பகவத்கீதையில் (9.29) பகவான் கூறுகிறார்:
ஸமோ ‘ஹம் ஸர்வ - பூதேஷு ந மே த்வேஷ்யோ ‘ஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாபி அஹம்
“நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ அல்லது பட்சபாதம் காட்டுவதோ இல்லை. அனைவரிடமும் நான் சமமாகவே நடந்து கொள்கிறேன். ஆனால் பக்தியுடன் எனக்குச் சேவை செய்பவன் யாராயினும் அவன் என் நண்பனாவான். அவன் என்னில் இருக்கிறான், நானும் அவனிடம் ஒரு நண்பனாக இருக்கிறேன்.” பரமபுருஷ பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் நிச்சயமாக சமமாகத்தான் இருக்கிறார். ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களில் முழுமையாக சரணடையும் பக்தரொருவர் பக்தரல்லாதவரிடமிருந்து வேறுபட்டவராவார். அதாவது, பகவானிடமிருந்து சமமான ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ அனைவரும் அவரது திருவடிகளில் புகலிடம் கொள்ளலாம். ஆனால் பக்தரல்லாதவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதனால் ஜட சக்தியால் உண்டாக்கப்பட்ட விளைவுகளால் அவர்கள் துன்புறுகின்றனர். ஒரு சாதாரண உதாரணத்தால், இவ்வுண்மையை நம்மால் புரிந்துகொள் முடியும். அரசர் அல்லது அரசாங்கம் எல்லாப் பிரஜைகளிடமும் சமமாக இருக்கிறது. ஆகவே, பிரஜை ஒருவர் அரசாங்கத்திடமிருந்து விசேஷ ஆதரவுகளைப் பெறும் தகுதி படைத்தவராக இருந்தால் அவருக்கு அத்தகைய ஆதரவுகள் அளிக்கப்படுகின்றன. அரசாங்கம் பாரபட்சம் கொண்டுள்ளது என்பதை இது குறிக்காது. அதிகாரியிடமிருந்து ஆதரவைப் பெறும் வழியை அறிந்திருப்பவரால் அதைப் பெறமுடியும்.அறியாதவர்கள் இத்தகைய ஆதரவை அலட்சியப்படுத்துவதால், இதை அவர்கள் பெறுவதில்லை. இரு வகையான மனிதர்கள் உள்ளனர் - அசுரர்கள் மற்றும் தேவர்கள். தேவர்கள் பகவானின் நிலையை நன்கு அறிந்திருப்பதால், அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றனர். ஆனால் பகவானின் உயர்வை அசுரர்கள் அறிந்திருந்தாலும், வேண்டுமென்றே பகவானின் அதிகாரத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். ஆகவே, ஜீவராசியின் மனோபாவத்திற்கேற்ப பகவான் வேறுபாடுகளைக் காண்கிறார். இல்லையெனில் அனைவருக்கும் அவர் சமமானவர்தான். தன்னிடம் புகலிடம் கொள்பவரின் விருப்பங்களை பகவான் ஒரு கற்பக விருட்சத்தைப் போல் நிறைவேற்றுகிறார். ஆனால் புகலிடம் கொள்ளாதவர் சரணடைந்துள்ள ஆத்மாவிலிருந்து வேறுபட்டவராவார். பகவானின் மலர்ப்பாதங்களில் புகலிடம் கொள்பவன் ஓர் அசுரனாகவோ அல்லது பக்தனாகவோ இருந்தாலும் பகவான் அவருக்கு ஆதரவளிக்கிறார்.
ஶ்ரீமத் பாகவதம் 8.23.8 / பொருளுரை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment