பதம் 10
அதனா அபி தே தன்யா: ஸாதவோ க்ருஹ - மேதின:
யத் க்ருஹா ஹி அர்ஹ - வர்யாம்பு - த்ருண - பூமீஸ்வரா வரா:
மொழிபெயர்ப்பு
குடும்ப வாழ்க்கையில் பற்றுடையவன், பெரிய செல்வந்தனாக இல்லாது இருந்தபோதும் அவனது இல்லத்திற்கு தெய்வீக அருளாளர்கள் விஜயம் செய்தால் அவன் மிகவும் பெருமையுடையவனாகிறான். அவ்வருளாளர்களுக்கு நீரும், அமர்வதற்கான ஆசனமும், உபசாரப் பொருட்களும் வழங்கும் அந்த வீட்டின் எஜமானனும் பணியாட்களும் பெருமையடைகின்றனர். ஏன் அவனது இல்லமே பெருமையடைகின்றது.
பொருளுரை
இந்த உலகத்தில் ஒருவனிடம் பணம் இல்லையென்றால் அவன் பெருமையடைவது இல்லை, இல்லற வாழ்வில் மிகவும் ஈடுபாடுடைய ஒருவனுக்கு ஆன்மீக உலகில் பெருமைகள் இல்லை. ஆனால் பௌதீக அருளாளர்கள் ஓர் ஏழையின் குடிசைக்கோ அல்லது இல்லறத்தில் அதிக ஈடுபாடுடையவனிடமோ வருகை தருவதற்குத் தயாராகவே இருக்கின்றார்கள். இவ்வாறு நேரும் பொழுது அவ்வீட்டின் எஜமானும் அவனது பணியாட்களும் அப்பெரியவர்களின் பாதங்களைச் சுத்தம் செய்வதற்குத் தண்ணீரும் அமர்வதற்கு இருக்கைகளும் தந்து உபசரிப்பதினால் அவர்களும் பெருமை பெறுகின்றனர். முடிவாக நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் ஒரு சாதாரண மனிதன் கூட தெய்வீக அருளாளர்களின் வருகையினால் பெருமையடைகின்றான். ஆகையினால்தான் ஓர் இல்லறத்தான் ஒரு துறவியின் அருளைப் பெறுவதற்காக அவரைத் தன் இல்லத்திற்கு அழைக்க வேண்டும் என்பது வேதமுறைகளில் ஒன்றாக இருக்கின்றது. இம்முறை இப்போதும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்றது, ஆதலினால் தெய்வீக அருளாளர்கள் அல்லது துறவிகள் எங்கே சென்றாலும் அவர்களை உபசரிக்கும் இல்லறத்தார்கள் உன்னதமான அறிவினைப் பெறுகின்றனர். ஆகையினால் தான் இதுபோன்ற ஆன்மீக வாழ்வின் உயர்வினை அறியாத இல்லறத்தாரின் நன்மைக்காக அவர்களிடம் வருகை புரிவது துறவியின் கடமையாகிறது.
பொதுவாக இல்லறத்தார்கள் பொருள் வசதியில் சாதாரணமானவர்களே; அவர்களால் எப்படி, சீடர்கள் எல்லோரையும் உபசரிக்க முடியும் என்று கேட்கலாம். ஒரு துறவியினை வரவேற்கும் பொழுது அவரைச் சுற்றியிருப்பவர்களையும் கட்டாயமாக வரவேற்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. துர்வாச முனிவர் எப்பொழுதுமே அறுபதினாயிரம் சீடர்களுடன்தான் வருவார், அதில் யாரேனும் ஒருவருக்கு ஒரு குறை நேர்ந்தால் கூட அவர்களை உபசரிக்கும் இல்லறத்தான் மீது அதிகமாக ஆத்திரங் கொள்வார் ஏன் அவனை சபிக்கக் கூடச் செய்வார். ஆனால் உண்மை என்னவென்றால் தன் வீட்டிற்கு வரும் துறவியினையும் அவர்தம் அடியவர்களயைும் ஒருவன் பொருளாதாரத்தில் உயர்ந்தவனோ அல்லது தாழ்ந்தவனோ அதைப் பற்றிக் கவலையில்லை; அவர்கள் குடிப்பதற்கு குறைந்த பட்சம் ஒருவாய் தண்ணீராவது கொடுக்க வேண்டும். தண்ணீர் எங்கும் கிடைப்பதுதானே! திடீரென்று வருகை புரியும் ஒருவருக்கு உடனே உணவு தரமுடியாவிட்டாலும் குடிப்பதற்குத் தண்ணீராவது கொடுப்பது இந்தியர்களின் மரபாகும். அப்படித் தண்ணீர் கூட தரமுடியாவிட்டால் அவர்கள் அமர்வதற்கு குறைந்தபட்சம் வைக்கோலினால் ஆன இருக்கைகளையாவது அளிக்க வேண்டும். அப்படி வைக்கோலினால் ஆன இருக்கைகள் கூட இல்லையென்றால் தரையினைப் பெருக்கி சுத்தம் செய்து அவர்களை அமரச் சொல்ல வேண்டும். அதுவும் கூட அவனால் முடியாதென்றால் பேசாமல் இருகரம் கூப்பி வரும் பெரியவரை “வருக வருக” என்று முகமன் கூறி வரவேற்க வேண்டும். அதுவும் கூட அவனால் இயலாது என்றால் அவனும் அவன் குடும்பத்தைச் சார்ந்தோரும் தங்கள் ஏழ்மையினை எண்ணி கண்ணீர் மல்க, வருபவர் துறவியோ அல்லது நாடாளும் மன்னரோ, அவர்களுக்குத் தங்கள் மரியாதையினைத் தெரிவிக்க வேண்டும்.
பதம் 11
வ்யாலாலய - த்ருமா வை தேஷ்வ அரிக்தாகில - ஸம்பத:
யத் - க்ருஹாஸ் தீர்த்த - பாதீய - பாதததீர்த்த - விவர்ஜிதா:
மொழிபெயர்ப்பு
எல்லாச் செல்வங்களும் பொருள் வளமும் பெற்றிருந்தும் ஓர் தனவந்தன் தன் வீட்டிற்கு வரும் தெய்வீக அருளார்களுக்கு அனுமதி மறுப்பதோ அவர்கள் திருவடிகளைக் கழுவுவதற்கு நீர் தர மறுப்பதோ எதனைப் போன்றதென்றால் விஷப்பாம்புகள் வாழும் மரத்தினைப் போன்றது அவன் மாளிகையாகும்.
பொருளுரை
இச்சுலோகத்தில் வரும் தீர்த்த பாதீயா என்னும் சொல் பகவான் விஷ்ணுவின் பக்தர்கள் அல்லது வைணவர்களைக் குறிப்பதாகும். அந்தணர்களைப் பொருத்தமட்டில் அவர்களை எப்படி வரவேற்க வேண்டும் என்பதற்கு விளக்கம் முந்தைய சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தச் சுலோகத்தில் குறிப்பாக வைணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக சந்நியாசிகள் அல்லது துறவற வாழ்க்கை வாழ்வோர், இல்லறத்தார்க்கு ஞானமளிக்கும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். அவர்கள் ஏகதன்டீ சந்நியாசிகள் என்றும் திரிதண்டீ சந்நியாசிகள் என்றும் இரண்டு வகைப்படுவர். ஏகதண்டீ சந்நியாசிகள் சங்கராச்சார்யரைப் பின்பற்றும் மாயாவாதிகள் ஆவார். வைணவ ஆச்சார்யர்களான இராமனுஜாச்சாரியார், மத்துவாச்சாரியார் போன்றோரைப் பின்பற்றும் திரிதண்டீ சந்நியாசிகளோ இல்லறத்தார்க்கு ஞானம் அளிப்பதற்கான சிரமத்தை மேற்கொள்கின்றனர். ஏகதண்டீ சந்நியாசிகள் பரிசுத்தமான பிரம்ம நிலையில் இருக்கக் கூடியவர்கள். ஏனென்றால் அவர்கள் ஆத்மாவானது உடலிலிருந்து வேறானது என்பதை உணர்ந்தவர்கள், ஆனால் அவர்கள் கூட அருவநிலைக் கொள்கைக்காரர்களே. வைணவர்கள் முழு மெய்ப்பொருளாக இருப்பது பரமாத்மாவே என்றும் ஜோதியான பிரம்மமோ முழுமுதற் கடவுளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அறிந்தவர்கள். பகவத்கீதையும் (14.27) இதனை உறுதி செய்கின்றது: ப்ரஹ்தமணோ ஹி ப்ரதிஷ்மாஹம். ‘பிரம்மத்திற்கு நானே நிலைக்களன்’. முடிவாக இங்கே ‘தீர்த்த பாதீயா’ என்பது வைணவர்களைக் குறிக்கும் சொல். பாகவதத்தில் (1.13.10) மற்றொரு குறிப்புக் காணப்படுகின்றது; ‘தீர்த்தீ கர்வந்திக தீர்த்தானி’. ஓர் வைணவன் எங்கே சென்றாலும் அந்த இடத்தை ‘தீர்த்த’ அதாவது ஒரு புனித ஸ்தலமாக மாற்றுகின்றான். வைணவத் துறவிகள் உலகமெங்கும் சென்று தங்கள் திருவடித்தாமரைகள் படுகின்ற இடத்தையெல்லாம் புண்ணிய ஸ்தலங்களைச் செய்கின்றனர். எந்தவீட்டைச் சேர்ந்தவன் முன்னர் கூறியுள்ளபடி ஓர் வைணவனை வரவேற்கவில்லையோ அந்தவீடு விஷப்பாம்புகளின் வசிப்பிடமாகவே கருதப்படும். அதாவது விலையுயர்ந்த சந்தனமரத்தைச் சுற்றி ஓர் விஷமுள்ள பாம்பு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. சந்தன மரம் மிகவும் குளிர்ச்சியானது, விஷப்பற்களைப் பெற்றிருப்பதினால் பாம்புகள் எப்போதும் சற்று வெம்மையாக இருக்கின்றன. அதனால் குளிர்ச்சியினை வேண்டிய அவைகள் சந்தன மரங்களைத் தஞ்சமடைகின்றன. இதுபோல்தான் சில பணக்காரர்களும், தங்கள் வீட்டு வாயிலைக் காப்பதற்கு வேலையாட்களையும், நாய்களையும் வைத்திருப்பார்கள். அவர்களது வீட்டுக் கதவுகளில் “உள்ளே நுழையாதே” “அன்னியர்கள் வருவதற்கு அனுமதி இல்லை”, “நாய்கள் ஜாக்கிரதை” என்றெல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். மேற்கத்திய நாடுகளில் அன்னியன் ஒருவன் நுழைந்தால் அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். அங்கே இது குற்றமாகக் கருதப்படுவதில்லை. இதுவே அரக்கத்தன்மை வாய்ந்த இல்லறத்தானின் நிலையாகும் அதனால்தான் அவனது வசிப்பிடம் விஷப்பாம்புகளின் குடியிருப்பாகக் கருதப்படுகிறது. அக்குடும்பத்தைச் சேர்ந்த பிறரும் பாம்புகளைவிட ஒன்றும் மேலானவர்கள் இல்லை, ஏனென்றால் பாம்புகள் மிகவும் பொறாமையுடையன, அப்பொறாமையானது துறவிகளிடத்தில் காட்டப்படுமானால் அவர்களது நிலை மிகவும் அபாயத்திற்குள்ளாகிறது. அதனால்தான் சாணக்கிய பண்டிதர் கூறுகிறார் பொறாமையுடைய இரண்டு உயிர்கள் இருக்கின்றன; ஒன்று பாம்பு மற்றொன்று பொறாமையுடைய மனிதன். இப்பாம்புகளைக் காட்டிலும் மனிதனே மிகவும் ஆபத்தானவன்; காரணம் பாம்புகள் கூட சில மந்திரங்களினாலும், மூலிகைகளினாலும் கட்டுப்படுகின்றன. ஆனால் ஒரு பொறாமைக்காரன் எதற்கும் மசியமாட்டான்.
ஸ்ரீமத்-பாகவதம் 4.22.10 - 11
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment