சூத கோஸ்வாமி கூறினார்.மா முனிவர்களே, உலகில் அனைத்து பூஜைகளிலும் சிறந்தது அதிதி பூஜை. அளவற்ற நற்பலனைத் தரக் கூடியது. தன்னிடமுள்ளவற்றால், வந்த அதிதியை திருப்திப்படுத்துகிறவர்கள் உத்தமலோகங்களை அடைவார்கள். மகனீஸ்யர்களாவார்கள். தன் வீட்டுக்கு வந்தவர்களை நாராயண ஸ்வரூபமாக நினைத்து பூஜிப்பவர்கள் மகா நரகங்களை வென்று திவ்ய வைகுண்டத்திற்குச் செல்வார்கள். அதிதி பூஜை செய்து புண்ணிய லோகங்களை அடைந்தவர்கள் பலர். அதற்கு உதாரணமாக ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள்
முன்பு கங்கை நதிக்கரையில் ஒரு பிராமணக் குடும்பம் வாழ்ந்து வந்தது. தாய், தந்தை, மகன், மருமகள் என்னும் நால்வர்தான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள். இவர்கள் யாரிடமும் யாசகம் கேளாமல் வயல்களில் இரைந்து கிடக்கும் ஈரமான தானியமணிகளை சேகரித்துக் கொண்டு வந்து காயவைத்து, இடித்து, நான்கு உருண்டைகளாக்கி நால்வரும் சாப்பிட்டு நாட்களை கழித்து வந்தனர். அவர்கள் மகா பக்தர்கள்.
அவர்களின் இந்த சேவையால் மகிழ்ச்சியடைந்த பகவான் ஶ்ரீமன் நாராயணன் அவர்களிடம் லீலை புரிய எண்ணி ஒரு கிழப் பிராமணர் உருவத்தில் பசியால் துடிப்பவரைப் போல் கண்களை மேல் சொருகிக் கொள்ள, வாயால் மூச்சு விட்டபடி தட்டுத்தடுமாறிக் கொண்டு வந்து அவர்கள் முன் விழுந்தார். அவரைக் கண்டு பரிதாபம் கொண்டு அதிதியை ஆதரிக்க எண்ணிய வீட்டின் எஜமானி தான் பத்து நாட்களாக உணவு இல்லாமல் பட்டினி கிடந்த போதிலும் பரவாயில்லையென்று நினைத்துத் தன் பங்கான ஒரு உருண்டையை அவருக்குக் கொடுத்தாள். அதைத் சாப்பிட்ட பிரமாணன் இன்னும் வேண்டும் என்பது போல் பார்த்தார். உடனே மருமகள் தன் பங்கையும் தருகிறேன் என்றாள். பத்து நாட்களாக உணவில்லாமல் இருந்தும் இன்று எல்லோரும் தத்தம் பங்கு உணவை கொடுத்துவிட்டதைப் பார்த்து அந்த விட்டு எஜமானன் மிகவும் வருத்தப்பட்டான்.
ஆயினும் மருமகளுக்கும் அது தான் தர்மமென்று கூறி அந்த அதிதிக்கு தன் பங்கு உருண்டையையும் தந்து பூஜித்தாள். இப்படி தியாகம் செய்து அதிதி பூஜை செய்த அந்தக் குடும்பத்தினர் நடுவில் அந்த வயதான பிராமணர் நாராயணமூர்த்தியாகத் தோன்றி, "உங்கள் அதிதி பூஜையைக் கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்காக என் விமானம் சித்தமாக உள்ளது. அனைவரும் என் உலகிற்கு வாருங்கள்" என்று கூறி அவர்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
இவ்வாறு அதிதி பூஜையின் மகிமையைப் பற்றி சூத முனிவர் வர்ணித்து கூறினார்.
பத்மபுராணம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment