பொதுவாக மக்கள் வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைவது என்னும் தங்கள் வாழ்க்கை நலனை அறியாதிருக்கின்றனர். ஆன்மீக உலகிலுள்ள தங்கள் உண்மை வீட்டினைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆன்மீக உலகில் பல வைகுண்ட லோகங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்ததாக இருப்பது கிருஷ்ண லோகம் எனப்படும் கோலோக பிருந்தாவனமேயாகும். சமுதாயத்தின் முன்னேற்றம் அபரிதமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு ஆன்மீக உலகிலுள்ள வைகுண்ட லோகத்தைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இன்றைய தினம் நாகரீகத்தில் முன்னேறியிருப்பதாகச் சொல்லும் மனிதர்கள் பிறஉலகங்களுக்குச் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தாங்கள் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்த உலகமான பிரம்ம லோகத்திற்குச் சென்றாலும் கூட மீண்டும் இப்பூமிக்கு திரும்பி வேண்டியதிருக்கும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது. இதனை பகவத்கீதை (8.16) உறுதி செய்கின்றது:
ஆப்ரஹ்ம-புவனால் லோகா:
புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன
மாம் உபேத்ய து கௌந்தேய
புனர் ஜன்ம ந வித்யதே
“குந்தியின் மகனே! உலகில் உயர்ந்த தேவலோகத்திலிருந்து தாழ்ந்தபாதாள லோகம் வரை உள்ள எல்லா லோகங்களும் பிறப்பு இறப்புக்குரிய இடங்களேயாகும். ஆனால் எனது இடத்தையடைந்தவன், மீண்டும் பிறப்பதில்லை”.
இப்பிரபஞ்சத்திலுள்ள உயர்ந்த உலகத்திற்கு ஒருவன் போனால் கூட அவனது புண்ணியச் செயல்கள் தீர்ந்தவுடன் மீண்டும் இங்கே வந்துவிடுகிறான். விண்கலங்கள் வானில் உயரே உயரே பறந்தாலும் எரிபொருள் தீர்ந்தவுடன் மீண்டும் பூமிக்குத் தரை இறங்க வேண்டியதிருக்கிறது. இச்செயல்கள் அனைத்தும் மாயையில் செய்யப்படுகின்றன. இப்பொழுது உண்மையான முயற்சியாக இருக்க வேண்டியது வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைவதற்குரியதாகவே இருத்தல் வேண்டும். இச்செயல்முறை பகவத்கீதையில் “யாந்தி மத் யாஜினோ (அ)பி மாம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழுமுதற்கடவுளின் பக்தித்தொண்டில் ஈடுபட்டிருப்பவனே வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளையடைகிறான். மனித வாழ்க்கை கிடைத்தற்கரியதாகும். இதனைப் பிறஉலகங்களைத் தேடிப் பயணம் செல்வது போன்ற வீண்வேலைகளில் கழிக்கவேண்டாம். முழுமுதற்கடவுளிடம் திரும்பிச் செல்வதற்கான புத்தியுடையவனாக ஒருவன் இருத்தல் வேண்டும். ஆன்மீக வைகுண்ட லோகங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஒருவன் ஆர்வமுடையவனாக இருத்தல் வேண்டும். அதிலும் குறிப்பாகக் கோலோக பிருந்தாவனம் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டவேண்டும். அதன்பிறகு அங்கு செல்வதற்குரிய எளிமையான முறையாகவும், கேட்பதில் தொடங்கும் (ஷ்ரவணம்கீர்தனம் விஷ்ணோ:) பக்தித் தொண்டுக் கலையினைக் கற்றல்வேண்டும் இதுவும் கூட ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கலேர் தோஷ-நிதே ராஜன்ன
அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:
கீர்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய
முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்
பரலோகத்திற்கு (பரம்வ்ரஜேத்) ஒருவன் ஹரே கிருஷ்ண மந்திரத்தினை ஓதுவதன் மூலம் எளிதில் செல்ல முடியும். இக்கால மக்களுக்குரிய எளிய வழி இதுவேயாகும் (கலேர் தோஷ நிதே) ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஓதுவதின்மூலம் ஒருவன் அனைத்து உலகியல் மாசுக்களிலிருந்தும் தூய்மையடைந்து வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடையமுடியும் என்பது இக்காலத்திற்கான சிறந்தவரமாகும். இதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை.
(ஸ்ரீமத்-பாகவதம் 4.29.48 / பொருளுரை )
Comments
Post a Comment