கலியுகம் களங்கள் நிறைந்ததாகும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:
கலேர் தோஷ - நிதே ராஜன்
அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:
கீர்த்னாத் ஏவ க்ருஷ்ணஸ்ய
முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்
இக்கலியுகம் அளவற்ற குற்றங்கள் நிறைந்ததாகும். உண்மையில், இது கடலளவு குற்றங்களைக் கொண்டுள்ளது. (தோஷ - நிதி). ஆனால் ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்: ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதாலேயே, கலியுகத்தின் களங்கத்திலிருந்து ஒருவர் விடுபட்டு, அவரது சுயமான ஆன்மீக உடலில், அவர் பரம பதத்தைச் சென்றடைய முடியும், இதுவே கலியுகத்தில் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும்.
கிருஷ்ணர் தோன்றிபோது, அவரது கட்டளைகளை அவர் கொடுத்தார். மேலும் கிருஷ்ணரே, ஒரு பக்தராக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக தோன்றியபோது, கலியுகக் கடலை கடப்பதற்கான வழியை அவர் நமக்குக் காட்டினார். அதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பாதையாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றியபோது, இந்த சகாப்தத்தின் ஸங்கீர்த்தன இயக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த சகாப்தம் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஸங்கீர்த்தன இயக்கத்தை ஏற்று, ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதாலேயே, இக்கலியுகத்தலுள்ள வீழ்ந்த ஆத்மாக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும். பகவத்கீதை பேசப்பட்ட குருட்சேத்திரப் போருக்குப் பிறகு, 4,32,000 ஆண்டுகளுக்குக் கலியுகம் தொடரும். இதில் 5,000 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளது. இவ்வாறாக இன்னும் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளன. இந்த 4,27,000 ஆண்டுகளில், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால் 500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதும், 10,000 ஆண்டுகளுக்கு நீடிக்கப் போவதுமான இந்த ஸங்கீர்த்தன இயக்கம், கலியுகத்தின் வீழ்ந்த ஆத்மாக்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது. அவர்கள் இக்கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஏற்று, ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதன் வாயிலாக, பௌதிக வாழ்வின் பிடியிலிருந்து விடுபட்டு, பகவானின் பரலோகத்திற்கு திரும்பிச் செல்லலாம்.
ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் எக்காலத்திலும் சக்தி வாய்ந்ததாகும். ஆனால் இக்கலியுகத்தில் அது விசேஷமான சக்தியைக் கொண்டுள்ளது. ஆகவே சுகதேவ கோஸ்வாமி, பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசிக்கும் வேளையில், இந்த ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தை வலியுறுத்தினார்.
கலேர் தோஷ - நிதே ராஜன்
அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:
கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய
முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்
“எனக்குப் பிரியமான ராஜனே, கலியுகம் குற்றங்கள் நிறைந்ததாக இருப்பினும், இந்த யுகத்தைப் பற்றிய சிறந்த குணமொன்று இருக்கத்தான் செய்கிறது. அது என்னவெனில், ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதாலேயே ஜட பந்தத்திலிருந்து ஒருவர் விடுதலையடைந்து, தெய்வீகமான இராஜ்யத்திற்கு அவரால் ஏற்றம் பெய முடியும்.” (பாகவதம் 12.3.51) பூரண கிருஷ்ண உணர்வில் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளவர்கள், பௌதிக வாழ்வின் பிடியிலிருந்து மக்களை மிகவும் சுலபமாக விடுவிப்பதற்கு, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றி, மனப்பூர்வமாக கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே நமது கடமையாகும். இதுவே மனித சமுதாயத்தின் அமைதிக்கும், செழுமைக்கும் உரிய மிகச்சிறந்த பொதுநலத் தொண்டாகும்.
ஶ்ரீமத் பாகவதம் 8.5.23 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment