கிருஷ்ணர் கூறுகிறார், அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.(பகவத் கீதை 9.26)
பகவத் கீதை 9.26 ல் எவ்வாறு கிருஷ்ண பக்தியை, எளிதாக பயிற்சி செய்து அதன் மூலம் கிருஷ்ணரை எவ்வாறு அடைவது என்பதை விளக்குகிறது. இந்த ஸ்லோகத்தில் கொடுக்கப்பட்ட செயல்முறை மிகவும் எளிமையானது மற்றும் இதை யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்ய முடியும். அது எவ்வாறு என்று மேலும் விவரமாக காண்போம்
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நமது செயலின் நோக்கத்தைக் மட்டுமே காண்கிறார்
பிரபஞ்சம் முழுவதும் அணைத்தையும் படைத்த பரம புருஷ பகவானான கிருஷ்ணருக்கு நாம் பூரணமாக எதையும் அளிக்க முடியாது. ஏனெனில் அணைத்தும் நாம் அவரிடம் இருந்து பெற்றுள்ளோம். அதனால் நாம் அர்ப்பணிக்கின்ற பொருட்கள் மற்றும் அதன் மதிபை பற்றி அவர் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் நாம் எந்த நோக்கத்துடன் அந்தப் பொருட்களை அவருக்கு வழங்குகிறோம் என்பதில் அவர் ஆர்வம் காட்டுகிறார். கிருஷ்ணர் பரம புருஷர். முழு படைப்பிலும் உள்ள அனைத்தையும் அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே, அவருக்கு நம்மிடம் உள்ள எதுவும் தேவையில்லை. ஆனால் நம்மிடமிருந்து ஒன்றை மட்டுமே அவர் எதிர்பார்க்கிறார், அதாவது தூய்மையான அன்பு மட்டுமே . எதிர்பார்க்கிறார். மேலும் அந்த அன்பு சுயநலம் இல்லாமல் மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
கிருஷ்ண பக்தி செய்வதற்கு மிக முக்கியமான தகுதி
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபட எந்தவித பௌதீகமான தகுதிகள் தேவை இல்லை, ஒருவர் ஏழை, பணக்காரர், இந்து மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள், பிரமணர்கள் அல்லது பிராமணர் அல்லாத பிற வர்னத்தினர், கற்றவர் மற்றும் கல்லாதவர், இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது வெளிநாட்டவர், ஆண் அல்லது பெண், துறவி , ஞானி, போன்றவர்கள் மட்டுமே கிருஷ்ணரை வழிபட முடியும் என்று பாகுபாடு இல்லை. அவர் அப்படி எந்த நிபந்தனையும் அறிவிக்க வில்லை. உண்மையில், இந்த பதத்தில் மூலம் பகவான் கிருஷ்ணர் நம் ஒவ்வொருவரையும் தனது பக்தராக ஆவதற்கு அழைக்கிறார். அனைவரும் கிருஷ்ணரின் பக்தராக ஆவதற்கு தகுதியுடையவர்களே.
அதனால் தான் இந்த பதத்தில் கிருஷ்ணர் தன் மேல் தூய்மையான , பக்தி உள்ள எவரிடமிருந்தும் அவர்களின் அர்ப்பணிப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். "கிருஷ்ண பக்தி" என்பது கிருஷ்ணரின் பக்தனாக ஆவதற்குத் தேவையான மிக முக்கியமான மற்றும் ஒரே தகுதி. எனவே, இந்த பதத்தில் பக்தி என்ற சொல் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணரின் பெருந்தன்மையை ஸ்ரீல பிரபுபாதர் தனது பொருளுரையில் எழுதுகிறார், “இந்த எளிமையான வழிமுறையின் மூலம் கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்து, நித்தியம், ஆனந்தம் மற்றும் அறிவு நிரம்பிய மிகவுயர்ந்த பக்குவமான வாழ்வை அடைவதற்கு விரும்பாத முட்டாள் யார் ? (பகீ 9 26 பொருளுரை)
ஆம் இது முற்றிலும் உண்மை யார் வேண்டுமானாலும் பழமோ , பூவோ , இலையோ அல்லது நீரையோ கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து அவரை வழிபடலாம். இந்தப் பொருட்கள் கிடைக்காத இடம் இந்த பூமியில் உண்டா? நிச்சயமாக இல்லை. எனவே, அனைத்து உயிரினங்களின் பரம பிதாவான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், தனது காரணமற்ற கருணையினால் நமக்கு இந்த அரிய வாய்ப்பினை தந்து அவரது திருநாட்டில் பிரவேசிக்க அன்புடன் நம்மை அழைக்கிறார்.
பகவான் கிருஷ்ணர் துரியோதனனின் விருந்தை மறுத்து விதுரரின் வீட்டில் எதனால் உணவருந்தினார்?
மகாபாரதத்தில் , துரியோதனன் கிருஷ்ணருக்காக ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் கிருஷ்ணர் துரியோதனனின் ஏற்பாடு செய்த விருந்தை ஏற்க மறுத்தார், ஏனெனில் துரியோதனனுக்கு கிருஷ்ணர் மீது தூய பக்தி இல்லை. மாறாக, விதுரரும் அவரது மனைவியான விதுராணியும் கிருஷ்ணர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததால், கிருஷ்ணர் விதுரரின் வீட்டில் எளிய உணவு வகைகளை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார்.
விதுரரின் மனைவியான விதுராணி, பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உபசரித்து, வரவேற்றார். வரவேற்றும், உபசரித்தும் அவரை கண்டு கண்டு ஆனந்த பரவசத்தில் மூழ்கினார். அந்த ஆனந்த பரவசத்தில் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத்திற்கு பதிலாக வாழைப்பழத் தோலைக் உண்ணுவதற்காக கொடுத்தாள். அவளது தூய பக்தியை பார்த்த கிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் வாழைப்பழ தோலை உண்ண ஆரம்பித்தார். கிருஷ்ணர் பரம புருஷ பகவான் அவருக்கு ஏது பசி என்ற உணர்வு ? பக்தர்களின் தூய அன்பு பரிமாறத்தினை சுவைக்க இப்படி பட்ட லீலைகளை செய்து காண்பிக்கிறார்.
பகவான் கிருஷ்ணருக்கு என்ன உணவு வழங்க வேண்டும்?
இந்த (9.26) பதத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,
" கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துபவன், அவர் எதை விரும்பினாலும் அதனை அளிப்பான். ஆனால் அவர் விரும்பாத, கேட்காத பொருள்களைத் தவிர்ப்பான். எனவே, மாமிசம், மீன், முட்டை போன்றவற்றை கிருஷ்ணருக்குப் படைக்கக் கூடாது. அவர் அத்தகு பொருள்களை விரும்பியிருந்தால், அவ்வாறு கூறியிருப்பார். மாறாக, அவர், இலை, பழம், பூ, நீர் ஆகியவை கொடுக்கப்பட வேண்டும் என்று இங்கே தௌpவான வேண்டுகோள் விடுக்கிறார். “அவ்வாறு படைக்கப்படும் பொருள்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, மாமிசம், மீன் முட்டை போன்றவற்றை கிருஷ்ணர் ஏற்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காய்கறிகள், தானியங்கள், பழங்கள், பால், நீர் ஆகியவை மனிதனுக்குத் தகுந்த உணவுகள்; மேலும், கிருஷ்ணராலேயே பரிந்துரைக்கப்படுபவை. இவற்றைத் தவிர நாம் உண்ணக்கூடிய மற்ற எந்தப் பொருளையும் அவர் ஏற்க மாட்டார்; எனவே, அத்தகு பொருள்களை அவருக்குப் படைக்க முடியாது. மீறி, அவற்றை நாம் அவருக்குப் படைத்தால், அன்புடன் கலந்த பக்தியின் தளத்தை நம்மால் அடைய முடியாது."
எனவே பக்தர்களாகிய நாம் கிருஷ்ணருக்குப் பிடித்த பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். அதுதான் உண்மையான அன்பு. எனவே, அவருக்கு சைவப் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். பழங்கள், பால், காய்கறிகள், தானியங்கள், தண்ணீர் ஆகியவற்றை அன்புடன் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
நாம் நமது ஜீவனை தக்க வைத்து கொள்ள உணவு உண்கிறோம். அதனால், நாம் முதலில் கிருஷ்ணருக்கு உணவை நைவேத்தியம் செய்த பின் அந்த உணவை பிரசாதமாக அல்லது கிருஷ்ணரின் மபெறும் கருணையாக எண்ணி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்ய படாத உணவு உண்பது பாவம். ஆனால் கிருஷ்ண பிரசாதத்தை உண்ணும்போது எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறோம்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை 3.13 இல் இதை உறுதிப்படுத்துகிறார்,
"யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்பதால், பகவானின் பக்தர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்களது சுய புலனின்பத்திற்காக உணவு தயாரிப்பவர்கள் பாவத்தை உண்கிறார்கள்."
9.26 பதத்தில் ஸ்ரீல பிரபுபாதர் பொருளுரையில் மேலும் , கிருஷ்ண பிரசாதம் சாப்பிடுவதன் பலனை விளக்குகிறார், "....ஆனால் எளிமையான, சுவையான தாவர உணவுப் பொருள்களை தயார் செய்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது விக்ரஹம் அல்லது படத்தின் முன்பு வைத்து, வணங்கி, அந்த எளிய படைப்பினை ஏற்றுக்கொள்ளும்படி அவரிடம் பிரார்த்தனை செய்வது, வாழ்வின் நிலையான முன்னேற்றத்திற்கும், உடலைத் தூய்மை செய்வதற்கும், நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும் நுண்மையான மூளை திசுக்களை உண்டாக்குவதற்கும் நிச்சயமாக உதவுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, படைக்கப்படும் பொருள் அன்புடன் படைக்கப்பட வேண்டும்." (பகவத் கீதை 9.26 பொருளுரை)
இருப்பினும், உணவை தயாரிக்கும்போதும், படைக்கும்போது, பரிமாறும்போதும் அதிலுள்ள முக்கியமான விஷயம், அச்செயல் கிருஷ்ணருக்காக அன்புடன் செய்யப்பட வேண்டும் என்பதே நாம் கிருஷ்ணருக்கு அன்புடன் சேவை செய்யாவிட்டால், கிருஷ்ணரின் அன்பு நமக்கு கிடைக்காது.
நாம் நைவேத்தியம் செய்யும் உணவை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் எப்படி சாப்பிடுகிறார்? எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்?
அருவவாதிகள் இறைவனுக்கு உருவம் இல்லை , புலன்கள் இல்லை என்று வாதிடுகின்றனர். ஆனால் புலன்கள் இல்லாமல் கிருஷ்ணர் தனக்கு நைவேத்தியம் செய்யும் உணவுப் பொருட்களை எப்படி ருசிப்பார். கிருஷ்ணருக்கும் நம்மைப் போன்ற புலன்கள் உள்ளன என்பதையும், பகவான் சத் சித் ஆனந்த ரூபத்தில் உள்ளார் என்பதையும் வேத சாஸ்திரங்களில் உறுதி பட கூறப்படுகிறது . பகவானின் புலன்கள் தெய்வீகமானது . அவரின் ஒரு புலனை வைத்தே அனைத்து காரியங்களை செய்யும் வலிமை உள்ளவர்.
ஆனால் நமது புலன்கள் வரையறுக்கப்பட்டவை மற்றும் ஒரே ஒரு செயல்பாட்டை மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக, நாம் கண்களால் மட்டுமே பார்க்க முடியும், வாயால் சாப்பிட முடியும், மூக்கிலிருந்து வாசனையை உணர முடியும். ஆனால் கிருஷ்ணரால் தனது புலன்களால் எதையும் செய்ய முடியும். அவர் கண்களால் பார்க்க முடியும், கண்களால் கேட்க முடியும், கண்களால் சாப்பிட முடியும். அதேபோல, அவர் வாயிலிருந்து சாப்பிடலாம், பார்க்கலாம், கேட்கலாம், நடக்கலாம், பேசலாம். அவருடைய புலன்கள் தெய்வீகமானது மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தவை. (ஜட உலகங்களை படைத்து தமது த்ருஷ்டியால் அவர் உயிருட்டுகிறார்).
கிருஷ்ணருக்கும் உணர்வுகள் உண்டு, அவர் பக்தர்களுடன் தனிப்பட்ட முறையில் உரவாட விரும்புகிறார். எனவே, கிருஷ்ணருக்கு நாம் அன்புடன் உணவை வழங்கும்போது, அவர் அதை ஏற்று, உண்டு மகிழ்கிறார். நாம் கிருஷ்ணரின் மகிழ்ச்சி மட்டுமே சிந்திப்போமானால் , நமது வாழ்க்கை ஆனந்தமாவது உறுதி.
நமது இந்த வாழ்வின் இறுதியில் கிருஷ்ணரை அடைவோம்
கிருஷ்ண பக்தியை எளிதாகவும் திறம்படவும் செய்வது எப்படி என்பதை இந்த பதம் நமக்கு விளக்குகிறது. இங்கு விவரிக்க பட்ட செயல்முறை மிகவும் எளிமையானது. அன்புடனும் பக்தியுடனும் செய்யப்பட வேண்டும் என்பதே முக்கியமான ஒரே தேவையாக உள்ளது என்று மேலும் விளக்கப்பட்டுள்ளது.. இதை மட்டுமே செய்ய முயன்றால் நமது இந்த வாழ்வின் இறுதியில் கிருஷ்ணரை அடைவோம் என்பதை உறுதியாக கூறமுடியும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment