எளிய வாழ்வினாலும், உயர்ந்த சிந்தனை

 



பிபந்தி யே பகவத ஆத்மன: ஸதாம்
கதாம்ருதம் ஸ்ரவண-பூதேஷு ஸம்ப்ருதம்
புனந்தி தே விஷய-விதூஷிதாசயம்
வ்ரஜந்தி தச்-சரண-ஸரோருஹாந்திகம்


மொழிபெயர்ப்பு


பக்தர்களின் அன்புக்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அமிர்கம் போன்ற கதைகளை செவிகள் மூலமாக அருந்துபவர்கள், ஜட இன்பமெனும் களங்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தை புனிதப் படுத்தி, பரமபதத்தை, அவரது (முழுமுதற் கடவுள்) தாமரைப் பாதங்களைச் சென்றடைகின்றனர்.


பொருளுரை


ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம். புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான, ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது. இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது. உணவு தானியங்கள், பால், பழம், மரம், கல், சர்க்கரை, பட்டு நூல், இரத்தினங்கள், பருத்தி, உப்பு, நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத் தேவைகள் பூரணமாக பகவானால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரபஞ்சத்திலுள்ள மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், அதிலுள்ள ஒவ்வொரு கிரகத்திலும் வாழும் உயிரினங்களுக்கும், உணவு வழங்குவதற்கும், அவற்றின் நலத்தைப் பேணுவதற்கும் போதுமான அளவுக்கு பகவான் அளித்துள்ளார். தேவைகளைப் பூர்த்தி செய்பவர் பூரணமானவராவார். மேலும் மனிதன் இத்தேவைகளை பெறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டுமே சிறிது தேவைப்படுகிறது. செயற்கையான முறையில் வாழ்வின் வசதிகளை உண்டாக்கும் இயந்திரங்கள், கருவிகள் அல்லது மிகப்பெரிய இயந்திர சாதனங்கள் ஆகியவை தேவையில்லை. செயற்கையான தேவைகளினால் வாழ்வைச் சுகமானதாக மாற்றிக் கொள்ளவே முடியாது. ஆனால் எளிய வாழ்வினாலும், உயர்ந்த சிந்தனையாலும் அது சாத்தியமாகும். மனித சமூகத்திற்கேற்ப மிகப் பக்குவமான சிந்தனையை சுகதேவ கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அது ஸ்ரீமத் பாகவதத்தை போதுமான அளவுக்கு கேட்பதாகும். வாழ்வின் பக்குவமான பார்வையை இழந்துவிட்ட கலியுக மனிதனுக்கு, உண்மை வழியை காண்பதற்குரிய ஒளிவிளக்காக இருப்பது இந்த ஸ்ரீமத் பாகவதமாகும். ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி இப்பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கதாம்ருதம் என்ற சொல்லின் மீது விமர்சனம் செய்திருப்பதுடன், ஸ்ரீ மத் பாகவதம் முழுமுதற் கடவுளின் அமிர்தத்தை ஒத்த கதை என்றும் குறிப்பிட்டுள்ளார். போதுமான அளவுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதால், ஜடத்தை ஆண்டனுபவிக்க வேண்டுமெனும் கறைபடிந்த நோக்கம் தணிந்து, உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள பொது மக்களால் அறிவும், ஆனந்தமும் கொண்டதோர் அமைதியான வாழ்வை வாழ முடியும்.

தூய பக்தனுக்கு பகவானின் பெயர், புகழ், இயல்பு, பரிவாரம் போன்றவைகளுடன் சம்பந்தப்பட்ட எல்லா சக்திகளும் முழு திருப்தி அளிப்பவையாகும். இத்தகைய சங்கதிகள் நாரதர், ஹனுமான், நத்த மகாராஜன் மற்றும் பிற பிருந்தாவன வாசிகள் போன்ற சிறந்த பக்தர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இவை நிச்சயமாக திவ்யமானவையும், இதயத்திற்கும் ஆத்மாவிற்கும் இன்பமளிப்பவையும் ஆகும்.

பகவத் கீதையின் செய்திகளையும், அதன் பின் ஸ்ரீமத் பாகவதத்தின் செய்திகளையும் இடைவிடாமல் கேட்பதால், ஒருவன் பரமபுருஷ பகவானை அடைந்து, மிகப் பெரியதொரு தாமரைப் பூவை ஒத்திருக்கும் கோலோக பிருந்தாவனம் என்ற ஆன்மீக உலகில் அவனுக்கு உன்னத அன்புத் தொண்டாற்ற இயலும் என்று ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி இங்கு உறுதிமொழி கூறுகிறார்.

இவ்வாறாக, இப்பதத்தில் கூறப்பட்டுள்ளவாறு, நேரடி பக்தியோக முறையாலும் பகவானின் உன்னதமான கதைகளை போதுமான அளவிற்கு கேட்பதாலும், பகவானின் அருவமான விராட் ரூபத்தைத் தியானிக்க வேண்டிய முயற்சி இல்லாமலேயே ஜட களங்கங்கள் நேரடியாக விளக்கப்பட்டு விடுகின்றன. மேலும் பக்தியோகத்தை பயிற்சி செய்வதும், சாதகனொருவன் ஜடக் களங்கத்திலிருந்து தூய்மை பெறவில்லையெனில், அவன் ஒரு போலி பக்தனாகத்தான் இருக்க வேண்டும். இத்தகைய வஞ்சகன் ஜட சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு வேறு பரிகாரம் இல்லை.




( ஶ்ரீமத் பாகவதம் / 2.2.37 / பொருளுரை வழங்கியவர்:  ஶ்ரீல பிரபுபாதர்  )

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more