சைதன்ய ஸம்ப்ரதாயத்தின் ப்ரதான ஸ்தம்பம் போன்றவரும், கௌர லீலைகளின் முதல் ப்ரவர்த்தகரும் ஆகிய அத்வைத ஆசார்யரியர் வயதினாலும், கல்வியினாலும், அறிவினாலும் முதியவராக இருந்த போதிலும், பாலகனான ஸ்ரீ மஹாப்ரபுவின் பாததூளியை சிரோபூஷணமாகக் கொண்டவர்.பகவான் ஶ்ரீ சைதன்ய மாஹாபிரபுவின் அவதாரத்துக்கு முன்னரே தோன்றி , கௌர லீலைகளுக்கு வழி வகுத்துத்தானும் பல லீலைகள் செய்து மகிழ்ந்தவர். இவரும் ஷில்ஹட் ஜில்லாவில் இருக்கும் நவக்ராமம் என்னும் நகரின் ஒரு சிறு கிராமவாசியே! அந்நாட்களில் பல சிற்றரசுகள் இருந்தன. அதில் லாவுட் என்னும் சிற்றரசை பரம தார்மீகமான ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ சபையில் அத்வைத ஆசார்யரின் தந்தை 'பண்டித குபேர தர்க்க பஞ்சானன்', ராஜ பண்டிதராக இருந்து வந்தார்.
தர்க்கபஞ்சானன் சிறந்த நியாயாதிபதி. அவர் புகழ் வாய்ந்த வித்வான். அத்துடன் நல்ல செல்வந்தர். குழந்தை இல்லாத குறையினால், அவரும் அவரது மனைவி லாபாதேவியும் மிகுந்த வருத்தமுற்று இருந்தனர் அவரகளுக்குப் பல குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. இதனால் அவர்கள் மிகவும் வருத்தமும் வேதனையடைந்தனர், நித்தமும் பாகவானிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க பகவான் அருளால் லாபாதேவி கருவுற்று பிள்ளை பெற்றெடுத்தாள், பிறந்த பிள்ளைக்கு கமலாக்ஷன் என்று பெற்றோர் பெயரிட்டனர். இந்த கமலாஷனே பின்னால அத்வைத ஆச்சாரியாராக ப்ரஸித்தமானார்.
குழந்தைமுதலே கமலாக்ஷன் புத்திமானாகவும், வினயமுடையவராகவும், பரமபக்தராகவும் திகழ்ந்தார். அந்நாட்களில் வங்காளத்தில் சாக்ததர்மமும், வாமமார்க்கமும் ப்ரஸித்தமாயிருந்தன. தர்மத்தின் பெயரால் வாயற்ற பிராணிகளைக் கொல்லுவது வித்வான்களுக்கும், பட்டாச்சாரிகளுக்கும் கூட சிறந்ததாகக் காணப்பட்டிருக்கிறது.
கமலாக்ஷன் இவைகளைக் கண்டு மனதில் வருந்தி இவர்கள் நற்கதியடைந்து அக்ஞானத்தை விட்டு தர்மத்தின் பெயரால் பிராணிவதை செய்வதை நிறுத்த மாட்டார்களா என்று பகவானிடம் ப்ரார்த்தித்து வந்தார். யாரிடமாக இருந்தாலும் தனக்கு உண்மை எனத் தோன்றுவதை தயக்கமின்றி எடுத்துரைக்கும் உயர்ந்த துணிவு குழந்தை முதலே இவரிடம் பிரகாசித்தது.
ஒரு முறை ராஜ்யத்தில் விசேஷ காளி பூஜை நடந்தது. அதற்கு கமலாக்ஷரும் சென்றிருந்தார். நூற்றுக்கணக்கான ஆடுகளும். எருதுகளும் பலியிடப்பட்டதைக் கண்டார். பிரஸித்தமான பாடகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கமலாக்ஷரோ காளி மண்டபத்திற்குச்சென்றும் காளியை நமஸ்கரிக்காமல் அமர்ந்தார். திவ்யஸிம்மன் என்னும் அந்த அரசனுக்கு இச்செய்கை மிகுந்த வியப்பையளிக்கவும், உயர்ந்த ராஜ பண்டிதரின் குமாரன் அதர்மத்தில் ஈடுபடுவதைக் கண்டு சிறிது சினத்துடன் ''கமலாக்ஷா! நீ ஏன் தேவியை நமஸ்கரிக்காமல் அமர்ந்தாய்?" என்று கேட்டான்.
சிறுவனான கமலாக்ஷரோ ரோஷத்துடன் பதில் சொல்லுகிறார். "தேவியை லோகமாதா, எல்லாப் பிராணிகளும் அவளது குழந்தைகளே. தன்னுடைய பிள்ளைகளையே உண்ணும் தாய் தாயல்ல, ராக்ஷஸி; பிள்ளை, கெட்டவனாக இருந்தாலும் தாய் கெட்டவளாக ஆக முடியாது. ஆனந்த மயனான பகவானே பூஜைகளுக்கும், வந்தனைக்கும் உரியவன். அவரை வணங்குவதால் அனைவரையும் வணங்குவதாக ஆகிறது. நீங்களெல்லாம் தேவி தேவர்களைச் சாக்கிட்டுக் கொண்டு உங்கள்விஷய வாஸனைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளுகிறீர்கள்.''
சிறுவனின் சொற்பெருக்கைக் கண்டு அரசன் பேச்சற்று நிற்க, கமலாக்ஷனின் தந்தை அரசன் பக்ஷத்தில் மைந்தனிடம், "எல்லா தேவதைகளும் நாராயணின் ரூபமே; எனவே தேவியை அவமதித்தால் மஹாபாபம். அப்படிச் செய்யக் கூடாது" என்றார். இதற்கும் கமலாக்ஷன் பகவான் ஜனார்தனனின் பூஜையிலேயே எல்லா பூஜையும் அடங்கி விடுகிறது. ப்ராணிகள் ஹிம்ஸிக்கப்படும் இடமும் தேவஸ்தானமல்ல. எனவே அந்த பூஜையும் தேவ பூஜையல்ல என்றார்.
யாவரும் சிறுவனின் இந்த ஒப்பற்ற வார்த்தகைளைக் கேட்டு வியந்து பாராட்டினர். இவ்வாறு சின்னஞ்சிறு வயதிலேயே தைரியம், தயை, வைஷ்ணதுவம் இவைகளால் நன்கு பிரகாசித்தார்.
பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் தந்தையை விட்டு வித்யாப்யாஸத்திற்காக கமலாக்ஷன் சாந்திபூர் வந்தார். இங்கு தங்கி நியாய வேத வேதாந்தங்களில் விசேஷ பயிற்சி பெற்றார். பெற்றோரும் இவருடனே சாந்திபூருக்கே வந்து விட்டனர். இவரும் குறுகிய காலத்திலேயே சிறந்த பண்டிதரானார். சிறிது காலத்திற்குப் பின் பெற்றோர் காலகதியடைந்தனர். இவர் தனது தந்தையின் கடைசி விருப்பத்தின்படி கயைக்குச் சென்று ஸ்ரீ கதாதரனை தர்சித்து பக்தி ச்ரத்தையுடன் பித்ரு சிராத்தமும் செய்தார்.
அத்வைத ஆச்சாரியரின் வம்சம்
🍁🍁🍁🍁🍁🍁🍁
அத்வைத ஆச்சாரியருக்கு இரண்டு துணைவிகள்: சீதா தாகூராணி மற்றும் ஸ்ரீதேவி. சீதா தாகூராணிக்கு அச்சுதானந்தர், கிருஷ்ண தாஸர், கோபாலர், பலராமர், ஸ்வரூபர், ஜகதீஷ மிஸ்ரர் என ஆறு மகன்கள் பிறந்தனர்; ஸ்ரீதேவிக்கு சியாம தாஸர் என்ற ஒரு மகன் பிறந்தார். இவர்களில் அச்சுதானந்தர், கிருஷ்ண தாஸர், கோபாலர் ஆகிய மூவரும் சைதன்ய மஹாபிரபுவின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்கள்.
மாதவேந்திர புரியிடம் தீக்ஷை பெறுதல்
🍁🍁🍁🍁🍁🍁🍁
ஜென்ம முதலே இருந்த பக்தி, வித்யையினாலும், பாவத்தினாலும் மேலும் வளர்ந்து, ஸதா காலமும் உலகின் க்ஷேமத்தைக் குறித்தே இவர் நினைத்துக் கொண்டிருக்கலானார். இயற்கையாகவே இருந்த வைராக்யம் பெற்றோரது மறைவினால் மேலும் திடமாயிற்று. இராமேஸ்வரம், சிவகாஞ்சி, மதுரை முதலிய க்ஷேத்திரங்களுக்கும், பாரதம் முழுவதிலும் உள்ள புண்ணிய தீர்த்தங்களுக்கும் யாத்திரை செய்து மத்வாசார்யரது ஆஸ்ரமத்தை வந்தடைந்தார். அங்கு ஸ்ரீமன் மாதவேந்திரபுரி ஸ்வாமிகள் எழுந்தருளியிருந்தார். ஸந்யாஸிகளில் பக்தி பாவத்தையும், மதுர உபாஸனையையும் முதன் முதல் தோற்றுவித்தவர், இவரே! இவரது பிரஸித்தமான சிஷ்யர்களில் ஸ்ரீ ஈஸ்வரபுரி, ஸ்ரீ பரமானந்தபுரி, ஸ்ரீ ப்ரும்மானந்தபுரி, ஸ்ரீரங்கபுரி, ஸ்ரீ புண்டரீக வித்யாநிதி, ஸ்ரீ ரகுபதி உபாத்யாயர், முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள். ஸ்ரீ ஈச்வரபுரி இவரது அந்தரங்க சிஷ்யர். இவருக்குத்தான் ஸ்ரீ கௌராங்க மஹாப்ரபுவின் தீக்ஷாகுருவாகும் ஸௌபாக்யமும் கிட்டியது. ஸ்ரீ மாதவேந்த்ரபுரி ஸ்ரீ அத்வைதரைக் கண்டு மிக மகிழ்ந்தார். அவரது சீலம், வினயம், பக்தி, தேச முன்னேற்றத்திற்காக உள்ள தவிப்பு இவற்றையெல்லாம் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து, இவருக்கு க்ருஷ்ண மந்திரத்தை உபதேசித்தார். இவரும் தனது குருவிடம் தன் மன வேதனையைத் தெரிவித்துக் கொண்டார். மாதவேந்த்ரபுரியம் "உலகைத் தோற்றுவித்த இறைவனே அதைக் காப்பான். எனவே உலகில் தர்மமும், பக்தியும் க்ஷீணமடைந்ததைக் கண்டு நீ பயப்படாதே! பகவான் விரைவிலேயே விசேஷ ரூபத்தில் அவதரித்து உலகில் பக்தியை நிலை நாட்டுவார் ".என்று கூறி இவரை ஸமாதானப்படுத்தினார்.
அத்வைதரும் குருதேவர் கூறிய ஸமாதானத்தின்படி, உலகைக் காக்க வேண்டிய பகவான் நிச்சயம் அவதரிக்கப் போகிறார், என்னும் ஆதேசம் பெற்று குருதேவன் திருவடிகளை சிரமேல் தாங்கி விடைபெற்றுக் கொண்டு சாந்திப்பூர் திரும்பினார். அத்வைதரது பகவத் பக்தியால் கவரப்பட்ட ஸ்ரீ மாதவேந்த்ரபுரி, கெளட தேசயாத்திரையின் போது, சாந்திபூர் வந்து சில நாட்கள் தங்கினார்.
அத்வைதர் சிறந்த பண்டிதராகவும் ஆச்சாரியராகவும் இருந்ததால் அங்கிருந்த வைஷ்ணவர்களுக்கு ஒரே ஆதாரம் ஆனார். சாஸ்திர வாதம் செய்வதே அந்நாட்களில் பண்டிதர்களின் குணம். வாத விவாதத்தில் எதிர்ப்பவரை தோல்வியுறச் செய்து பாண்டித்யத்தை வெளிப்படுவத்துவதே பண்டிதர்களுக்கு அத்தாட்சி பத்திரம். எனவே சில பண்டிதர்கள் தங்களை 'திக்விஜய்' என்று சொல்லிக் கொண்டு, புகழ்வாய்ந்த பண்டிதர் யார் இருந்தாலும் அவரை வாதுக்கு அழைப்பர். இவ்வாறே ஒருவர் அத்வைதரிடம் வாதத்திற்கு வந்து முடிவில் தோற்று இவரது சிஷ்யரானார். இதனால் மேலும் பெருகிய இவரது புகழைக் கேட்ட ராஜா திவ்யஸிம்ஹனும் இவரைத் தர்சிக்க வந்தான். இவரது பக்தியையும் பாண்டித்யத்தையும், கண்டு சாக்தனான வயோதிக அரசன், இவரது திருவடிகளை வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி ப்ராத்தித்தான். அதன் பின்னர் சிறிது காலத்தில் ராஜ காரியங்களை விட்டு விலகி கிருஷ்ண கீர்த்தனத்திலேயே தன் ஆயுளைக் கழித்தான். இவ்வரசன் அத்வைதரது பாலலீலைகளை ஸம்ஸ்க்ருத பாஷையில் எழுதி வைத்திருக்கின்றான்.
அத்வைதர் கோமள ஹ்ருதயமும் உதார குணமும் க்ருஷ்ண கதையில் ப்ரியம் உள்ளவரும் ஆவர். பேத பாவமும் குறுகிய மனமும் க்ருஷ்ண பக்திக்கு பாதகமானதாகக் கருதுவார். அந்நாளில் பரமபக்தரான ஹரிதாஸ் இவரிடம் வந்தார். அவர் யவனச் சிறுவர். ஆயினும் சிறந்த புத்திசாலியும், க்ருஷ்ணபக்தரும் ஆவார். எனவே ஆசிரியர் இவருக்கு வியாகரணம், கீதை, பாகவதம் எல்லாம் கற்பித்தார். ஹரிதாஸ் ஆசார்யரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் உள்ளவர். ஆசார்யரும் இவரைத் தனது புத்ரனைப் போலவே அன்பு செய்ததுடன் தன் வீட்டிலேயே உணவும் அளித்து வந்தார். பிரஸித்த பண்டிதராய் இருந்தும் முஸல்மான் பையனுக்குத் தன் வீட்டிலேயே உணவு அளித்துக் கொண்டிருப்பதை பிராம்மணப் பண்டிதர்கள் எதிர்த்தனர். அத்வைதர் இதையெல்லாம் சட்டை செய்யவில்லை. ஒரு நாள் தனது தந்தையின் ச்ராத்தத்தில் ஆசார்யர் முதலில் ச்ராத்த அன்னத்தை ஹரிதாஸருக்குத் கொடுத்து விட்டார். இதனால் பண்டிதர்கள் சர்ச்சை எழுப்பினர். ஆனால் அத்வைதரோ "கோடி ப்ராம்மணர்களுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாக ஹரிதாஸுக்கு அன்னமளிப்பதைக் கருதுகிறேன்" என்று கூறிவிட்டார். அந்தணர்கள் விக்கித்து நின்று விட்டனர்.
அந்நாட்களில் பண்டிதர்கள் புஸ்தகப் புழுவாகவும், வீண் வாதிகளாகவுமே இருந்தனர். சாஸ்திரத்தை செயல்படுவது கிடையாது. இப்படிப்பட்டவர்களை சாஸ்திரமே மூர்க்கன் என்கிறது. ஆனால் அத்வைதரோ வேதாந்தியாக சாஸ்த்ரபாடம் படித்தாலும் எப்போதும் ஹரி கீர்த்தனபரராகவும், பகவத் பக்தி பரயணராகவும் இருந்தார்.
அத்வைதரின் அழைப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றுவதற்கு முன் நவதீப பக்தர்கள் அனைவரும் அத்வைத ஆசார்யார் இல்லத்தில் கூடுவது வழக்கம். ஆக இக்கூட்டங்களில் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இவற்றின் அடிப்படையில் நல்லுபதேசம் செய்வார் அத்வைத ஆசார்யர். வேதாந்த ஹேஷ்யம், கர்ம மார்க்கம் போன்றவற்றை சாடுவார். பக்தித் தொண்டின் அதி உன்னதத்தை மட்டுமே நிலைநாட்டுவார். அத்வைத ஆசார்யாரின் இல்லத்தில் கூடும் பக்தர்கள் கிருஷ்ணரைப் பற்றி எப்போதும் ஆர்வத்துடன் பேசுவார்கள், அவரை வணங்குவார்கள், ஹரே க்ருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பார்கள்.
பொதுவாக உலக மக்கள் யாவரும் கிருஷ்ணரைப் பற்றிய நினைப்பே இல்லாமலிருந்ததும், போக வாழ்வில் மூழ்கியிருந்தது அவருக்கு உறுத்தியது. பிறப்பு இறப்பு எனும் சுழலிலிருந்து பகவானின் பக்தித் தொண்டில் ஆர்வமில்லாத எவரும் விடுபட முடியாது என்பதை அத்வைத ஆசார்யர் தயையுடன் எண்ணிப் பார்த்தார். மாயையின் பிடியிலிருந்து எப்படி மக்களை விடுவிப்பது என்று யோசித்துப் பார்த்தார்.
"பகவான் கிருஷ்ணரே நேராக வந்து அவதரித்து பக்தித் தொண்டை சொந்த உதாரணத்தின் மூலம் பிரசாரம் செய்தால் மட்டுமே எல்லோருக்கும் முக்தி கிடைப்பது நிச்சயம். எனவே, நான் பகவானை தூய உள்ளத்துடன் இடைவிடாமல் துதித்து தன்னடகத்துடன் அவரிடம் முறையிடுவேன். பகவானின் திருநாமங்களை உச்சரிக்கின்ற சங்கீர்த்தன இயக்கத்தைத் தொடங்கி வைப்பதற்கு பகவானை என்னால் மசியச் செய்தால் என் பெயரான அத்வைத் என்பது மிகவும் பொருத்தமாயிருக்கும். இந்த யுகத்திற்கு சங்கீர்த்தனமே பொருத்தமான சமயம் . இவ்வாறு அத்வைத ஆசார்யர் எண்ண அலைகளை ஓடவிட்டுப் பார்த்தார். கிருஷ்ணரை எப்படி பக்தியின் மூலம் மகிழ்விப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்த அத்வைத ஆசார்யாருக்கு கீழ்க்கண்ட பாமாலை நினைவிற்கு வந்தது.
"தன் பக்தர்களால் வாஞ்சை கொண்ட பகவான் கிருஷ்ணர் வெறும் துளசி தளத்தையும் கையளவு தண்ணீரையும் அளிக்கின்ற பக்தனுக்கு தன்னையே விற்றுக் கொள்கிறார்". (கௌதம்ய தந்த்ராவில் இந்த வெண்பாவின் உட்பொருளை அத்வைத ஆசார்யர் சிந்தித்துப் பார்த்தார்.
"கிருஷ்ணரால் தனக்கு துளசி தளமும் தண்ணீரும் அளிப்பவன் கடனை திருப்பித் தர இயலாது. என்னிடம் துளசிக்கும் தண்ணீருக்கும் சமமான ஒன்றுமில்லாததால் பக்தனுக்கு என்னையே அளித்து கடனைத் தீர்ப்பேன்" என்று அர்த்தப்படுத்திப் பார்த்தார்.
கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை தியானிக்கையில் கங்கையில் முளைக்கும் துளசி மொட்டுக்களை அவருக்கு அளிப்பதை அத்வைத ஆசார்யர் மேற்கொண்டார். வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் வேளையில் உரத்த குரலில் பகவானிடம் முறையிடுவார். இந்த இடைவிடா அழைப்பு பகவானின் அவதரிக்கச் செய்யத் தூண்டியது.
சாதாரண மக்களின் அழைப்பை ஏற்று பரம புருஷ பகவான் இவ்வுலகில் தோன்றுவதில்லை. அத்வைத ஆச்சாரியர் அழைத்ததன் பெயரிலேயே தான் இவ்வுலகில் தோன்றியதாக சைதன்ய மஹாபிரபு பலமுறை பக்தர்களிடம் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ண பக்தி என்னும் உயர்ந்த பிரேமையை கலி யுக மக்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கு சைதன்ய மஹாபிரபுவே பொருத்தமானவர் என உறுதி கொண்டிருந்த அத்வைத ஆச்சாரியர் கடும் விரதத்தை மேற்கொண்டார்.
அதன் காரணமாக அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கரையோரத்தில் இருக்கும் பாப்லா என்னுமிடத்தில் கல் வடிவில் இருக்கும் சாலக்ராம விக்ரஹத்தை துளசியாலும் கங்கை நீராலும் வழிபட்டார். கிருஷ்ணரின் தாமரை திருப்பாதத்தை தியானித்து, கிருஷ்ணரின் திருநாமத்தை அத்வைத ஆச்சாரியர் கண்ணீருடன் உரக்க கர்ஜித்தபோது, அது விண்ணுலகைப் பிளந்து சென்று வைகுண்டம் வரை கேட்டது.
அத்வைத ஆச்சாரியரின் தொடர் வற்புறுத்தலால், சைதன்ய மஹாபிரபு சச்சிதேவியின் கருவிற்குள் புகுந்து தனது தெய்வீகத் தோற்றத்தை இவ்வுலகில் வெளிப்படுத்தினார். சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகப் பிறப்பை அறிந்த அத்வைத ஆச்சாரியரும் ஹரிதாஸ தாகூரும் சாந்திபுரத்தில் மிகுந்த பரவசமும் உற்சாகமும் ஆனந்தமும் அடைந்தனர். இவ்வாறாக, சைதன்ய மஹாபிரபுவின் தோற்றத்திற்கு முதன்மையான காரணமாகத் திகழ்பவர் அத்வைத ஆச்சாரியர்.
திவ்ய லீலைகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁
கிருஷ்ணர் சைதன்ய மஹாபிரபுவாகவும், பலராமர் நித்யானந்த பிரபுவாகவும், மஹாவிஷ்ணு அத்வைத ஆச்சாரியராகவும், ஸ்ரீமதி ராதாராணி கதாதர பண்டிதராகவும், நாரதர் ஸ்ரீவாஸ தாகூராகவும் கலி யுகத்தில் தோன்றினர். மஹாவிஷ்ணுவும் சதாசிவமும் இணைந்த உருவமே அத்வைத ஆச்சாரியர்.
அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் பக்தர்கள் கிருஷ்ண கதையை கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். கிருஷ்ணரை வழிபட வைப்பதிலும் புனித நாமத்தை உச்சரிக்க வைப்பதிலும் அவர் ஆன்மீக குருவாக (ஆச்சாரியராக) செயல்பட்டார். மேலும், அவர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், அத்வைதர் என்று அறியப்பட்டார்.
அத்வைத ஆச்சாரியர் தனது பெற்றோர்களின் மறைவிற்குப் பிறகு, கயாவிற்குச் சென்று பிண்ட சடங்குகளை நிறைவேற்றி, பாரத தேசத்தின் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விருந்தாவனத்திற்கு வருகை புரிந்த அவர், கிருஷ்ணரின் வழிபாட்டில் முழுமையாக மூழ்கி, பின்னர் மதனமோஹன விக்ரஹத்தைக் கண்டெடுத்து, மதுராவில் இருந்த சௌபே என்ற பிராமணரிடம் ஒப்படைத்தார். பின்னர், தெய்வீக ஏற்பாட்டின்படி அந்த விக்ரஹம் ஸநாதன கோஸ்வாமியின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டார். இந்த விக்ரஹமே கௌடீய வைஷ்ணவர்களால் இன்றும் விருந்தாவனத்தில் ஸம்பந்த விக்ரஹமாக வழிபடப்படுகிறார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment