அலர்நாதரின் வரலாறு
வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி
பக்தி உணர்ச்சியை தூண்டக்கூடிய சின்னஞ்சிறிய இக்கோயில் ஆன்மீக ஏக்கத்தின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
ஜகந்நாத் புரியில் வருடாந்திர ரத யாத்திரைக்கு முன்பாக பகவான் ஜகந்நாதர் இரண்டு வாரம் ஓய்வெடுக்கும் காலம் அனவஸர எனப்படும். அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அலர்நாத்தில் தங்கியிருப்பார். தனது அன்பிற்குரிய ஜகந்நாதரின் தரிசனமின்றி பகவான் சைதன்யரால் புரியில் தனிமையில் வசிக்க இயலாது. பகவானை பிரிந்த ஏக்கத்தால் எழும் உயர்ந்த ஆன்மீக உணர்ச்சிகளை அவர் அலர்நாத்தில் வெளிப்படுத்துவார்.
அலர்நாத் திருக்கோயில் புரிக்குப் பதினேழு கிலோ மீட்டர் மேற்கில், கடலுக்கு ஐந்து கிலோ மீட்டர் உட்புற நிலத்தில் அமைந்துள்ளது. . அலர்நாத் செல்வதற்கு பகவான் சைதன்யர் கடற்கரையின் ஓரமாக நடந்து செல்வார், ஆனால் இன்று பெரும்பாலான யாத்திரிகள் பேருந்தில் செல்கின்றனர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
பகவான் அலர்நாதர் நான்கு கரங்களுடைய மஹாவிஷ்ணுவாக வீற்றுள்ளார், அவரது வாகனமான கருடன் கைகூப்பி குனிந்து அவரது பாதத்தில் பிரார்த்தனை செய்கிறார், அவரது துணைவியர்களான ஸ்ரீதேவியும் பூதேவியும் உடனுறைந்துள்ளனர். இங்கே கிருஷ்ணரின் இராணிகளான ருக்மிணியும் சத்யபாமாவும்கூட சிறிய விக்ரஹத்தில் காட்சியளிக்கின்றனர். மூலஸ்தானத்திற்குச் செல்லும் கூடத்தின் ஒரு கூரையை பிரம்மதேவர் மற்றும் சிவபெருமானின் வண்ண ஒவியங்கள் அலங்கரிக்கின்றன.
பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் இராமருடனான பகவான் சைதன்யரின் ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்ரீ சைதன்யரின் ஷட்-புஜ விக்ரஹம் ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இந்த விக்ரஹத்திற்கு முன்புறமுள்ள கல்லில் பகவான் சைதன்யரின் உடல் அங்கங்கள் பதிந்த அடையாளம் காணப்படுகிறது. பகவான் அலர்நாதரின் முன்பு பகவான் சைதன்யர் முதன்முதலாக விழுந்து வணங்கியபோது, அவரது பரவசத்தினால் அந்த கல் உருகியுள்ளது.
ஒடிஸா அரசால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் ஐம்பது குடும்பங்களைச் சார்ந்த பிராமணர்கள் சுழற்சி முறையில் பகவானுக்கு சேவை புரிகின்றனர். பரம்பரை பரம்பரையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் பகவானுக்கான ஒரு குறிப்பிட்ட சேவையில் நிபுணர்களாக விளங்கி வருகின்றனர். சிலர் பகவானுக்கு உணவு தயாரிக்கின்றனர், சிலர் சமைத்த உணவைப் படைக்கின்றனர், வேறு சிலரோ, வழிபடுதல், அலங்காரம் செய்தல் போன்ற சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கென்று அறுபது ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது, சில நிலங்கள் பகவானுக்கும் சில நிலங்கள் அவரது சேவகர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆழ்வார்களின் பகவான்
*********
அலர்நாதரின் வரலாறு இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஐதீகம். நான்கு யுகங்களில் முதல் யுகமான ஸத்ய யுகத்தில், பிரம்மதேவரிடம் ஆகாயத்திலிருந்து பேசிய பகவான் நாராயணர், எத்தகைய விக்ரஹத்தை வடித்து வழிபட வேண்டும் என்பதற்கான விளக்கத்தை வழங்கினார்.
“நீங்கள் என்னை இங்கே வழிபட்டதால், இந்த ஸ்தலம் பிரம்மகிரி (பிரம்மாவின் மலை) என்று அழைக்கப்படும்,” என பகவான் நாராயணர் கூறினார்.
காலப்போக்கில், பிரம்மகிரியானது அலர்நாத் என்று அறியப்படத் தொடங்கியது. தற்போதைய கோயில் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தமிழகத்தைச் சார்ந்த ஆழ்வார்களின் வழியில் வந்த சில பிராமணர்களால் வழிபடப்பட்டதால், இங்குள்ள பகவான், ஆழ்வார்நாதர் (ஆழ்வார்களின் இறைவன்) என்று அழைக்கப்பட்டார், அப்பெயர் காலப்போக்கில் அலர்நாத் என்று மருவியது. இன்று இந்த ஸ்தலம் பிரம்மகிரி என்றும் பொதுவாகச் சொல்லப்படுகிறது.
சிறுவனின் திருப்திக்காக உணவு உண்ட இறைவன்
💐💐💐💐💐💐💐💐💐
ஒருசமயம், அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பிராமணர், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மது என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பகவானின் முன்பு உணவை வைத்துவிட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார்.
முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, பகவானுக்கு உணவு கொண்டு வந்த மது, அதனை படைத்து விட்டு, “எனதன்பு பகவானே, இந்த படையலை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சிறுவன் என்பதால் படையலை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது” என்று கூறி பிரார்த்தித்தான்.
அதன் பிறகு, மது தனது நண்பர்களுடன் விளையாடு வதற்காக வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான்.
“பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்பட்டால், அவர் என் மீது கோபப்படுவார். தயவுசெய்து சாப்பிடுங்கள்,” என்று அவன் வேண்டினான்.
மீண்டும் வெளியே சென்று திரும்பி வந்த மது, தட்டில் உணவு இன்னமும் அப்படியே இருப்பதைக் கண்டான். அதை உண்ணுமாறு அவன் மீண்டும் பகவானை கண்ணீர் மல்க வேண்டினான்.
மூன்றாவது முறையாக மது திரும்பி வந்தபோது, பகவானின் முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டு காலியாக இருந்தது.
அந்த காலித்தட்டை மது மகிழ்ச்சியுடன் தனது தாயாரிடம் எடுத்துச் சென்றான்.
“பிரசாதம் எங்கே?” அவள் கேட்டாள்.
“அலர்நாதர் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்!” என்று மது பதிலுரைத்தான்.
தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மதுவும் அவனது குடும்பத்தினரும் பட்டினியாக இருந்தனர்; ஏனெனில், மது எப்போது உணவு படைத்தாலும் பகவான் அதனை முழுவதுமாக சாப்பிட்டு வந்தார்.
ஸ்ரீ கேதனன் திரும்பி வந்து நடப்பவற்றை அறிந்தபோது, தனது மகனைக் கடிந்து கொண்டார்.
“பகவான் அலர்நாதரின் பிரசாதத்தை நீ என்ன செய்தாய்?”
“அவர் சாப்பிட்டு விடுகிறார் தந்தையே. தாங்கள் சொல்லித் தந்தபடியே நான் அவருக்குப் படைத்தேன்.”
“அவர் சாப்பிட்டிருக்க முடியாது. அவர் ஒரு கற்சிலை,” என்று ஸ்ரீ கேதனன் பதிலுரைத்தார்.
இருப்பினும், என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஸ்ரீ கேதனன் விரும்பினார். எனவே, தனது மகன் பகவானுக்கு உணவு படைத்தபோது, அவர் ஒரு தூணிற்குப் பின்னால் மறைந்து கொண்டார். மது சென்ற பின்பு, பகவான் கீழே குனிந்து பாயாசம் இருந்த கிண்ணத்தை எடுப்பதை ஸ்ரீ கேதனன் மறைந்தபடி பார்த்தார். தூணின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ கேதனன், பகவானின் கையைப் பிடிக்க, சூடாக இருந்த பாயாசம் அவரது திருமேனியில் சிந்தியது.
“நிறுத்துங்கள்!” ஸ்ரீ கேதனன் கூக்குரலிட்டார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விக்ரஹம் உணவு உண்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? நீங்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டால், நாங்கள் எவ்வாறு வாழ முடியும்?”
அலர்நாதர் பதிலுரைத்தார்: “பிராமணனின் போர்வையில் உள்ள லௌகீகவாதியே, உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாத மனிதனால் படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. எளிமையான முறையில் அன்புடன் அர்ப்பணித்த காரணத்தினால், மது கொடுத்த உணவை நான் ஏற்று வந்தேன்.”
சூடான பாயாசம் பட்டதால், பகவான் அலர்நாதரின் உடலில் ஏற்பட்ட தழும்புகளை கோயிலில் உள்ள பிராமணர்கள் இன்றும் நமக்குக் காட்டுகின்றனர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment