி மந்யதே மத்தோ
ந தோஷமாபங்கே மைவம் மாமநுபஸாதி, ஹி |
ந சைததி ஷ்டம் மாதா மே யத வோசந்மதந்தரே !
நாஹமேதேந துஷ்டஞ்ச ந தத் வசநமாத,தே,!!
அஹம் து தம் நரவ்யாக் ரமுபயாத: ப்ரஸாத க:
ப்ரதிநேதுமயோத் யாயாம் பாதெ ள சாஸ்யாபி வந்தி தும்
தம் மாமேவங்க தம் மத்வா ப்ரஸாதாம் கர்துமர்ஹஸி
மே ப க வந் ராம: க்வ ஸம்ப்ரதி மஹீபதி:
(வால்மீகி ராமாயணம் 2/90/15-18)
'முனிவரே! நான் ஒரு குற்றமும் இழைக்கவில்லை. அப்படியிருந்தும் நீங்களே என்னைக் குற்றவாளியாக எண்ணு கிறீர்கள் என்றால் நான் எல்லாவிதங்களிலும் பாவப்பட்டவன். நீங்கள் இவ்வளவு கொடுமையான சொற்களைச் சொல்லாதீர்கள். நான் இல்லாதபோது என் தாய் சொன்னது, செய்தது எதிலும் எனக்கு விருப்பம் இல்லை. நடந்ததில் எனக்குச் சற்றேனும் மகிழ்ச்சி இல்லை. அவருடைய சொல்லை நான் ஏற்றுக் கொள்ளவுமில்லை. அந்த மாமுனிவர் ஸ்ரீராமனை திருப்திப்படுத்தி அயோத்திக்குத் திருப்பி அழைத்துச் செல்லவும், அவருடைய திருவடிகளை வணங்கிப் போற்றவுமே, நான் காட்டுக்கு வந்திருக்கிறேன். எனவே இவ்வாறு வந்திருக்கிற என்னைப் புரிந்து கொண்டு என்மேல் கருணை காட்டுங்கள். அரசர்க்கரசரான இராமபிரான் எங்கு உள்ளார் என்று என்னிடம் சொல்லுங்கள்'.
இதைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் மனமகிழ்ச்சி கொண்டு பரதனைப் புகழ்ந்தவாறே சொன்னார்:
ஜாநே சைதந்மந:ஸ்தம் தேத் ருடீ கரணமஸ்த்விதி |
அப்ருச்சம் த்வாம் தவாத்யர்த ம் கீர்திம் ஸமபி வார்த யந்
(வால்மீகி ராமாயணம் 2/90/21)
'பரதா! உன் மனதை நான் அறிவேன். இருந்தும் அதை உறுதி செய்துகொள்வதற்காகவும் உன் புகழை மேலும் பெருக்குவதற்காகவுமே நான் உன்னிடம் இவ்வாறு கேட்டேன்
இதற்குப் பிறகு மேலும் பலவிதமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டனர். பரத்வாஜர் வற்புறுத்தியதால் முனிவர் அளித்த விருந்தை பரதன் ஏற்க நேர்ந்தது. அம்முனிவர்க்கரசர் பரதனுக்கும், அவருடைய படை மற்றும் பரிவாரங்களுக்கும் சீரிய முறையில் விருந்தளித்தார். அன்று இரவு மிகவும் அற்புதமான முறையில் ஆனந்தமாகக் கழிந்தது. அந்தக் கட்டத்தில்தான் பின்வரும் செய்தியும் வருகிறது:
தத்ர ராஜாஸநம் திவ்யம் வ்யஜநம் சத்ரமேவ ச
பரதோ மந்த்ரிபி : ஸார்த மப் யவர்த்த ராஜவத்
ஆஸநம் பூஜயாமாஸ் ராமாயாபி ப்ரணம்ய
வாலவ்யஜநமாத ாய ந்யஷீத ஸசிவாஸநே !!
(வால்மீகி ராமாயணம் 2/91/38-39)
(அங்கே முனிவர் தம் ஒரு யோக பலத்தால் அரண்மனையைப் படைத்திருந்தார்.) பரதன் அந்த அரண்மனையில் தெய்விகமான அரசர்க்குரிய அரியணை, குடை, சாமரம் முதலியவற்றைப் பார்த்தார். அவற்றையே இராமபிரானாகக் கருதி அமைச்சர்களுடன் கூடச் சேர்ந்து, அவற்றுக்கு மரியாதை செய்தார். இராமபிரானை வணங்கி அவற்றுக்குப் பூஜை செய்து, தாமே சாமரம் எடுத்து வீசி அமைச்சருக்குரிய இருக்கையில் அமர்ந்தார். பாருங்கள். எவ்வளவு உயர்ந்த பாவனை, பக்தி! எவ்வளவு புனிதமான உணர்வு! தற்பெருமை நீங்கிய எத்துணை எளிமை! தியாகம்!
நாளை . . .
பரதன் சித்ரகூடத்தை நெருங்கினார்.
தொடரும் . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment