பத்மினி ஏகாதசி



தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் பத்மினி ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம் ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது இந்த வருடம் ''அதிக' மாதம் வந்துள்ளது.


யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார்,


பரம்பொருளே, மதுஸூதனா! அதிக மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஓ யுதிஷ்டிரா, என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி மகிமை பற்றி உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள்" என்று கூறி தொடர்கிறார்.


விரதம் இருக்கும் நபர், ஏகாதசி முதல் நாளான 'தசமி அன்றே விரதத்தினை தொடங்கி விட வேண்டும். அவர்கள் தசமி அன்று உளுந்து, கொண்டைக்கடலை, கீரை, தேன், உப்பு ஆகியவற்றை உணவில் தவிர்க்க வேண்டும். மேலும், பித்தளை பாத்திரங்களில் சமைத்த உணவினையோ, கடவுள் பக்தி இல்லாதவர்கள் சமைத்த உணவினையோ எடுத்துக் கொள்ளக்கூடாது. அன்று ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு தரையில் விரிப்பு விரித்து இரவு உறங்க வேண்டும்.


பின்னர் பத்மினி ஏகாதசி அன்று காலையில் நீராடும் பொழுது, சிறிது மணலுடன் கலந்த பசுஞ்சாணம், சிறிது நெல்லிப்பொடி மற்றும் சிறிது எள் பசை ஆகியவற்றை உடலில் பூசிக்கொண்டு நீராட வேண்டும்.


அவ்வாறு நீராடும் பொழுது, கங்கையை மனதில் நினைத்துக் கொண்டு நீராட வேண்டும், இதன் மூலம் அவர்கள் கங்கையில் குளித்த புண்யத்தினை பெறுகிறார்கள் அதன் பின்னர், பகவான் விஷ்ணுவை முழு நாளும் தியானித்து எப்பொழுதும் ஸ்ரீ ஹரி நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும். பிறர் பற்றி எந்த குறைகளையும் கூறாமல் இருக்க வேண்டும்.


பின்னர், அன்று முழு இரவும் உறங்காமல் இருந்தால் மிகுந்த பலன் உண்டு. குறைந்த பட்சம் முதல் ஜாமம் உறங்காமல் இருந்தால் அவர்கள், அக்னிஸ்தோமா யாகம் செய்த புண்யம் பெறுவார்கள்.


இரண்டாவது ஜாமம் வரை உறங்காமல் இருந்தால், வாஜ்பேய யாகம் செய்த புண்யம் பெறுவார்கள். மூன்றாவது ஜாமம் வரை உறங்காமல் இருந்தால், அஸ்வமேத யாகம்' செய்த புண்யம் பெறுவார்கள்.


முழு இரவும் உறங்காமல் இருந்தால், 'ராஜசூய யாகம் செய்த புண்யம் பெறுவார்கள். அதன்


பின்னர், ஏகாதசி மறுநாள் துவாதசி அன்று காலை நீராடி விட்டு, தகுதி வாய்ந்த ஒரு சில பிராமணர்களுக்கு தானம் அளித்துவிட்டு அதன் பின்னர் விரதத்தை நிறைவு செய்து தானும் உண்ண வேண்டும்.


யுதிஷ்டிரா, பத்மினி ஏகாதசி பற்றி 'புலஸ்த்ய' முனிவருக்கும், நாரத மகரிஷிக்கும் இடையில் நடந்த புராண கால சம்பாஷணை பற்றியும் கூறுகிறேன் கேள்” என்று சொல்லி தொடர்கிறார்.


ஒருமுறை, நாரத முனி, புலஸ்த்ய முனிவரிடம், தனது சந்தேகத்தை கேட்கிறார். முனிவரே. உலகில் அனைவரையும் வெல்லும் ஆற்றல் கொண்ட இராவணன், எப்படி 'கார்த்தவீர்ய அர்ஜுனனிடம் தோல்வியை தழுவினான்? அதனைப் பற்றி விளக்குங்கள் என்று கேட்கிறார்.


புலஸ்திய முனிவர் அதற்கு, 'ஓ நாரத மகரிஷியே, த்ரேதா யுகத்தில் ஹயவாகு வம்சத்தின் வழி வந்த 'கார்த்தவீர்யன் என்ற மன்னர் மஹிஷ்மதி நகரை ஆண்டு வந்தார். அவருக்கு 1000 ராணிகள் இருந்தனர். 1000 ராணிகள் இருப்பினும் ஒரு முனிவரின் சாபம் காரணமாக அவருக்கு புத்ர பாக்யம் இல்லாமல் இருந்தது. மன்னர் கார்த்தவீர்யன் பல தானங்கள் செய்த போதும் அவரது புதிரபாக்ய வேண்டுதல் மட்டும் பலிக்காமல் இருந்தது.


எனவே அவர் தனது அரண்மனையில் இருந்து புறப்பட்டு முனிவர்கள் இருக்கும் காட்டினை நோக்கி சென்றார். அங்கு முனிவர்களின் வழிகாட்டுதலின்படி யாகங்கள் செய்ய எண்ணினார். அவரது மனைவியர்களில் மிகச் சிறந்த அழகியும், பத்திசாலியுமான பத்மினி' என்பவர் மட்டும் மன்னருடன் வனத்திற்கு செல்ல ஆயத்தமானார். மன்னருக்கு புத்ர பாக்யம் பெற்றுத்தருவது தமது கடமை என்று எண்ணினார் இவர் வேறு யாரும் அல்ல, இஷ்வாகு வழித்தோன்றவில் தோன்றிய ஹரிச்சந்திரனின் புதல்வி ஆவார்


மன்னர் 'கந்தமதனா' எணும் மலை இருக்கக்கூடிய புண்ய தலத்தினை அடைந்து பல ஆண்டுகளாக யாகங்கள் செய்து வருகிறார்.இந்த வேளையில் ராணி பதமினி ரிஷியின் புதல்வியாகிய அனுசுயா தேவியின் இருப்பிடம்சென்று அவரிடம் தமது வேண்டுதலை தெரிவிக்கிறார். மேலும், மன்னர் செய்துவரும் யாகங்கள் பற்றியும் தெரிவிக்கிறார் அனுசுயா தேவியும், ராணி பத்மினியின் மன ஓட்டத்தினை  புரிந்து கொண்டு புத்ரபாக்யம் பெற ஒரு உபாயம் கூறுகிறார். 


ஓ பத்மினி, 32 மாதங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய அதிக மாசத்தில் புருஷோத்தம் மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய துவாதசி இருக்கும் வேளையில் வரக்கூடிய ஏகாதசி விரதத்தினை நீயும், உனது கணவரும் இணைந்து முறையாக அனுஷ்டித்தால், பகவான் ஸ்ரீஹரி உங்களுக்கு வேண்டும் வரம் வழங்குவார் என்று கூறி அருளினார்.


இதனைக்கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்ற ராணி பத்மினி தனது மன்னரிடமும் இதனைத் தெரிவித்து இருவரும் முறையாக, அதிக மாச வளரபிறை ஏகாதசி விரதத்தினை கடைபிடித்தனர். ராணி பத்மினி நீர்கூட அருந்தாமல் விரதத்தை கடைபிடிக்கிறார்.


தங்களது விரதத்தை பிராமணர்களுக்கு உணவளித்து நிறைவு செய்தவுடன் இருவரும் மனமுருகி வேண்டிட, பசுவான் ஸ்ரீ ஹரி, கருட வாகனத்தில் அவர்கள் முன் பிரத்யட்சமாக தோன்றினார் என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி விரதம் இருந்ததின் மூலம் எனது மனம் குளிர்ந்தது எனவே விரும்பும் வரம் கேளுங்கள்' என்று கூறினார்.


இதனைக்கேட்ட மன்னர் கார்த்தவீர்யன் மனம் மகிழ்ந்து மதுஸூதனா உம்மைத்தவிர வேறு யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு புத்திரனை எனக்கு வரமாக அளியுங்கள்' என்று வேண்டினார். பகவான் ஸ்ரீ ஹரியும், அவ்வாறே தந்தோம்' என்று அருளி மறைந்தார். மன்னர் கார்த்தவீர்யனுக்கும் ராணி பத்மினிக்கும் பிறந்த அந்த குழந்தை கார்த்தவீர்ய அர்ஜுனன் என்று நாமம் சூட்டி பின்னாளில் எவராலும் வெல்ல முடியாத அளவு பலம் பெற்று திகழ்ந்தார்.


இந்த புராண விளக்கத்தினை நாரத மகரிஷிக்கு எடுத்துக் கூறிய புலஸ்திய முனிவர். ஓநாரத மகரிஷியே, சிறப்பான பத்மினி ஏகாதசி மூலம் பிறந்து வளர்ந்த காரணத்தினாலேயே கார்த்தவீர்ய அர்ஜுனன், இராவணனை எளிதாக வென்றான்' என்று கூறி முடித்தார்.


இவ்வாறு, பத்மினி ஏகாதசி விரதத்தின் மகிமை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துக்கூறினார். இந்த விரதக் கதையினை கேட்டவர்களும், படித்தவர்களும் மேலும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகிறார்கள் என்றும் கோ தானம் செய்த பலன் பெறுகிறார்கள் என்றும் ஸ்கந்த புராணம் எடுத்துரைக்கின்றது.


ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மத்தில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும் பத்மினி ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை


🌷வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளைகளோ இருக்கலாம்.)


🌷வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.


🌷வாய்ப்பு இருப்பவர்கள். அன்று நாள் முழுவதும் பகவானின் புனித நாமத்தை ஜபிக்கலாம்.


🌷வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசிசெடியை சாற்றி வழிபடலாம்.


விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம் செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more