யதா ப்ரகாஷ யத்-யேக: க்ருத்ஸ்னம் லோகம் இமம் ரவி:
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்னம் ப்ரகாஷ யதி பாரத
பரதனின் மைந்தனே, ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றான்.
பொருளுரை: உணர்வைப் பற்றி பல்வேறு கொள்கைகள் இருக்கின்றன. இங்கே பகவத் கீதையில் சூரியனும் சூரியக் கதிர்களும் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் அமைந்துள்ள சூரியன் அகிலம் முழுவதையும் பிரகாசப்படுத்துவதைப் போல, சிறு துகளாகிய ஆன்மீக ஆத்மா, உடலின் இதயத்தில் அமைந்திருந்தாலும் உணர்வின் மூலம் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றது. எனவே, சூரியக்கதிர் அல்லது வெளிச்சமானது சூரியன் இருப்பதற்கு சாட்சியாக விளங்குவதைப் போல, உணர்வானது ஆத்மா இருப்பதற்கு சாட்சியாக விளங்குகின்றது. உடலில் ஆத்மா இருக்கும்பொழுது உணர்வானது உடல் முழுவதும் காணப்படு கின்றது, ஆத்மா உடலிலிருந்து நீங்கியவுடனேயே உணர்வு எதுவும் இருப்ப தில்லை. அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, உணர்வு என்பது ஜடப் பொருள்களின் கலவை யினால் உற்பத்தி செய்யப்படுவது அல்ல. அஃது ஆத்மாவின் அறிகுறியாகும். ஆத்மாவின் உணர்வும் பரம உணர்வும் தன்மையில் ஒன்றாக இருப்பினும், ஆத்மாவின் உணர்வு பரமமானது அல்ல. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட உடலின் உணர்வும் மற்றொரு உடலின் உணர்வும் ஒன்றாக இருப்பதில்லை. ஆனால் ஜீவாத்மாவின் நண்பனாக எல்லா உடல்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவோ எல்லா உடல்களையும் உணர்கின்றார். இதுவே தனிப்பட்ட உணர்விற்கும் பரம உணர்விற்கும் இடையிலான வேறுபாடாகும்.
பகவத் கீதை உண்மையுருவில் /அத்யாயம் 13 பதம் 34 )
Comments
Post a Comment