மொழிபெயர்ப்பு
முக்தி அளிப்பவரான, அந்த
பரம புருஷ பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக, எனது கூரிய
அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல், போர்க்களத்தில் என்னை
அவர் திடீரென்று தாக்க முற்பட்டார். அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது. மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது.
கிருஷ்ணரும், பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை
கவனத்தைக் கவர்வதாக இருந்தது. ஏனெனில், கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும், பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ
அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன. ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும். பகவான் பரிபூரணமானவர் என்பதால், ஓர் எதிரியின் வேடத்திலுள்ள அவரது தூய
பக்தரின் சேவையையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியும். பரம
புருஷருக்கு எந்த எதிரியும் இருக்க முடியாது. மேலும் பெயரளவேயான ஒரு எதிரியால் அவருக்குத் தீங்கிழைக்கவும் முடியாது. ஏனெனில் அவர் “அஜித”, அல்லது வெல்லப்பட முடியாதவராவார். ஒருவரும் பகவானைவிட உயர்ந்தவராக இருக்க முடியாது என்றபோதிலும், தூய
பக்தரொருவர் ஓரெதிரியைப் போல் அவரைத் தாக்கும்பொழுது அல்லது உயர்ந்ததொரு நிலையில் இருந்து கொண்டு அவரைக் கடிந்து கொள்ளும்பொழுது, அதில் பகவான் ஆனந்தமடைகிறார். இவை பகவானுடன் பக்தர்கள் கொள்ளும் உன்னதமான அன்புப் பரிமாற்றங்களில் சிலவாகும். மேலும் தூய பக்தித் தொண்டைப் பற்றி அறியாதவர்களால் இத்தகைய விவகாரங்களில் உள்ள மர்மத்தைப் புரிந்துகொள்ள இயலாது.
சாதாரண கண்களுக்கு பகவான் காயமடைந்ததைப் போல் காணப்பட வேண்டும் என்பதற்காகவே ஒரு
துணிவுமிக்க வீரரின் பாகத்தை ஏற்றிருந்த பீஷ்மதேவர், வேண்டுமென்றே பகவானின் உடலை அம்புகளால் துளைத்தார். ஆனால் உண்மையில் பக்தரல்லாதவர்களை குழப்புவதற்காகவே அப்படி செய்யப்பட்டது. ஆன்மீகமயமான உடலை காயப்படுத்த முடியாது, பக்தரொருவர் பகவானின் எதிரியாகவும் முடியாது. அது
முடியுமானால், பீஷ்மதேவர் அவரது வாழ்வின் இறுதி இலக்காக அந்த
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தேர்ந்து எடுத்திருக்கமாட்டார். பீஷ்மர் பகவானின் எதிரியாக இருந்திருப்பாரானால்,
சிறிதும் அசையாமலேயே அவரை பகவானால் கொன்றிருக்க முடியும். இரத்தத்துடனும், காயங்களுடனும் பீஷ்மதேவரின் முன்
வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் தன்னால் உண்டாக்கப்பட்ட காயங்களால் அலங்கரிக்கப்பட்ட பகவானின் திவ்யமான உடல்
அழகை பீஷ்மர் காண விரும்பியதாலேயே பகவான் அப்படிச் செய்தார். இதுவே பகவானுக்கும், பக்தருக்கும் இடையிலான தெய்வீகமான உறவைப் பரிமாறிக் கொள்ளும் முறையாகும். இத்தகைய விவகாரங்களினால் பகவான் மற்றும் பக்தர் ஆகிய
இருவருமே பெருமையடைகின்றனர். பகவான் மிகவும் கோபாவேஷத்துடன் இருந்ததால், அவர்
பீஷ்மதேவரை நோக்கிச் செல்லும்பொழுது, அர்ஜுனன் அவரைத் தடுக்க முயன்றபோதிலும், தடைகளைப் பொருட்படுத்தாமல் காதலியை நோக்கி காதலன் விரைந்து செல்வதைப் போலவே, கிருஷ்ணரும் பிஷ்மதேவரை நோக்கிச் சென்றார். வெளிப்பார்வைக்கு அவர் பிஷ்மதேவரை கொல்ல முடிவு செய்திருந்ததாக காணப்பட்டது. ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மரை மகிழ்விப்பதே அவரது நோக்கமாகும். பகவான் எல்லா ஜீவராசிகளையும் விடுவிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. அருவவாதிகள் அவரிடமிருந்து முக்தியைப் பெற விரும்புகின்றனர். அவர்களது விருப்பப்படியே அதை அவர்களுக்கு பகவான் அளிக்கிறார். ஆனால்
இங்கு, பகவானை அவரது உருவ
அம்சத்தில் காண பீஷ்மதேவர் விரும்புகிறார். தூய பக்தர்கள் அனைவரும் இதைத்தான் விரும்புவார்கள்.
ஶ்ரீமத் பாகவதம் 1.9.38
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment