அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரையிலிருந்து எடுக்கப்பட்டது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சுமார் ஐந்நூறுவருடங்களுக்கு முன்பு பிரதாபருத்ரர் என்னும் மன்னர் ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தார். அவர் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர். ஜகந்நாத பூரியிலுள்ள ஸ்ரீ ஜகந்நாதரை அவர் வழிபட்டு வந்தார். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியிலே வசிப்பதைக் கேள்விப்பட்டு. அவரை தரிசிப்பதற்கு ஆவல் கொண்டார். ஆனால் கிருஷ்ணருக்கான தூய பக்தித் தொண்டை பிரச்சாரம் செய்வதற்காகத் துறவறம்மேற்கொண்டிருந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு. சந்நியாச வாழ்விற்கான அனைத்து விதிமுறைகளையும் தீவிரமாகப் பின்பற்றியதால், பெளதிக விஷயங்களில் ஈடுபட்டுள்ள மன்னர் பிரதாபருத்ரரைப் போன்றவர்களைச் சந்திப்பதை அவர் விரும்பவில்லை.
பகவான் சைதன்யர் பண்டிதரான சர்வபௌம் பட்டாசாரியரின் இல்லத்தில் தங்கியிருப்பதை அறிந்த மன்னர். சர்வபௌமரைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து. ''வங்காளத்திலிருந்து வந்துள்ள பரம் புருஷர் உங்கள் இல்லத்திலே தங்கியிருப்பதைக் கேள்விப் பட்டேன். பரம தயாளனான அவரை நான் சந்திப்பதற்கு தயவுசெய்து ஏற்பாடு செய்து உதவுங்கள். என்று வேண்டினார். "நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே. ஆனால் அவருடனான சந்திப்பை ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான ஒன்று. அவர் ஒரு சந்நியாசி என்பதால், உலகாயத விஷயங்களிலிருந்து விலகி வாழ்கிறார். கனவில்கூட ஓர் அரசருடனான சந்திப்பை அவர் விரும்பமாட்டார். இருப்பினும் நான் முயற்சி செய்கிறேன். ஆனால் இப்போது அவர் தென்னிந்தியாவிற்கு யாத்திரை சென்றுள்ளார். என்று பட்டாசாரியர் பதிலளித்தார். இதைக் கேட்டதும், "ஏன் அவரைப் போக அனுமதித்தீர்கள்? அவர் காலிலே விழுந்து வணங்கி இங்கேயே இருக்குமாறு ஏன் சொல்லவில்லை? என மன்னர் வினவினார்.
"பகவான் சைதன்யர் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணர். அவர் சுதந்திரமானவர். இங்கேயே தங்க வைக்க முயன்றேன். இருப்பினும் என்னால் முடியவில்லை. " என பட்டாசாரியர் பதிலளித்தார்.
"என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் படித்தவர், அனுபவம் நிறைந்தவர். நீங்களே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை கிருஷ்ணராக ஏற்பதால். நானும் அவரை அவ்வாறே ஏற்கிறேன். அவர் திரும்பி வந்ததும், என் கண்களின் பூரணத்துவத்திற்காக ஒரே ஒருமுறை அவரைப் பார்க்க விரும்புகிறேன்.'' என்று மன்னர் வேண்டினார்.
ஆறு வருடங்கள் கழித்து சைதன்ய மஹாபிரபு பூரிக்குத் திரும்பி வந்தபோது. சர்வபெளமபட்டாசாரியர் மஹாபிரபுவிடம். "மன்னர் பிரதாபருத்ரர் தங்களைக் காணப் பேராவலுடன் இருக்கிறார். நீங்கள் அவரைச் சந்திப்பீர்களா என கேட்கச் சொன்னார்." என்று தெரிவிக்க. சைதன்ய மஹாபிரபு உடனடியாக தனது கரங்களால் இரு காதுகளையும் மூடிக்கொண்டார்.
'எனதருமை பட்டாசாரியரே. ஏன் விரும்பத்தகாத வேண்டுகோளைக் கேட்கிறீர்கள்? நானோ துறவி, மன்னரைச் சந்திப்பது என்பது மங்கையைச் சமமான ஆபத்தை சந்திப்பதற்கு விளைவிக்கும். யாரொருவர் பகவானின் கருணையைப் பெற விரும்புகிறாரோ. அவர்கள் லௌகீகத்தில் மூழ்கியுள்ள வரையோ மங்கையரையோ சந்திப்பது என்பது கொடிய விஷத்தைவிட மிகவும் ஆபத்தானது.
பட்டாசாரியர் பதிலளித்தார்: 'அன்பிற்குரிய பகவானே. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் இவர் சாதாரணமான மன்னர் அல்ல. ஜகந்நாதரின் தூய பக்தரும் சிறந்த சேவகருமாவார்.
"அவர் எவ்வளவு பெரிய பக்தரானாலும், துறவியாகிய நான் கொடிய நாகத்திற்கு இணையாக அவரைக் கருத வேண்டும். நீங்கள் இவ்விஷயத்தைப் பற்றி மீண்டும் என்னிடம் பேசினால், என்னை உங்களால் இனிமேல் இங்கே பார்க்க இயலாது," என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மறுத்துவிட்டார். மீண்டும் மஹாபிரபுவை கோபப்படுத்தாமல் வீடு திரும்பிய பட்டாசாரியர் இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்கலானார்.
இதற்குள் பிரதாபருத்ர மன்னர் தனது தலைநகரான கட்டாக் நகரத்திற்குச் சென்றார். பகவானைச் சந்திக்க ஒப்புதல் வேண்டி பட்டாசாரியருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பினார். "தயவுகூர்ந்து மஹாபிரபுவின் அடியார்களிடம் எனது வேண்டுகோளை எடுத்துக்கூறி மஹாபிரபுவிடம் யாசியுங்கள். தூய பக்தர்களின் கருணையால் பகவானின் பாதகமலங்களில் சரணடைய முடியும். மஹாபிரபு என்மீது கருணை காட்டாவிடில் நான் எனது அரச பதவியைத் துறந்து. ஆண்டியைப் போல வீடுவீடாகச் சென்று யாசகம் செய்வேன்."
இக்கடிதத்தைப் படித்த சர்வபெளம் பட்டாசாரியர் மிகவும் குழம்பிப் போனார். அங்கிருந்த பக்தர்களிடம் கடிதத்தைக் காண்பித்து அரசருடைய விருப்பத்தைத் தெரிவித்தார். பிரதாபருத்ரரின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஆனால் மஹாபிரபு இதற்கு சம்மதிக்கமாட்டார் என்று ஒரு பக்தர் கருத்து தெரிவித்தார்.
''நாம் மீண்டும் ஒருமுறை மஹாபிரபுவை அணுகலாம், ஆனால் மன்னரைச் சந்திக்கும்படி வேண்டுகோள் விடுக்கத் தேவையில்லை. மன்னரின் நற்குணங்களைப் பற்றி மட்டும் பேசலாம்." என்ற பட்டாசாரியரின் ஆலோசனையை ஏற்று, பக்தர்கள் அனைவரும் மஹாபிரபு தங்கியிருந்த இடத்திற்குச் சென்றனர். "நீங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பதன் காரணம் என்ன? என்று மஹாபிரபு வினவினார். அவர்கள் பேச நினைத்தபோதிலும், யாரிடமிருந்தும் ஒரு வார்த்தைகூட வெளியில் வரவில்லை. "ஏதோ பேச வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் பேச மறுக்கிறீர்கள். என்ன காரணம்? என்று மஹாபிரபு மீண்டும் கேள்வி எழுப்பினார்.
மஹாபிரபுவின் மிக நெருங்கிய தோழரான ஸ்ரீ நித்யானந்த பிரபு பதிலளித்தார்: "நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச விரும்புகிறோம். ஆனால் அதைப் பற்றிப் பேசுவதற்கு பயமாக உள்ளது. இருப்பினும். நாங்கள் கூறியே ஆக வேண்டும். தங்களின் தரிசனம் கிடைக்கவில்லையெனில் ஒரிசா மன்னர் தனது அரச பதவியைத் துறந்து ஆண்டியாகிவிடவும் முடிவு செய்துள்ளார். தான் விரும்பிய பொருள் கிடைக்கவில்லையெனில் தன் உயிரைத் துறப்பது பற்றுள்ள மனிதனின் இயல்பாகும்.
மன்னரின் தீவிரமான பக்தியை அறிந்த பக்தர்கள் அவரை தற்கொலை யிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். "ஓர் உபாயம் உள்ளது. நீங்கள் அரசரை சந்திக்காமலேயே அவரை வாழ வைக்க முடியும். தயைகூர்ந்து தங்களது வஸ்திரம் ஒன்றை அவருக்கு அனுப்பி வையுங்கள். அதன்மூலம் தங்களை ஏதாவது ஒருநாள் காணலாம் என்ற எண்ணத்தில் அவர் உயிருடன் இருப்பார். என்று நித்யானந்தர் ஆலோசனை கூறினார்.
பகவான் சைதன்யர் இதற்கு சம்மதம் தெரிவிக்க. நித்யானந்தர் பகவானின் வஸ்திரத்தை பட்டாசாரியரிடம் அளித்து அரசரிடம் சேர்க்கும்படி கூறினார். வஸ்திரம் பெற்ற மன்னர் பகவானை நேரடியாக வழிபடுவதுபோல அவரது ஆடையை வழிபடத் தொடங்கினார்.
மந்திரி மற்றும் பரிவாரங்களோடு கட்டாக் நகரத்திலிருந்து ஜகந்நாத பூரிக்கு மன்னர் வந்து சேர்ந்தார். அவருடன் அவரது ஆளுநர் இராமானந்த ராயரும் வந்திருந்தார். மஹாபிரபுவின் தென்னிந்திய யாத்திரையின்போது
ஏற்கனவே அவரைச் சந்தித்த இராமானந்த ராயர் அவரது மிக நெருங்கிய நண்பராக இருந்தார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னுடன் ஜகந்நாத பூரியில் வந்து தங்குமாறு மஹாபிரபு இராமானந்த ராயரிடம் அழைப்பு விடுத்திருந்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை தினமும் ஒன்றுகூடிப் பேசிப் பகிர்ந்துகொள்வதற்காக அழைத்திருந்தார். இராமானந்த ராயர் ஜகந்நாத பூரிக்கு வந்ததும் மிகுந்த ஆவலுடன் மஹாபிரபுவை சந்திக்கச் சென்றார். ஒருவரையொருவர் வரவேற்றபின் இராமானந்தராயர் கூறினார்: "பிரதாபருத்ர மகாராஜரிடம் பதவியிலிருந்து விலகும்படியான) தங்களின் ஆணையைத் தெரிவித்தேன். என்னால் இனிமேல் அரசாங்க வேலையை தொடர இயலாது. மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் இருக்க விரும்புகிறேன். அதற்கு உத்தரவு தாருங்கள் என அவரிடம் கேட்டேன். தங்களின் திருநாமத்தைக் கேட்டதும் தனது அரியணையிலிருந்து எழுந்து வந்து என்னை அரவணைத்துக் கொண்டார். தங்களின் திருநாமத்தைக் கேட்டதும் ஆனந்தப் பரவச நிலையை அடைந்த அவர் முழு ஊதியத்தையும் ஓய்வூதியமாக அளிக்க சம்மதித்ததுடன், தங்களுக்கு முழு மனதுடன் சேவை செய்யுமாறு என்னை வேண்டிக்கொண்டார். பிறகு தாழ்மையுடன், 'நான் மிகவும் நீச்சமானவன். அதனால் மஹாபிரபுவை சந்திக்கும் தகுதியை நான் பெறவில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஸ்வயம் ஸ்ரீ கிருஷ்ணரே. அவரது சேவை வாழ்வை வெற்றிகரமானதாக்கும். கருணாமூர்த்தியான அவர், இனிவரும் பிறவிகளில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பினை எனக்கு அளிப்பார் என நம்புகிறேன்.' என்று கூறினார். பிரதாபருத்ர மன்னர் தங்கள்மீது கொண்டுள்ள அன்பில் ஒரு சிறு துளிகூட எனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை.'
"அன்பிற்குரிய இராமானந்த ராயரே. நீங்கள் கிருஷ்ண பக்தர்களில் முதன்மை யானவர். யாரொருவர் உங்களுக்கு சேவை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணரின் அருளை நிச்சயம் பெறுவர். மன்னர் தங்கள்மீது வைத்துள்ள பக்திக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அவரைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்,' என் மஹாபிரபு பதிலளிந்தார். அதன் பிறகு இராமானந்த ராயரும் மஹாபிரபுவும் கிருஷ்ணரைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் தொடர்ந்து பேசி மகிழ்ந்தனர்.
அச்சமயத்தில் பட்டாசாரியருக்கு அழைப்பு விடுத்த மன்னர் பிரதாபருத்ரர். அவருக்கு உயரிய ஆசனத்தை அளித்து, "பாவப்பட்ட தாழ்ந்த குலத்தில் பிறந்த எல்லா ஜீவன்களையும் விடுவிக்க மஹாபிரபு தோன்றியுள்ளார். ஆனால் பிரதாபருத்ரன் என்னும் பாவப்பட்ட மன்னனை மட்டும் விடுவிக்க மறுக்கின்றாரே. என்னைத் தவிர்ப்பதில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உறுதியாக இருக்கிறார் என்றால். என் உயிரை விட்டுவிடுவதில் நான் உறுதியாக உள்ளேன்.என வருத்தத்துடன் கூறினார்.
மன்னனின் இந்த உறுதியான முடிவு பட்டாசாரியருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. லௌக்கத்தில் மூழ்கியுள்ளவர்கள் இவ்வளவு தீர்மானமாக இருப்பது இயலாத ஒன்று.
"அன்பிற்குரிய அரசரே. கவலை கொள்ளாதீர், தங்களது இந்த உறுதியான மனப்பான்மை ஸ்ரீ சைதன்ய மஹா பிரபுவின் கருணையைப் பெறுவதில் உதவியாக அமையும். தூய அன்பினால் மட்டுமே இறைவனை அடைய முடியும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மீதான தங்களது அன்பு சந்தேகமின்றி ஆழமானது என்பதால், அவர் தங்களுக்கு நிச்சயம் கருணை காட்டுவார். என்று பட்டாசாரியர் ஆறுதல் கூறினார்.
பட்டாசாரியர் அரசருக்காக மிகவும் இரக்கப்பட்டார். தன்னால் முடிந்த அளவு உதவி செய்ய விரும்பினார். மஹாபிரபுவின் கருணையைப் பெற பின்வரும் ஆலோசனையை அரசருக்கு வழங்கி ஆசி புரிந்தார்: "மஹாபிரபுவை நேரடியாகச் சந்திக்க ஒரே ஒரு வழி உண்டு. ரதயாத்திரை உற்சவத்தின்போது. மஹாபிரபு பாடி ஆடுவார். களைப்படையும்போது அருகிலுள்ள தோட்டத்திற்குச் செல்வார். அச்சமயத்தில் நீங்கள் தனியாக சாதாரண உடை உடுத்தி அங்கு சென்றால். மஹாபிரபுவிற்குத் தொண்டு செய்ய இயலும். கவலைப்படாதீர்கள். இவ்வாறு அரசரை உற்சாகப்படுத்திவிட்டு வீடு திரும்பினார் பட்டாசாரியர்.
அதன் பின்னர். இராமானந்த ராயர் மன்னரின் ஆர்வத்தை மஹா பிரபுவிடம் நினைவுபடுத்திக் கொண்டிருந் தார். தனது நயமான பேச்சினால் மஹாபிரபுவின் மனதை மாற்றினார் இராமானந்த ராயர், "நீங்கள் முழுமுதற் கடவுள். யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை. மஹாபிரபு அதனை மறுத்தார். "நான் முழுமுதற் கடவுள் அல்ல. சாதாரண மனிதன். அதனால் மக்களின் பேச்சிற்கு நான் பயப்படுகிறேன். பொதுமக்கள், சந்நியாசியின் நடத்தையில் சிறிய குற்றத்தை கண்டுபிடித்தாலும். அதை காட்டுத் தீ போல பெரிதாக்கிவிடுவர். வெள்ளைத் துணியில் உள்ள கரும்புள்ளியை மறைக்க முடியாது. அது நன்றாகத் தெரியும், (உண்மையில் ஸ்ரீ சைதன்யர் சாக்ஷாத் முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே. இருப்பினும், பக்தராக வாழ்ந்து காட்டிய அவர். லௌகீகத்தில் உள்ள மன்னரின் தொடர்பு ஒரு சந்நியாசிக்கு அழகல்ல என்றும். மக்களின் விமர்சனம் தனது பிரச்சாரத்திற்குத் தடையை உண்டாக்கும் என்றும் எண்ணினார்)
"அன்பிற்குரிய மஹாபிரபுவே. பல்வேறு பாவப்பட்ட மக்களை நீங்கள் கடைத்தேற்றி இருக்கிறீர்கள். மன்னன் பிரதாபருத்ரன் உண்மையில் தங்களது சேவகரும் சிறந்த பக்தருமாவார்.
'பானை முழுக்க பால் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு துளி மது கலந்தால். தீண்டத்தகாததாகிவிடும். மன்னரிடம் நிறைய நற்குணங்கள் உள்ளன. ஆனால் மன்னர் என்ற அவரது பட்டம் அவையனைத்தையும் நாசமாக்கிவிடுகின்றது. இருந்தாலும், நான் அவரைச் சந்திக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், முதலில் அவரது மகனை அழைத்து வாருங்கள். மகன் தந்தையின் பிரதிநிதி என வேதம் உரைக்கிறது. மன்னரின் மகனைச் சந்திப்பது மன்னரைச் சந்திப்பதற்கு சமமானதாகும்.
இவ்வுரையாடலை அரசரிடம் தெரிவித்த இராமானந்த ராயர் மஹாபிரபுவின் ஆணைக்கிணங்கி இளவரசரை அவரிடம் அழைத்து வந்தார். இளவரசரின் கருநீலத் திருமேனி, பரந்த தாமரைக் கண்கள், மஞ்சள் நிற பட்டாடை. ஆபரணங்கள் ஆகியவை ஸ்ரீ கிருஷ்ணரை அனைவருக்கும் நினைவுபடுத்தின.
இளவரசரைப் பார்த்த மஹாபிரபு, "இவர் சிறந்த பக்தர். இவரைப் பார்ப்பவர் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்கிறார்கள். இச்சிறுவனை அனுப்பியதன் மூலம் அரசருக்கு நான் கடன்பட்டவனானேன்,' என்று புகழ்ந்த வண்ணம் இளவரசரை அரவணைத்தார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அச்சிறுவனின் பாக்கியத்தைப் புகழ்ந்தனர். பிறகு இராமானந்தர் இளவரசனை அரண்மனையில் விட்டுவந்தார். இளவரசனின் அனுபவத்தை கேட்ட அரசர் மகிழ்ச்சியுடன் அவனைத் தழுவினார், பரவச நிலையை அடைந்தார். மஹாபிரபுவை தழுவிக் கொண்டதுபோல உணர்ந்தார்.
வருடந்தோறும் கொண்டாடப்படும் பகவான் ஜகந்நாதரின் ரதயாத்திரை உற்சவம் வந்தது. பகவான் ஜகந்நாதர் மேளதாள வாத்திய முழக்கங்களுடன் ரதத்தில் எழுந்தருளியதை சைதன்ய மஹாபிரபுவும் ஆயிரக்கணக்கான மக்களும் கண்டுகளித்தனர். மன்னர் பிரதாபருத்ரர் ரதத்திற்கு முன்பு வந்து தன் கைப்பட ரதவீதியைக் கூட்டி சுத்தம் செய்து, சந்தனம் கலந்த நீர் தெளித்து ஜகந்நாதருக்கு சேவை செய்தார். மன்னரின் பணிவான சேவையைக் கண்ட மஹாபிரபு அகமகிழ்ந்தார்.
மிகப்பெரிய ரதங்கள் குண்டிசா கோவிலை நோக்கி சாலையில் நகர்ந்தன. பக்தர்கள் உற்சாகத்துடன் 'ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தைப் பாடி ஆடினர். பக்தர்களை ஏழு குழுக்களாகப் பிரித்த சைதன்ய மஹாபிரபு ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு மிருதங்கங்களை அளித்தார். பகவானின் திவ்ய நாமத்தை அனைவரும் ஒன்றுகூடிப் பாடும் இந்த சங்கீர்த்தன முறையைப் பார்த்த மன்னர் ஆச்சரியமடைந்தார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அனைத்து பக்தர்களும் பகவானின் திவ்ய நாமங்களை பாடிப் பரவசமடைந்தனர். மஹாபிரபு, 'ஹரி! ஹரி!'' என்று பாடிக் கொண்டு. தனது இரு கைகளையும் உயர்த்தியபடி "எல்லாப் புகழும் ஐகந்நாதருக்கே என்று உரக்கக் கூறினார். ஏழு இடங்களிலும் தன்னை விரிவுபடுத்தியிருந்த மஹாபிரபு அவ்வெல்லா இடங்களிலும் நடனமாடினார்: இருப்பினும் மக்கள் அவரை ஏதாவது ஓர் இடத்தில் மட்டுமே கண்டனர். ஆனால் ஏழு குழுக்களிலும் மஹாபிரவுவைக் கண்ட மன்னரால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. அதிசயத்தில் மலைத்துப் போனார். அரசரைக் காண்பதற்கு மறுப்புத் தெரிவித்த மஹாபிரபு, தற்போது தனது சக்திகளை அவருக்குக் காண்பித்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.
அனைவரும் ஆடிப் பாடி ஆனந்தத்தில் திளைத்தனர். அவர்களின் திவ்ய ஒலி நாற்புறமும் எதிரொலித்தது. ஜகந்நாதரின் ரதம் குண்டிசா தோட்டத்தை அடைந்ததும் அங்கு நிறுத்தப்பட்டு, பக்தர்களால் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் நைவேத்தியம் செய்யப்பட்டன. தன் மனைவியுடன் வந்திருந்த மன்னர். மந்திரிகள் மற்றும் இதர மக்களும் உணவுகளை நைவேத்தியம் செய்தனர். பெருந்திரளான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
அச்சமயத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தன் நடனத்தை நிறுத்திவிட்டு ஒய்வெடுப்பதற்காகத் தோட்டத்திற்குச் சென்றார். அவருடைய உடல் முழுவதும் வியர்த்திருந்ததால் தோட்டத்தின் குளுமையான காற்று அவருக்கு இதமாயிருந்தது. இதர பக்தர்களும் தங்களது நடனத்தை நிறுத்திவிட்டு தோட்டத்திற்குள் சென்று மரங்களின் நிழலில் இளைப்பாறினர்.
மஹாபிரபு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், பிரதாபருத்ரர் தோட்டத்திற்குள் சென்றார். பட்டாசாரியரின் அறிவுரையை ஏற்று தன் அரச உடைக்குப் பதிலாக எளிய வைஷ்ணவ உடையை அணிந்து வந்தார். பணிவுடன் அங்கிருந்த மற்ற பக்தர்களுக்குத் தன் வணக்கங்களை தெரிவித்த பின்னர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.மஹாபிரபுவின் பாதகமலங்களைத் தொட்டுத் தன் வணக்கத்தை தெரிவித்தார்.
மஹாபிரபுவின் கால்களைப் பிடித்துவிட்ட வண்ணம், ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கோபிகா கீதப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அவற்றைக் கேட்டதும் மஹாபிரபுவின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை, தொடர்ந்து பாடுமாறு வேண்டினார். தவ கதாம்ருதம் என்று தொடங்கும் பாடலைக் கேட்டவுடன், உயர்ந்த பரவசத்தில் எழுந்த மஹாபிரபு மன்னரைத் தழுவிக் கொண்டார்.
அப்பாடலின் பொருள்: "உமது (கிருஷ்ணரது) அமுத மொழிகளும் லீலைகளும் பௌதிக உலகில் துன்பப்படும் ஜீவன்களின் ஜீவனமாகும். உன்னத பக்தர்களால் பரப்பப்படும் இந்த லீலைகள், எல்லா பாவங்களையும் போக்குவதோடு கேட்பவர்களுக்கு நல்லதிர்ஷ்டத்தையும் அளிக்கின்றன. தெய்வீக சக்தியால் நிரம்பியுள்ள இந்த வர்ணனைகள் உலகெங்கிலும் பரப்பப்படுகின்றன. அவ்வாறு உமது செய்திகளைப் பரப்புபவர்களே உண்மையான சமூக சேவகர்கள். (ஸ்ரீமத் பாகவதம் 10.31.9)
"நீங்கள் பரம தயாளன்! பரம் தயாளன்!" பக்திப் பரவசத்துடன் அரசரை அரவணைத்துக் கொண்ட மஹாபிரபு, "நீங்கள் எனக்கு விலையுயர்ந்த வைரத்தை அளித்தீர்கள். ஆனால் என்னிடத்தில் உங்களுக்குத் தருவதற்கு ஒன்றுமில்லை, என்று கூறிக் கொண்டே மீண்டும் அப்பாடலைப் பாடினார். இருவருக்கும் உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. சற்று நேரம் கழித்து, “திடீரென்று இங்கு வந்து ஸ்ரீ கிருஷ்ணரின் லீலாம்ருதத்தைப் பருகச் செய்த தாங்கள் யார்?" என மஹாபிரபு வினவினார்.
"தங்களின் சேவகனின் சேவகன் நான்; தாங்கள் என்னை அவ்வாறு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம், என்று மன்னர் தன்னை அறிமுகப்படுத்தினார். பின்னர், மஹாபிரபு
தனது திவ்யமான ஐஸ்வர்யங்களை அவருக்கு வெளிப்படுத்தினார். அவர் யார் என அறிந்திருந்தும், அறியாததுபோல மஹாபிரபு காட்டிக் கொண்டார்.
மஹாபிரபுவின் தனிப்பட்ட கருணையை அடைந்த மன்னரின் நல்லதிர்ஷ்டத்தைப் பக்தர்கள் புகழ்ந்து மகிழ்ந்தனர். பணிவுடன் தன் வணக்கங்களை பக்தர்களுக்கும் மஹாபிரபுவுக்கும் .தெரிவித்த பின்னர் தோட்டத்தை விட்டு மன்னர் கிளம்பினார்.
இவ்விதமாக, மன்னர் பிரதாபருத்ரர் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணையைப் பெற்றார். மன்னர் என்ற காரணத்தினால் கருணையைப் பெறத் தவறிய பிரதாபருத்ரர், ஜகந்நாதரின் முன்பு சாதாரண வேலைக்காரனைப் போல செய்த பணிவான சேவைகளின் மூலம் அவரின் கருணையை முற்றிலு மாகப் பெற்றார். ஜகந்நாதருக்குத் தொடர்ந்து இடைவிடாமல் தொண்டு செய்துவந்த மன்னர், செல்வமும், பலமும் நிரம்பியிருந்தபோதிலும் தன்னடக்கத் துடன் வாழ்ந்து வந்தார்.
இன்றுவரை, மன்னர் பிரதாபருத் ரரின் வம்சத்தினர் அவரது முன்னுதா ரணத்தைப் பின்பற்றுகின்றனர். தற்போதும்கூட வருடந்தோறும் நடை பெறும் ஜகந்நாதரின் ரதயாத்திரையில் கலந்து கொள்ளும் பூரி மன்னர், துடைப்பத்தைக் கொண்டு ரதத்திற்கு முன்பாக பாதையை சுத்தம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment