யதா ஹி அதர்மேண தமோ-தியோ ந்ருபா
ஜீவந்தி தத்ரைஷ ஹி ஸத்வத: கில
தத்தே பகம் ஸத்யம் ருதம் தயாம் யசோ
பவாய ரூபாணி ததத் யுகே யுகே
மொழிபெயர்ப்பு
எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார்.
பொருளுரை
மேலே குறிப்பிட்டதுபோல், பிரபஞ்ச படைப்பு பகவானின் சொத்தாகும். இதுவே ஈசோபநிஷத்தின் அடிப்படைத் தத்துவமாகும். அனைத்தும் பரம புருஷரின் சொத்தாகும். எனவே ஒருவரும் அவருடைய சொத்தை ஆக்கிரமிக்கக் கூடாது. அன்புடன் அவரால் அளிக்கப்பட்டதை மட்டுமே ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, பூமியோ அல்லது வேறெந்த கிரகமோ அல்லது பிரபஞ்சமோ பகவானின் பூரண சொத்தாகும். ஜீவராசிகள் அவரது அங்க உறுப்புகளாக, அல்லது மகன்களாக உள்ளனர். இதனால் ஒவ்வொருவரும் அவரது நியமிக்கப்பட்ட செயலை நிறைவேற்றுவதற்கும், பகவானின் கருணையைப் பெற்று வாழ்வதற்கும் உரிமை கொண்டவராவார். எனவே, பகவானின் அனுமதியில்லாமல், மற்றொரு தனி மனிதனின் அல்லது மிருகத்தின் உரிமையை அபகரிக்கக் கூடாது. அரசர் அல்லது நிர்வாகி, பகவானின் பிரதிநிதியாக இருந்து, அவரது விருப்பப்படி நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள வேண்டியவராவார். எனவே அத்தகைய அரசர் அல்லது நிர்வாகி, யுதிஷ்டிர மகாராஜனை அல்லது பரீட்சித்து மகாராஜனைப் போல் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்தகைய அரசர்கள் உலக நிர்வாகத்தைப் பற்றிய முழு அதிகாரத்தையும், அறிவையும் அதிகாரிகளிடமிருந்து பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் ஜட இயற்கைக் குணங்களிலேயே மிகத் தாழ்ந்ததான அறியாமைக் குணத்தின் (தமோ குணம்) ஆதிக்கத்தினால், அறிவும், பொறுப்பும் இல்லாமலேயே அரச அல்லது நிர்வாக பதவிக்கு வருகின்றனர். அத்தகைய முட்டாள் நிர்வாகிகள் சுயநல நோக்கங்களுக்காக மிருகங்களைப் போல் வாழ்கின்றனர். இதன் விளைவாக சூழ்நிலை முழுவதுமே குழப்பமும், துன்மார்க்கமும் நிறைந்ததாக மாறிவிடுகிறது. மேலும் சுயநலக் காரியம், இலஞ்சம் வாங்குதல், பொய் சொல்லுதல், சண்டை போன்றவைகளால் பஞ்சம், தொற்றுநோய், போர் முதலான பிரச்சினைகள் மனித சமூகத்தில் பெருகிவிடுகின்றன. மேலும் பகவானின் பக்தர்கள் எல்லா விதத்திலும் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த அறிகுறிகள் அனைத்தும், மதக் கொள்கைகளை நிலைநாட்டவும், ஒழுங்கற்ற நிர்வாகிகளை அழிக்கவும், பகவான் அவதரிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதையே காட்டுகின்றன. இதுவும் பகவத் கீதையில் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
பிறகு பகவான், பௌதிக குணங்களின் கலப்படம் இல்லாத ஆன்மீகமான உருவத்துடன் தோன்றுகிறார். அவரது சிருஷ்டியை வழக்கமான நிலையில் வைத்துக் காப்பாற்றுவதற்காகவே அவர் அவதரிக்கிறார். எல்லா கிரக ராசிகளுக்கும் அவரவர் தேவைகளை பகவான் அளித்துள்ளார். அவர்கள் வேத நூல்களில் உள்ள சட்டத்திட்டங்களைப் பின்பற்றி மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி, முடிவில் முக்தி அடைவதற்கு, அவரவருக்கு நியமிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவே வழக்கமான சூழ்நிலையாகும். நித்தியமாக பந்தப்பட்டுள்ள ஆத்மாக்களை திருப்திப்படுத்துவதற்காகவே பௌதிக உலகம் படைக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் ஜடவுலகமே தேவையில்லை. ஆனால் பௌதிக விஞ்ஞானத்தின் சக்தியால் திமிர்பிடித்தவர்களாகி மூலப் பொருட்களை பகவானின் அனுமதியின்றி, சட்டவிரோதமாக, அதுவும் புலன் நுகர்வுக்காக மட்டுமே சுரண்ட அவர்கள் முயல்கின்றனர். அப்பொழுது கீழ்ப்படியாதவர்களை தண்டித்து, பக்தர்களைக் காக்க பகவானின் அவதாரம் தேவைப்படுகிறது.
அவர் அவதரிக்கும்பொழுது, அவரது உயர்ந்த அதிகாரத்தை நிரூபிப்பதற்காகவே அமானுஷ்யமான செயல்களைச் செய்து, இராவணன், ஹிரண்யகசிபு மற்றும் கம்சனைப் போன்ற பௌதிகவாதிகளை சரியாகத் தண்டிக்கிறார். வேறு யாராலும் பின்பற்ற முடியாத வகையில் அவர் செயற்படுகிறார். உதாரணமாக, பகவான் ஸ்ரீ இராமராகத் தோன்றியபொழுது, இந்து மகா சமுத்திரத்தில் பாலம் அமைத்தார். அவர் கிருஷ்ணராகத் தோன்றியபொழுது, பூதனா, அகாசுரன், சகடாசுரன் போன்றவர்களையும், பிறகு அவரது தாய்மாமனான கம்சனையும் கொன்றதன் மூலமாக, அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே பல அமானுஷ்யமான செயல்களைச் செய்து காட்டினார். அவர் துவாரகையில் இருந்தபொழுது, 16, 108 அரசகுமாரிகளை மணந்ததுடன், அவர்கள் அனைவருக்கும் அதிகமான புத்திர பாக்கியத்தையும் அவர் அருளினார். அவரது சொந்த குடும்ப அங்கத்தினர்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய நூறாயிரமாகும். இவர்கள் யதுவம்சம் எனப் புகழ் பெற்றனர். மேலும் அவரது வாழ்நாளிலேயே அவர்கள் அனைவரையும் அவர் அழித்துவிட்டார். அவர் ஏழு வயதிலேயே கோவர்தன மலையைத் தூக்கியதால், கோவர்தன்-தாரி ஹரி என்று புகழப்பட்டார். பகவான் அவரது காலத்தில் பல விரும்பத்தகாத அரசர்களைக் கொன்றார். மேலும் ஒரு க்ஷத்திரியர் என்ற முறையில் அவர் வீரத்துடன் போரிட்டார். அவர் “அஸமோர்த்வ”, இணையற்றவர் என்று புகழப்படுகிறார். அவருக்குச் சமமானவரோ அல்லது அவரைவிட உயர்ந்தவரோ ஒருவரும் இல்லை.
- ஶ்ரீமத் பாகவதம் 1.10.25
Comments
Post a Comment