ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி
மஹாபிரபுவின் தென்னிந்திய யாத்திரை
மஹாபிரபு சந்நியாசம் ஏற்று புரிக்குச் சென்று அங்கே ஸார்வபௌம பட்டாசாரியருடன் வேதாந்த விவாதத்தில் ஈடுபட்டு அவரை பக்தராக மாற்றியதை சென்ற இதழில் கண்டோம். இந்த இதழில், மஹாபிரபு மேற்கொண்ட தென்னிந்திய யாத்திரையைப் பற்றிக் காண்போம்.
யாத்திரையின் தொடக்கம்
மஹாபிரபுவின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் சந்நியாசம் ஏற்ற பின்னர், அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரைத் தேடுவதாக காரணம் கூறி, கௌராங்கர் தென்னிந்தியா செல்ல விரும்பினார். எனினும், அவரின் தென்னிந்தியப் பயணத்திற்கான உண்மையான காரணம், அங்குள்ள ஒவ்வொருவரையும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் களங்கமற்ற பக்திப் பாதைக்கு மாற்றுவதே. மஹாபிரபுவின் பயணத்தை அறிந்த அவரது பக்தர்கள் அனைவரும் நித்யானந்த பிரபுவின் தலைமையில் அவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்; ஆயினும், மஹாபிரபு தனியாகச் செல்வதையே வலியுறுத்தினார். இருப்பினும், காலா கிருஷ்ணதாஸர் என்பவரை சேவகனாகக் கூட்டிச்செல்லுமாறு பக்தர்கள் வேண்டினர், அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
மேலும், பிரதாபருத்ர ராஜ்ஜியத்தின் தென் பகுதியின் ஆளுநராக இருந்த சிறந்த பக்தரான இராமானந்த ராயரைத் தமது பயணத்தின்போது சந்திப்பதற்கு பகவான் ஒப்புக் கொண்டார்.
தொழுநோயாளியின் விடுதலை
மஹாபிரபுவின் பயண வழியில் இருந்த கூர்மக்ஷேத்திரம் என்னும் கிராமத்தில், வாசுதேவர் என்ற பக்தர் ஒருவர் வசித்து வந்தார். அவரது உடல் தொழுநோயினால் அழுகிக் கொண்டிருந்தது, அந்த உடலை புழுக்கள் உண்டு வந்தன. ஆயினும், அவர் ஓர் உயர்ந்த பக்தராக இருந்த காரணத்தினால், தமது அச்சூழ்நிலையை முந்தைய பாவங்களின் விளைவு என்று ஏற்றுக் கொண்டிருந்தார். உடலின் வலியைப் பொறுத்துக் கொண்டு, ஹரே கிருஷ்ண மந்திரத்தை பக்தியுடன் உச்சரிப்பதே மிகச்சிறந்த தீர்வுக்கான வழி என்பதை உணர்ந்திருந்தார். அவரது உடலிலிருந்து ஏதேனும் ஒரு புழு கீழே விழுந்தால், அப்புழு ஒருவேளை மடிந்து விடுமோ என்ற எண்ணத்தில், மீண்டும் அதனை தமது உடலில் இடுவார்.
மஹாபிரபு கூர்மக்ஷேத்திரத்திலிருந்து புறப்பட்ட பின்னர், வாசுதேவர் அவர் தங்கியிருந்த இல்லத்தை அடைந்தார். மஹாபிரபுவைக் காணத் தவறிய துக்கத்தினால் வாசுதேவர் தரையில் மூர்ச்சையுற்று விழுந்தார். தமது பக்தனின் துன்பத்தை நிவர்த்தி செய்வதற்காக, ஸர்வசக்தி கொண்ட பகவான், உடனே திரும்பி வந்து அவரை அரவணைத்தார். என்னே ஆச்சரியம்! வாசுதேவர் முற்றிலும் குணமடைந்தார், அவரது உடல் அழகுற்றது. எம்பெருமானே! இந்த அழகிய உருவத்தினால் கர்வமடைந்து வாழ்வின் குறிக்கோள் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துவதே என்பதை நான் மறந்து விடக் கூடாது,” என்று பிரார்த்தித்தார். பகவான் சைதன்யரும் அவ்வரத்தை அவருக்கு அளித்தார்.
மக்களுக்கு அறிவுரை
பகவான் சைதன்யரின் பிரகாசமான தோற்றம் அவரைக் கண்ட அனைவரையும் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிகவும் கவரப்பட்ட ஒரு பிராமணர், உடனடியாக அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர விரும்பினார். எம்பெருமானே, நான் லௌகீகமான குடும்ப வாழ்வில் மூழ்கியுள்ளேன். தங்களுடன் பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் தயவுசெய்து என்னை விடுவியுங்கள்,” என்று அவர் பிரார்த்தித்தார். ஆனால் பகவான் சைதன்யரோ, இல்லை. நீங்கள் இங்கேயே தங்கி, ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து, மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்து, அவர்களை பக்தர்களாக்கவும். எங்கெல்லாம் செல்கின்றீர்களோ யாரையெல்லாம் சந்திக்கின்றீர்களோ அவர்களுக்கு கிருஷ்ணரைப் பற்றி உபதேசிக்கவும். இவ்வாறு எனது ஆணையினால் குருவாகி, இந்நாட்டை விடுவிக்கவும். நீங்கள் எனது உபதேசங்களைப் பின்பற்றினால், ஜட வாழ்வின் துன்பங்களினால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டீர்கள்,” என்று பதிலளித்தார்.
எங்கெல்லாம் மஹாபிரபு சென்றாரோ அங்கெல்லாம் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடும்படி மக்களை வேண்டுவார். கிருஷ்ண உணர்வினால் தூண்டப்பட்ட அம்மக்கள், அடுத்த கிராமத்திற்குச் சென்று அவர்களையும் கிருஷ்ண உணர்வினால் தூண்டுவர். அவர்களோ மேலும் பலரை கிருஷ்ண உணர்வினால் தூண்டுவர். இவ்வாறாக ஹரே கிருஷ்ண கீர்த்தனம் தென்னிந்தியா முழுவதும் பரவியது.
நாளை . .
இராமானந்தரைச் சந்தித்தல்
தொடரும் . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment