மொழிபெயர்ப்பு
துவாரகா வாசிகள், அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும், அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை.
தங்களது மாளிகைகளின் உச்சிக்கு ஏறிச் சென்ற துவாரகாபுரி பெண்கள், பகவானின் குறையற்ற அழகிய திருவுடலை இதற்கு முன் தாங்கள் பலமுறை கண்டிருப்பதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. பகவானைக் காண்பதில் அவர்களுக்கு திகட்டல் உண்டாகவில்லை என்பதையே இது குறிக்கிறது. பௌதிக அழகு கொண்ட எதையும் சில முறைகள் காண்பதால் முடிவில் அது கவர்ச்சியற்றதாகிவிடுகிறது. இது திகட்டச் செய்யும் விதியாகும். இவ்விதியால் ஜடவுலகில் மட்டுமே செயற்பட முடியும். ஆன்மீக உலகில் இதற்கு இடமில்லை. குறையற்றவர் என்ற சொல் இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஏனெனில், தனிப்பெருங் கருணையால் பகவான் பூமியில் அவதரித்தபோதிலும், அவர் குறையற்றவராகவே இருக்கிறார். ஜீவராசிகள் குறையுடையவர்களாவர். ஏனெனில், ஜடவுலக தொடர்புக்கு அவர்கள் உட்படும்பொழுது அவர்களுடைய ஆன்மீகத் தன்மை மங்கிவிடுகிறது. இதனல் பௌதிகமான முறையில் அடையப்பட்ட உடல் இயற்கைச் சட்டங்களின் கீழ், பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், சூழ்நிலை, சீரழிவு மற்றும் மரணம் ஆகியவற்றிற்கு உட்பட்டதாக இருக்கிறது. பகவானின் உடல் அத்தகையதல்ல. சுய உருவில் அவதரிக்கும் அவர், இயற்கைக் குணங்களின் சட்டங்களுக்கு ஒருபோதும் உட்படுவதே இல்லை. அவரது உடல் படைக்கப்பட்டுள்ள அனைத்திற்கும் பிறப்பிடமாகும். மேலும் அது நம்முடைய அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அழகுக் களஞ்சியமாகும். பகவானின் திவ்யமான உடலில் எப்பொழுதும் புதுப்புது அழகுகள் தோன்றிக்கொண்டே இருப்பதால் அவரது உன்னதமான உடலைக் காண்பதில் ஒருவருக்கும் திகட்டல் ஏற்படுவதே இல்லை. பகவானின் உன்னதமான நாமம், உருவம், இயல்புகள், பரிவாரம் போன்ற அனைத்தும் ஆன்மீகமானவை ஆகும். அவரது புனித நாமத்தைப் பாடுவதிலும், அவரது இயல்புகளைப் பற்றி விவாதிப்பதிலும் திகட்டல் உண்டாவதில்லை. மேலும் பகவானுடைய சகாக்களின் எண்ணிக்கைக்கு ஓர் அளவேயில்லை. அவர் அனைத்திற்கும் பிற்ப்பிடமும், எல்லையற்றவருமாவார்.
ஶ்ரீமத் பாகவதம் 1.11.25 / பொருளுரை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment