ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது வேதக் கட்டளையாகும். எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான். எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம். பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும். ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது ஒரு புல்லாசனம், குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி. எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த செலவும் இல்லை. நற்பண்புதான் இதற்குத் தேவை. ( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.18.28 / பொருளுரை )
பக்தித் தொண்டைப் பிரசாரம் செய்வதற்குரிய பன்னிரண்டு உயர்ந்த அதிகாரிகளில் பீஷ்மதேவரும் ஒருவராவார். எனவே பிரபஞ்சம் முழுவதிலும் இருந்து வந்த, அவரது மரணப்படுக்கையின் அருகே கூடியுள்ள சக்தி வாய்ந்த முனிவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரிக்க அவரால் முடிந்தது. அவ்வேளையில் அவர் தமது வீட்டிலோ அல்லது சுகாதாரமான நிலையிலோ இல்லாததால், முன் வந்து அவர்களை வரவேற்று உபசரிக்க அவரால் முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரது மனம் நல்ல நிலையில் இருந்ததால், அதன் வாயிலாக அவரது இதயபூர்வமான இனிய வார்த்தைகளை அவரால் கூற முடிந்தது. இவ்வாறாக அவர்கள் அனைவரும் நன்கு வரவேற்கப்பட்டனர். ஒருவரால் தனது கடமையை உடல் உழைப்பினாலோ, மனதாலோ அல்லது வார்த்தைகளாலோ நிறைவேற்ற முடியும். மேலும் அவற்றை உபயோகிக்கும் கலையை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் உடலளவில் தகுதியற்றவராய் இருந்தபோதிலும், அவர்களை வரவேற்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை. ( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.9.9 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment