புருஷோத்தம மாத மகிமை
ஆதாரம் :- பத்ம புராணம்
********************************************************************
முன்னொரு காலத்தில் நைமிசாரண்யம் என்ற புண்ணியஷேத்திரத்தில் ஆயிரக்கணக்கான முனிவர்கள் யக்ஞம் செய்ய ஒன்று கூடினார்கள்.அவர்களது நற்பேரால், பல புண்ணியஷேத்திரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த ஸூதகோஸ்வாமி தனது சீடர்களுடன் அங்கு வந்தார். அங்கு இருந்த முனிவர்கள் இவரை கண்டு உயிரூட்டம் பெற்றார்கள். அவர்கள் எழுந்து அந்த உயர்ந்த மகானிற்கு மரியாதை செலுத்தி, சிறந்த வியாசசனம் அளித்து, கூப்பிய கைகளுடன் அவரை அதில் அமரும்படி வேண்டிக்கொண்டனர்.
நைமிசாரண்யம் முனிவர்கள் கூப்பிய கைகளுடன் சுதகோஸ்வாமியிடம் கீழ்க்கண்டவாறு கேட்டுக்கொண்டார்கள் "ஸூதரே,முழுமுதற்கடவுளின் அற்புத செயல்களைப் பற்றியும், அவரது லீலைகளைப் பற்றியும் தயவு செய்து எங்களுக்கு கூறுங்கள்.அவரை பற்றி ஆயிரக்கணக்கான வரலாறு இருப்பினும், அவற்றில் மிகுந்த பூரணமான ஒன்றை கேட்க விரும்புகிறோம். அதன் மூலமாக இந்த சம்சார கடலிலிருந்து மீண்டு இறைவனின் திருநாட்டிற்கு நாங்கள் திரும்பவேண்டுகிறோம்.
சௌனக மகரிஷியின் தலைமையில் மற்ற முனிவர்களின் இந்த வேண்டுகோளை கேட்ட ஸூதகோஸ்வாமி கீழ்கண்டவாறு கூற தொடங்கினார். "ஓ முனிவர்களே ! தயவு செய்து நான் கூறுவதை கேளுங்கள். நான் முதலில் புஸ்கர தீர்த்ததிற்கு சென்றேன், பிறகு ஆயிர கணக்கான புண்ய ஸ்தலங்களுக்கு சென்ற பிறகு ஹஸ்தினபுரத்தை அடைந்தேன். அங்கு கங்கை கரையில்,ஆயிரகணக்கான முனிகள் பரிஷித் மஹாராஜாவுடன் அமர்ந்திருப்பதை கண்டேன். அப்பொழுது சிறந்த முனியான ஸுகதேவர் தோன்றினார், மேலும் அங்கு இருந்த அனைத்து முனிவர்களும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து கூப்பிய கைகளுடன் தங்களது மரியாதையை செலுத்தினர். எல்லா முனிவர்களும் ஒருமனதாக ஸுகதேவருக்கு வியாசசனத்தைக் கொடுத்து, பரீஷித் மஹராஜாவிற்கு கிருஷ்ணா கதையை கூறும்படி வேண்டினர்.
ஸுதர் கூறினார் "முனிவர்களே, நான் இப்பொழுதுதான் ஹஸ்தினாபுரத்தில், சுகதேவரின் திருவாயால் ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டு வந்துள்ளேன். இப்பொழுது நான் பகவானின் வசீகர செயல்களையும், லீலைகளையும் உங்களுக்கு கூறுகிறேன் என்றார்.
பல காலங்களுக்கு முன்னர் ஒரு முறை, நாரத முனி, நாராயண ரிஷியின் இருப்பிடமான பத்ரிகா ஆஷிரமத்தை அடைந்தார். அவரது பாத கமலங்களிருந்து அலகநந்தா அருவி வழிந்து கொண்டிருந்தது. நாரதர் நாரயணரை நமஸ்கரித்து கீழ்கண்டவாறு துதித்தார். "தேவர்களின் எஜமானனே, கருணையின் கடலே, படைப்புகளின் தலைவனே! உண்மையின் உருவே, உண்மையின் சாரமே , தங்களுக்கு எனது நமஸ்காரங்களை அர்ப்பணிக்கிறேன்”. பகவானே! இந்த ஜட உலகில், அனைத்து ஜீவராசிகளும், தங்களது புலனின்ப மகிழ்ச்சியில் மும்மரமாக இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் வாழ்க்கையின் லட்சியத்தை மறந்துவிட்டனர். ஆதலால் தாங்கள், குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், என்னை போன்ற துறவறத்தை மேற்கொண்ட சந்நியாசிகளுக்கும், தன்னை அறிந்து இறைநாட்டிற்கு செல்ல உதவும் விஷயங்களை தயவு செய்து விளக்குங்கள் என்றார்.
நாரதரின் இந்த இனிமையான வார்த்தைகளை கேட்ட பகவான் நாரயணர் புன்னகைத்தார். ஓ நாரதா! முழுமுதற்கடவுளான பகவான் கிருஷ்ணரின், அற்புத லீலை ஒன்றை கூறுகிறேன் கேள், இது அனைத்து பாவங்களையும் அழித்துவிடும். நீ பகவானின் அனைத்து லீலைகளையும் அறிவாய், இருப்பினும் மற்றவர்களின் பயனுக்காக நீ இதனை கேட்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆதலால் இப்பொழுது நான் மிகசிறந்த புருஷோத்தம மாதத்தின் புகழை கூறுகிறேன். புருஷோத்தம மாதத்தின் புகழானது ஜட உலகின் மகிழ்ச்சியை மட்டும் அளிப்பத்தன்று, வாழ்வின் இறுதியில் இறைநாட்டிற்கு செல்ல எல்லா தகுதியையும் அளிக்கவள்ளது.
நாரதர் கூறினார், "பகவானே நான் கார்த்திகை, சித்திரை போன்ற மாதங்களின் புகழை கேட்டுள்ளேன், ஆனால் எந்த மாதம் புருஷோத்தம மாதம்? கருணையின் கடலே, தயவு செய்து இந்த புனித மாதத்தை பற்றி கூறுங்கள். இந்த மாதத்தை எவ்வாறு புகழ வேண்டும் ? இந்த மாதத்தில் நான் என்ன செய்ய வேண்டும் ? எவ்வாறு நீராட வேண்டும் ? எதனை தானமாக தர வேண்டும் ? எந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்? யாரை வழிப்பட வேண்டும் ? இந்த மாதத்தில் உபவாசம் இருக்க வேண்டுமா ? தயவு செய்து எல்லாவற்றையும் விளக்கமாக கூறுங்கள் என்றார்.
ஸுதர் கூறினார் "ஓ முனிவர்களே நாரதரின் கேள்விகளை கேட்ட பகவான் நாரயணர் தனது தாமரை திருவாயால் கீழ்கண்டவாறு கூறினார் " ஓ நாரதரே நான் முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யுதிஷ்டர மஹராஜருக்கு விவரித்ததை உனக்கு கூறுகிறேன். ஒருமுறை தருமராஜாவான யுதிஷ்டர், சூதாட்டத்தில் தனது ராஜ்ஜியம், அரண்மனை, தர்ம பத்தினியான திரௌபதி ஆகியவற்றை துரியோதனிடம் இழந்தார். அப்பொழுது திரௌபதி துச்சாதனனால் அனைத்து சபையோர் முன்பாக அவமானப் படுத்தப்பட்டாள். ஆனால் துச்சாதனன் திரௌபதியை துயிலுரிக்க முயன்றபொழுது, அவள் பகவான் கிருஷ்ணரால் அந்த கடினமான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றபட்டாள். இந்த நிகழ்ச்சிற்கு பின்னர், யுதிஷ்டர மகராஜா, தனது சகோதரர்களுடன் தனது ராஜ்ஜியத்தை விட்டு, விருந்தவனத்தில் உள்ள காம்யாவனத்தில் வசித்து வந்தனர்.
ஒரு முறை, தேவகியின் மகனான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களை காண காட்டிற்கு சென்றார். திரௌபதி உட்பட அனைத்து பாண்டவர்களும் அவரை கண்டதும் மகிழ்ந்தனர், காட்டில் வசிக்கும் தங்களது கடினமான நிலையை மறந்தனர். கிருஷ்ணரின் தரிசனத்தை பெற்ற அவர்கள் புத்துணர்வு பெற்றதை உணர்ந்தார்கள்.பகவானின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள். பாண்டவர்களின் துயர நிலையை கண்ட கிருஷ்ணர் வேதனை அடைந்தார். அதே சமயம் துச்சாதனின் மீது கோபமும் அடைந்தார். பகவானின் கோபமானது அவர் இந்த பிரபஞ்சத்தையே அழித்து விடுவார் போல இருந்தது, அதனை கண்டு அஞ்சிய பாண்டவர்கள், பணிவான மனநிலையில் அவரை துதிக்க தொடங்கினர். அர்ஜுனனின் பிரார்த்தனையை கேட்ட பகவான் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு கூற தொடங்கினார் "ஓ அர்ஜுனா! நான் உங்கள் அனைவரையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், நான் உங்களது பக்திக்கு கட்டுப்பட்டுள்ளேன். இப்பொழுது நான் உங்களுக்கு புருஷோத்தம மாதத்தின் மகிமையை கூறுகிறேன்.
ஒருமுறை பகவானின் விருப்படி இந்த உலகில் ஒரு உபரி மாதம் தோன்றிற்று. அனவரும் இந்த மாதத்தை மிகுந்த துரதிருஷ்டமான மாதமாய், ஸ்தூல மாதமாய் கருதினர்.எவ்வாறு ஒருவர் மலத்தை சீண்ட மாட்டர்களோ அவ்வாறே இந்த மாதத்தை யாரும் சீண்டவில்லை. அது ஓயாது பாதுகாப்பற்று, இழிக்கப்பட்டு, ஆன்மீக காரியங்களுக்கும், நல்ல காரியங்களுக்கும் தகுதியற்ற மாதமாய் நிராகரிக்கப்பட்டது. அனைத்து மனிதர்களால் நிராகரிக்கப்பட்டு, தொடர்ந்து இழிசொற்களையும், சாபத்தையும் கேட்டு வந்த இந்த மாதம் மிகுந்த துக்கத்தை பெற்றது. அவள் தனது சோகமான நிலையை பகவானிடம் விளக்கி கூற வைகுந்தம் வந்தாள். பகவான் விஷ்ணுவை அவரது சிம்ஹாசனத்தில் கண்ட அவள், மிகுந்த துயரத்துடன் அவரது பாத கமலங்களில் வீழ்ந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவள் பகவானை துதிக்க தொடங்கினாள். "கருணையின் கடலே! எனக்கு யாரும் உதவாதலால் நான் உங்களிடம் வந்துள்ளேன். என்னை உலகில் உள்ள அனைவரும் நிராகரிக்கிறார்கள், சபிக்கிறார்கள். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள், தயவு செய்து உங்களது கருணையை என்னிடத்தில் காட்டுங்கள், என்னை அலட்சியபடுத்தி விடாதீர்கள். இவ்வாறு கூறிய அந்த உபரி மாதம் தொடர்ந்து அழுது அவர் முன்னால் மிக்க துயரத்துடன் அமர்ந்தாள். அவளது பணிவையும், துக்கம் நிறைந்த சூழ்நிலையையும் கண்ட விஷ்ணு அவளிடம் இரக்கம் கொண்டார். அவர் வருத்தப்படாதே ! நான் உனக்கு எல்லா விதமான பாதுகாப்பும் தருகிறேன். தயவு செய்து அழாதே ! எனது பாத கமலங்களில் சரணடைந்த பின்னர் வருத்தப்படுவது முறையல்ல என்றார்.
பகவானின் வார்த்தைகளை கேட்டு தேற்றமடைந்த உபரி மாதம் "ஓ பகவானே ! எனது வேதனை நிலையை நீங்கள் அறிவாய். இந்த மூன்று உலகங்களில் என்னைப் போல வேதனையை அனுபவிப்பவர் யாரும் இல்லை. முதலவாதாக, மற்ற அனைத்து மாதங்களும், வருடங்களும், நாளும், இரவும், திசையும் உனது பாதுகாப்பின் கீழ் உள்ளனர், ஆகையால் அவர்கள் எந்தவித பயமுமின்றி உற்சாகத்துடன் உலா வருகிறார்கள். ஆனால் உபரி மாதமான எனக்கு, பெயரோ, பாதுகாவலரோ, பாதுகாப்பு அளிக்க கணவரோ இல்லை. எல்லா தேவர்களும், மனிதர்களும் என்னை எல்லா நல்ல காரியங்களில் இருந்தும் ஒதுக்கிவிட்டனர். இந்த காரணத்தால் நான் இறக்க வேண்டும் என்றாள். ஓ நாரதரே! இந்த மாதமானது மீண்டும் மீண்டும் நான் இறக்க வேண்டும் ! நான் இறக்க வேண்டும் !நான் இறக்க வேண்டும் ! என்று கூறி பகவானின் பாதங்களில் மயக்கமடைந்தாள்.
பகவானின் வேண்டுகோளுக்கிணங்க கருடன் அவளுக்கு சாமரம்வீசினார். சிறிது நேரத்திற்கு பின்பு கண்விழித்த அவள் மீண்டும் பேச தொடங்கினாள் "இந்த பிரபஞ்சத்தின் இறைவனே எனக்கு உங்களது பாதுகாப்பு வேண்டும், என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்றாள்.பகவான் விஷ்ணு அந்த உபரி மாதத்திடம் கூறினார் "குழந்தாய், தயவுசெய்து புலம்பாதே, கூடிய விரைவில் உனது துன்பம் முடிந்து விடும். எழுந்து என்னோடு முனிவர்களால் கூட அடைய முடியாத கோலோக விருந்தாவனதிற்கு வா. கோலோகம் என்பது கிருஷ்ணர் வசிக்கும் இடம் ஆகும். இங்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது இரு கை உருவத்தோடு, கோபியர்கள் சூழ, தனது நித்ய லீலைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். கோலோக வாசியான ஸ்ரீ கிருஷ்ணரால் உனக்கு துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். ஆதலால், என்னோடு வா" என்றார். அதன் பிறகு, பகவான் விஷ்ணு மலமாஸத்தை (உபரி மாதம்) கை பிடித்து கோலோகம் கூட்டிச்சென்றார்.
சிறிது தூரத்திலிருந்து பகவான் விஷ்ணுவும் மலமாசமும் கோலோகத்தின் ஒளிப்பிழம்பை கவனித்தனர். இந்த பிரகாசமான ஒளிப்பிழம்பால் மலமாசத்தின் கண்கள் தானாக மூடின. அதனால், பகவான் விஷ்ணு மலமாசத்தை தனது பின்னிற்கு தள்ளி நுழை வாயில் நோக்கி சென்றார். அங்கே, நுழை வாயில் காப்பாளன் அவருக்கு மரியாதை செலுத்தினான்.
முழுமுதற் கடவுளின் இருப்பிடம் சென்றவுடன் பகவான் விஷ்ணு, கோபியர் சூழ இருந்த பகவான் கிருஷ்ணரை சந்தித்தார். ரமாதேவியின் கணவரான பகவான் விஷ்ணு, பகவான் கிருஷ்ணருக்கு தனது மரியாதையை தெரிவித்துக்கொண்டார். அழுதுக்கொண்டிருப்பினும், மல மாதத்தையும் பகவான் கிருஷ்ணரின் கமல பாதத்தில் மரியாதை செய்யும்படி பகவான் விஷ்ணு கூறினார். உடனே பகவான் கிருஷ்ணர் வினவினார்" அவள் ஏன் அழுதுக்கொண்டிருக்கிறாள் ? கோலோக விருந்தாவனத்தில் இருப்பினும் அவள் அழுகிறாளே ஏன்?" என்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து இந்த வார்த்தைகளை கேட்ட பகவான் விஷ்ணு, இருக்கையிலிருந்து எழுந்து மல மாதத்தின் துயரமான நிலைமையை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்தார். பாதுகாப்பின்றி இருந்த அந்த உபரி மாதத்தை காக்கும்படி மன்றாடினார். "பகவானே , புருஷோத்தமா ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை தவிர இந்த நரக நிலையில் இருக்கும் உபரி மாதத்தை காத்து இரட்சிக்க யாராலும் முடியாது". இவ்வாறாக கூறி, பகவான் விஷ்ணு கை கூப்பியவாறு, பகவான் கிருஷ்ணர் முன் நின்றார்.
அதன் பிறகு ஸுத கோஸ்வாமி பேச ஆரம்பித்தார், "ஒ முனிவர்களே! பகவான் விஷ்ணு இருக்கையில் அமர்ந்த பிறகு, பகவான் கிருஷ்ணர் அவரிடம் மிகவும் தனிப்பட்ட விஷயத்தை பற்றி கூறினார். அந்த வார்த்தைகளை உங்களிடம் கூறப்போவதால், நீங்கள் அனைவரும் மிகவும் கவனமாக கேளுங்கள்".
புருஷோத்தமரான ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதாவது, "ஒ விஷ்ணு, இந்த உபரி மாதத்தை இங்கே கூட்டிக்கொண்டு வந்தது நீ செய்த நல்ல காரியமாகும். இந்த நடவடிக்கையால் உனது புகழ் இன்னும் அதிகரிக்கும். இந்த மல மாசத்தை நீ ஒப்புக்கொண்டதால், நானும் அவளை ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த மலமாசத்திற்கு என்னை போலவே தரம், புகழ் , செல்வம், உணர்வு, வெற்றி மற்றும் பக்தர்களுக்கு வரம் அளிக்கும் குணங்களை தருகிறேன். இந்த மாதம் என்னை போலவே சக்தி வாய்ந்ததாக இருக்கும். நான் எனது எல்லா தெய்வீக குணங்களையும் இந்த மாதத்திற்கு அளிக்கிறேன், எனது பெயரை கொண்டு இந்த மாதம் புருஷோத்தம மாதமென்று இந்த உலகில் புகழப்படும்.
ஓ ஜனார்த்தனரே ! இவள் எனது எல்லா குணங்களையும் பெற்று இருக்கிறாள், நானே இந்த புருஷோத்தம மாதத்தின் பாதுகாவலரும், கணவனுமாய் இருப்பேன். எனக்கு சமமாய் இருப்பதால் இவள் மற்ற எல்லா மாதங்களுக்கு தலைவியாய் இருப்பாள். இப்பொழுது முதல் இந்த மாதம் எல்லோராலும் வணங்கப்படும் .அனைவரும் இவளுக்கு நமஸ்காரங்ககளை செலுத்த வேண்டும் மற்றும் இவளை வணங்க வேண்டும். இந்த மாதம் என்னை போலவே அதனை பின்பற்றுபவர்களுக்கு எல்லா வரங்களையும் தர வல்லது. இந்த மாதத்தை வழிபடுபவர்களின் எல்லா பாவ விளைவுகளும் சாம்பலை போல எரிந்து விடும், இந்த ஜட உலகில் எல்லா இன்பங்களையும் பெற்று இறை நாட்டிற்கு திரும்புவார்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார் "ஓ கருடத்வஜா!தபஸ் செய்பவர்கள், நற்காரியங்களில் ஈடுப்பட்டுள்ள மகாத்மாக்கள், பிரம்மசாரியத்தை கடைபிடிப்பவர்கள், வாழ்நாள் முழுவதும் நோன்பு மேற்கொள்பவர்களால் கூட எனது கோலோகத்தை அடையமுடியாது. அனால் இந்த புருஷோத்தம மாதத்தை கடை பிடித்து பக்தர்களாகுபவர்கள் இந்த ஜட உலகை கடந்து எனது ஆன்க உலகிற்கு திரும்புவார்கள். அனைத்து தவங்களை காட்டிலும் புருஷோத்தம மாதத்தை கடைபிடிப்பதே சிறந்ததாகும். எவ்வாறு உழவன் சிறந்த அறுவடையை, செழுமையான நிலத்தில் விதைப்பதால் பெறுகிறானோ அவ்வாறே அறிவுள்ளவன் இந்த புருஷோத்தம மாதத்தில் பக்தி தொண்டினை முழுமுதற் கடவுளிடம் செலுத்தி அதன் பயனாய் இந்த உலகில் மகிழ்ச்சியான வாழ்வையும், இந்த உடலை நீத்த பின்பு இறை நாட்டிற்கும் செல்கிறான்".
துரதிர்ஷ்டமாக அறியாமையில் இருக்கும் மனிதன் , எந்த விதமான் ஜபங்களையும் செய்யாமல் இருப்பவன், யாருக்கும் தானம் வழங்காமல் இருப்பவன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், அவரது பக்தர்களுக்கும் மரியாதை அளிக்காமல் இருப்பவன், பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்பவன் , மற்றவர்களிடம் பகைமையை வளர்த்து கொள்பவன் , புருஷோத்தம மாதத்தை தூற்றுபவன் ஆகியோர் அளவற்ற காலம் நரகத்தில் இருப்பார்கள்". பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார் "எவ்வாறு ஒரு மனிதன் இந்த புருஷோத்தம மாதத்தில் பக்தி தொண்டினை செய்யாமல் தனது வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்? "எவன் ஒருவன் புலன் இன்பங்களில் முழ்கி இந்த புனித மாதத்திற்கு முக்கியத்துவம் தர மறுக்கிறானோ அவன் நரகம் செல்லுவதற்கு தகுதியானவன் ஆகிறான். எல்லா மனிதர்களும் இந்த புருஷோத்தம மாதத்தில் சில பக்தி தொண்டினையாவது கீழ்கண்டவாறு செய்ய வேண்டும்.
v பகவான் ஸ்ரீ கிருஷ்ணரான என்னை எனது நாமங்ககளால் ஜபம் செய்தல்
v பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை பாரயணம் செய்தல்,முக்கியமாக பதினைந்தாவது அத்தியாயமான புருஷோத்தோம யோகத்தை பாரயணம் செய்தல்
v தானம் தருதல்
v தினமும் நெய் விளக்கு காண்பித்தல் போன்றவையாகும்
எனது ஆணையை ஏற்று எவன் ஒருவன் இந்த புருஷோத்தம மாதத்தை முறையாக நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறானோ அந்த அதிர்ஷ்டமிக்க நபர் புகழ், செல்வம், நல்ல புத்திரனை இந்த ஜென்மத்திலேயே அடைவான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்த பின்னர் அவர்கள் எனது கோலோக தாமிற்கு வருவான்.ரமா தேவியின் கணவரே (விஷ்ணு) உங்களது இந்த மாதத்தை பற்றியான எல்லா சந்தேகங்களையும் விட்டு விடுங்கள். இந்த புருஷோத்தம மாதத்தை தங்களுடன் உங்களது வைகுந்தத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.
புருஷோத்தம மாதத்தின் சீறிய வரலாற்றை கூறிய பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மிகுந்த கருணையோடு யுதிஷ்டரையும் திரோபதியையும் நோக்கி பின்னர் அர்ஜுனரிடம் பேச தொடங்கினார்.
ஓ சிங்கம் போன்றவனே ! இப்பொழுது புரிகிறதா ஏன் பாண்டவர்களாகிய நீங்கள் துன்ப படுகிறீர்கள் என்று ? சிறிது காலத்திற்கு முன்பு முடிந்த புருஷோத்தம மாதத்தை நீங்கள் அங்கீகரிக்கவில்லை ,அதனை கௌரவிக்கவுமில்லை.விருந்தவன சந்திரனின் அன்பிற்குரிய புருஷோத்தம மாதத்தை காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர்களாகிய நீங்கள் வழிபடவில்லை .அதனால் நீங்கள் துன்பபடுகிறீகள். வியாசர் உங்களுக்கு கொடுத்த சடங்குகளை செய்தீர்கள், அனால் புருஷோத்தம மாதத்தை வழிபடாதவர்களுக்கு என் மீதான தூய பக்தி கிட்டாது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார். நான் தற்போது திரௌபதியின் முந்தய ஜன்மத்தின் மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியை பற்றி கூறபோகிறேன். பூர்வ ஜன்மத்தில் திரௌபதி ஒரு பெரிய பிராமண ரிஷியான மேதாவியின் புதல்வியாவாள். அவளது தாயார் அவள் சிறு குழந்தையாக இருந்தபொழுதே இறந்ததால் அவள் அவளது தந்தையின் பராமரிப்பிலேயே வளர்ந்தாள். அவள் ஒரு அழகி இருப்பினும் அவளுக்கு திருமணம் செய்ய அவளது தந்தை சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவளது தோழியர்கள் தமது கணவனுடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு தனது நாட்களை மிக துயரத்துடன் கழித்தாள். சிறிது காலத்தில் அவளது தந்தை இந்த ஜட உலகை விட்டு ஹரியின் புனித நாமங்களை கூறியவாறு சென்றார்.
இது அவரது மகளை மிகவும் துயரமடைய செய்தது. அதிர்ஷ்டவசமாக சிறந்த முனியான துர்வாசர் அவளது தந்தையின் மறைவிற்கு பின்னர் அவளது ஆஷ்ரமத்திற்கு வந்தார். முனிவரை கண்ட அந்த பெண் அவருக்கு நமஸ்காரங்களை தெரிவித்து, மிகுந்த மரியாதையுடன் அவரை வழிப்பட்டாள். அவருக்கு பூவும், பழமும் அளித்தாள். அவளது வரவேற்பில் மகிழ்ந்ததை முனிவர் தெரிவித்த பொழுது அவள் புலம்பி அழ தொடங்கினாள். கவலைப்பட்ட முனிவர் அவளது புலம்பலைப் பற்றி வினவத்தொடங்கினார். அந்த பிராமண பெண் கூற தொடங்கினாள் "ஓ துருவாச முனிவரே ! எனது கடந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தை நீர் அறிவீர் ! எனக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை. நான் எனது உறவினர்களை இழந்துவிட்டேன். எனது பெற்றோர்கள் இறந்து விட்டனர். எனக்கு மூத்த சகோதரன் என்று யாரும் இல்லை. எனக்கு திருமணமும் ஆகவில்லை ஆதலால் என்னை காப்பாற்ற கணவரும் இல்லை. ஆதலால் முனிவரே தயவு செய்து எனக்கு எதவது செய்து உதவுங்கள்.இந்த துயரத்திலிருந்து விடுப்பட ஏதேனும் உபாயம் கூறுங்கள் என்றாள்.இவளது பிரார்த்தனையை கேட்ட துருவாசர் இவளது துயர நிலையை கண்டு இவள் மீது இரக்கம் கொண்டார். துருவாச முனி கூறினார் "ஓ அழகியே ! இப்பொழுது முதல் மூன்று மாத காலங்களில் மிக சிறந்த மாதமான புருஷோத்தம மாதம் தொடங்கும். இது ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிக உகந்த மாதம் ஆகும்.இந்த புனித மாதத்தில் புனித தீர்த்தத்தில் குளிப்பதால் ஆணோ,பெண்ணோ அவர்களது பாவம் அனைத்தும் அவரை விட்டு நீங்கும். இந்த புருஷோத்தம மாதமானது எல்லா மாதங்களை காட்டிலும் , ஏன் கார்த்திகை மாதத்தை காட்டிலும் சிறந்தது.மற்ற அனைத்து மாதங்களின் புகழ் இதன் பதினாறின் ஒரு பங்கை கூட பெறாது. இந்த மாதத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும் ஒருவருக்கு கிடைக்கும் தகுதியானது 12,000 வருடம் கங்கையில் நீரடுவதால் ஏற்படும் பலனுக்கு ஒப்பானது. அல்லது பிரகஸ்பதி சிம்ம லக்னத்திற்கு செல்லும்பொழுது கங்கையில் அல்லது கோதவரியில் நீராடும் பலனை பெறுகிறான். நீ இந்த மாதத்தில் புனித தீர்த்தத்தில் நீராடினாலோ, தானம் கொடுத்தாலோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்தாலோ, உனது துயரம் அனைத்தும் ஓடி விடும். உனது வாழ்க்கை பூரணமாகும்,உனது ஆசைகள் பூர்த்தியாகும். தயவு செய்து எனது அறிவுரையை கேள்.வரவிருக்கும் புருஷோத்தம மாதத்தை நல்ல முறையில் வழிப்பட மறந்துவிடாதே என்றார்.
இதனை கூறிய பிறகு துருவாச முனி மௌனமானர். துரதிருஷ்டவசமாக அந்த பிரமண பெண் இவரது வார்த்தையை நம்பவில்லை, மாறாக இவரிடம் கோபம் கொண்டு அவரை தூற்ற தொடங்கினாள். "ஓ முனியே நீங்கள் பொய் கூறுகிறீர்கள்." எவ்வாறு இந்த உபரி மாதம், மல மாதம் என்று அழைக்கப்படும் மாதம்,மகம், கார்த்திகை, விஷாக மாதத்தை காட்டிலும் சிறந்ததாய் இருக்க முடியும் ? எனக்கு உங்களது வார்த்தையில் நம்பிக்கை இல்லை. நீங்கள் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள். இந்த உபரி மாதம் எந்த நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்றது அல்ல என்றாள்.
பிரமண பெண்ணின் இந்த வார்த்தையை கேட்ட துருவாச முனி மிக்க கோபம் கொண்டார், அவரது உடல் கொதித்தது, அவரது கண்கள் சிவந்தன. ஆனால் இந்த பெண்ணின் உதவியற்ற நிலையை மனதில் கொண்டு தன்னை கட்டுபடுத்திக் கொண்டார்.
துருவாச முனி கூறினார் "ஓ மூடப்பெண்ணே ! நான் உன்னை சபிக்க மாட்டேன், ஏனெனில் உனது தந்தை எனது நெருங்கிய நண்பர்.நீயும் உதவியற்ற நிலையில் இருக்கிறாய். அறிவற்ற பெண்ணான நீ சாஸ்திரங்களின் இறுதி சுருக்கத்தை அறிய மாட்டாய்.உனது இந்த அபராதத்தை நான் கடுமையாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அதே சமயத்தில் நீ புருஷோத்தம மாதத்திற்கு செய்த அபராதத்தை சுலபமாகவும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ அடுத்த ஜன்மத்தில் இந்த அபராத்திற்கான தண்டனையை அனுபவிப்பாய்". பிறகு துருவாச முனி அந்த இடத்தை விட்டு மிக அவசரமாக பகவானின் சேவையில் ஈடுப்பட சென்றார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரிடம் கூறினார் "ஓ பாவமற்றவனே, துருவாச முனி அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு அந்த பிராமண பெண் (திரௌபதி - முன் ஜன்மத்தில்) ஒரு நொடியில் அனைத்து செல்வத்தையும் இழந்தாள். புருஷோத்தம மாதத்தின் அபராதியான அவளது உடல் கோரமானது, அவளது அழகை இழந்தாள். பிறகு அஷுதோஷ் என்ற பெயரை உடைய, வெகு விரைவில் திருப்தி அடையும் சிவனை வழிப்பட முடிவு செய்தாள்.
இந்த பிராமண பெண், பார்வதியின் கணவணான சிவபெருமானை திருப்திப்படுத்த பெரும் தவத்தை செய்ய தொடங்கினாள். தனது தவத்தை 9000 வருடம் செய்தாள். கோடை காலத்தில்,நெருப்பு சூழ அனல் வீசும் சூரியனின் முன் தியானம் செய்வாள். குளிர் காலத்தில் உறைய வைக்கும் குளிர்ந்த நீரில் தியானம் செய்வாள். அவளது தவத்தை கண்ட தேவர்கள் பயந்தனர். அவளது தபஸ்ஸையும், வழிப்பாட்டு முறைகளையும் கண்டு மகிழ்ந்த சங்கரன், அந்த பிராமண பெண் முன்பு தோன்றினார். சிவன் தனது ஆன்மீக உருவில் அந்த பெண் முன்பு தோன்றியதும் அவள் புத்துணர்ச்சி பெற்றாள்.சிவனின் பிரசன்னத்தால் அவளது உடலின் பலகீனம் மறைந்தது, மீண்டும் அவள் அழகானவள் ஆனாள். சிவனை கண்ட அவள்,தனது மனத்தால் அவரை வழிப்பட தொடங்கினாள், பிறகு சிறந்த ஸ்லோகங்களால் அவரை துதித்து அவரை திருப்திப்படுத்தினாள்.
அந்த பெண்ணிடம் திருப்தி அடைந்த சிவன் அவளிடம், "சிறந்த தவத்தை செய்த பெண்ணே உனக்கு எல்லா நற்பேர்களும் கிடைக்கட்டும்.உனக்கு வேண்டும் வரத்தை கேள். நான் உன்னிடத்தில் திருப்தி அடைந்தேன். உனக்கு வேண்டும் வரத்தை நான் அளிக்கிறேன் என்றார்.
இந்த வார்த்தையை சிவனிடமிருந்து கேட்ட அந்த பெண், "ஏழைகளின் நண்பனே!நீங்கள் என்னிடம் திருப்தி அடைந்தீர்களாயின் தயவு செய்து எனக்கு கணவனை கொடுங்கள். மீண்டும் மீண்டும் "எனக்கு கணவனை கொடுங்கள்" என்று ஐந்து முறை கேட்டு மௌனமானாள். அதற்கு சிவன் பதில் கூறுகையில் "அப்படியே ஆகுக!நீ என்னிடம் ஐந்து முறை கணவன் வேண்டும் என்று கேட்டாய் ஆதலால் உனக்கு ஐந்து கணவர்கள் கிடைப்பார்கள்" என்றார்.
சிவனின் இவ்வார்ததைகளை கேட்ட அவள் அவமானமடைந்தாள். அவள் கூறினாள் "இறைவா ! ஒரு பெண்ணிற்கு ஐந்து கணவன் என்பது வெறுக்க தக்க ஒன்றாகும், எனவே உங்களது வார்த்தையை திரும்ப பெற்று விடுங்கள். சிவன் மிக கடுமையாக கூறினார். "அது என்னால் முடியாது,நீ என்னிடம் கேட்டதை நான் அளித்து விட்டேன்.அடுத்த பிறவியில் உனக்கு ஐந்து கணவர் கிடைப்பார்கள். முன்பாக துருவாச முனியின் அன்பான அறிவுரையை மதிக்காமல் புருஷோத்தம மாதத்தை பழித்தாய். ஓ பிரமண பெண்ணே! எனது உடலுக்கும் துருவாசரின் உடலுக்கும் வித்தியாசம் இல்லை. பிரம்மா, சிறந்த முனியான நாரதர் உட்பட அனைத்து தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளைபடி புருஷோத்தம மாதத்தை வழிபடுகிறோம். புருஷோத்தம மாதத்தின் பக்தர்கள், அனைத்து நற்பேரும் பெற்று, இந்த வாழ்வின் இறுதியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமான கோலோக தாமிற்கு செல்வார்கள். இந்த புனித புருஷோத்தம மாதத்தின் அபராதியான உனக்கு அடுத்த ஜன்மத்தில் ஐந்து கணவர்கள் கிடைக்க கடவாய்" என்றார். அந்த பெண் தனது எதிர் காலத்தை நினைத்து மிக வேதனையையும், பயத்தையும் அடைந்தாள்.இவ்வாறாக சிறிது காலத்திற்கு பிறகு பகவானின் சித்த படி அவளது உடலை நீத்தாள்.
பகவான் கிருஷ்ணர் மேலும் கூறினார், "ஒ அர்ஜுனா, இதற்கு நடுவில் துருபத ராஜா நீண்ட யாகம் செய்து கொண்டிருந்தார். அந்த யாக சுடரிலிருந்து ஒரு இளம் பிராமணி அவதரித்தாள். அவள் மகாராஜா துருபதனின் மகளாக தோன்றினாள். ஒ அர்ஜுனா, மேதாவி ரிஷியின் மகளாகிய அவள், இந்த உலகில் திரௌபதி என்ற பெயரில் மிக பிரசித்தி ஆனாள். அவள் உனது மனைவியே அன்றி வேறு யாரும் இல்லை. அவளது கடந்த பிறவியில் புருஷோத்தம மாதத்தை பற்றி அவதூறாக பேசியதால், அவள் குரு பேரவையில் அனைத்து பாண்டவ புருஷர்கள் முன்னால், துச்சாதனனால் அவமானப்படுத்தப்பட்டாள். அதிர்ஷ்ட வசமாக அவள் என்னை(ஸ்ரீ கிருஷ்ணரை) சரண் அடைந்தாள். அவளை மன்னித்து, துச்சாதனனிடம் இருந்து காப்பற்றி, மிகவும் கடினமான நிலையிலிருந்து மீட்டேன். ஒ, எனதருமை பாண்டவ சகோதரர்களே, தயவு செய்து வரப்போகும் புருஷோத்தம மாதத்தை பூஜிக்கத்தவறாதீர்கள். எவன் ஒருவன் புருஷோத்தம மாதத்தை பற்றி அவதூறாக பேசுகிறானோ, அவனுக்கு என்றும் நல்லது நடக்காது. இந்த புருஷோத்தம மாதமானது உங்களது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி துன்பங்களிலிருந்து விடுவிக்க கூடியது. இச்சமயம் உங்களது பதினான்கு ஆண்டு காட்டு வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது. அதனால் தயவு செய்து இந்த புருஷோத்தம மாதத்தை வழிபட்டு நற்பயனை அடைவீர்கள்". இவ்வாறாக பாண்டவர்களுக்கு முழு ஆறுதல் தந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விடத்திலிருந்து த்வாரகா விரைந்தார்.
அதன் பிறகு புருஷோத்தம மாதம் தோன்றிய பொழுது, மகாராஜா யுதிஷ்திரர் தமது தமையர்கள் மற்றும் மனைவி திரௌபதி ஆகியோருக்கு பகவான் கிருஷ்ணர் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அனைவரும் பகவான் கிருஷ்ணர் கூறிய நெறிமுறைகளை பின்பற்றினர். புருஷோத்தமராகிய ஸ்ரீ கிருஷ்ணரை இந்த மாதத்தில் பல முறைகளில் வழிபட தொடங்கினர். புருஷோத்தம விரதத்தை பின்பற்றிய காரணத்தால் பாண்டவர்கள், தாங்கள் இழந்த இராஜ்ஜியத்தை மீட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து, பகவான் கிருஷ்ணரின் கருணையால் பகவானின் உலகத்தை சென்றடைந்தனர்.
அறிவுள்ள மனிதன் தன்னை ஒரு தூய ஆத்மாவிடம் கிருஷ்ண கதை கேட்பதில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, ஒருவர் சதா கிருஷ்ணரை பற்றி தியானித்தும் அவரது திருவிளையாடலை பற்றி மற்ற பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டும் இருக்க வேண்டும். அவன் ஓய்வு எடுக்கும் போதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி மனதில் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லற வாழ்க்கையை பின்பற்றும் ஒருவர் தனது வீட்டு கடமைகளை உண்மையான மற்றும் சமாதன முறையில் செய்ய வேண்டும். அவர் வன்முறை ஏதும் செய்யாமல், சாதுக்கள் மற்றும் ஏழைகளிடம் கருணையோடு இருக்க வேண்டும். மிருகங்களை பாதுகாத்தல், உண்மையான பேச்சு, கருணைத்தன்மை, மற்றும் அஹிம்சை ஆகியவை ஒரு க்ருஹஸ்தர் பின்பற்ற வேண்டியவன ஆகும்.
சூத கோஸ்வாமி நைமிசரன்யத்தில் இருக்கும் ரிஷிகளிடம், பகவான் நாராயணர் மற்றும் நாரதர் இடையே நடைபெற்ற உரையாடலை பற்றி கூற ஆரம்பித்தார். அவர் கூறியதாவது "ஒ பிராமணர்களே, மிகவும் உயர்ந்த முனியாகிய நாரத முனி புருஷோத்தம மாதத்தின் மகிமையை பற்றி பகவான் நாராயணரிடம் கேட்டு மகிழ்ந்தார். அவர் நாராயணரிடம் நமஸ்காரம் மீண்டும் மீண்டும் செய்த பிறகு கூறுகிறார் "ஒ, இந்த புருஷோத்தம மாதம் என்பது, மாதங்களில் சிறந்தது, இது ஏனைய விரதம் மற்றும் தவங்களை விட சிறந்தது. எவன் ஒருவன் புருஷோத்தம மாதத்தின் மகிமையை நம்பிக்கையுடன் கேட்கின்றானோ, அவன் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ புருஷோத்தமரின் பக்தி தொண்டை அடைந்து, எல்லா பாவ காரியத்தின் விளைவுகளிலிருந்தும் மீள்கிறான். எவன் ஒருவன் புருஷோத்தம மாதத்தை அனுசரிக்கிறானோ அவன் கோலோகத்தின் அளவுக்கு அடங்கா பலனை பெறுகிறான்.
நாரத முனி பகவான் நாராயணரை பார்த்து கூறுகிறார், "ஒ பகவானே, இப்போது நான், எனது மனம் மற்றும் எனது இதயம் முழு மகிழ்ச்சி அடைந்து விட்டது. எல்லா புகழும் உனக்கே!!"
இவ்வாறாக புருஷோத்தம மாதத்தின் மகிமையை பற்றி எடுத்துரைத்த ஸ்ரீல ஸுத கோஸ்வாமி அங்கே கூடியிருந்த ரிஷிகளிடம் அங்கிருந்து கிளம்ப மற்றும் , கங்கையில் குளித்து, பிற தினப்படி காரியங்களை செய்ய அனுமதி கோரினார். அவர்களும் மகிழ்ச்சியுடன் அனுமதி வழங்க, ஸுத கோஸ்வாமி ரிஷிகளிடம் தாழ்ந்து சிரம் தாழ்த்தி வணங்கி விடை பெற்று கங்கை நோக்கி சென்றார். நைமிசாரண்யத்தின் ரிஷிகள் அவர்களிடையே பேச ஆரம்பித்தனர், "ஒ, இந்த புருஷோத்தம மாதம் மிகவும் உயர்ந்த மற்றும் பழமை வாய்ந்தது. இது ஒரு கற்பக விருக்ஷ்த்தை போல் பக்தரின் ஆசையை கருணையோடு நிறைவேற்றுகிறது. என்னே இந்த புருஷோத்தம மாதத்தின் மகிமை!"
இத்துடன் புருஷோத்தம மாதத்தின் புகழ் குறித்த பகுதி நிறைவு பெறுகின்றது. புராணங்களைப் படித்து அதில் இருக்கும் ஒவ்வொரு நெறிமுறையையும் பின்பற்றுவது இந்த கலியுகத்தில் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உதாரணமாக கங்கையில் நீராட வேண்டுமெனில் நாம் வட இந்தியா செல்ல வேண்டும். இது நம்மில் பல பேருக்கு இயலாத காரியம் ஆகும். ஆகவே கலி யுகத்தின் மஹா மந்திரமான ஹரே கிருஷ்ணா மாந்திரம் ஒன்றை மட்டுமே ஜெபித்து நாம் இறந்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமான ஶ்ரீ கோலோக விருந்தாவனத்திற்கு செல்ல முடியும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment