புருஷோத்தம அதிக மாதத்தின் தேய்பிறையில் தோன்றக்கூடிய பரம ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணர் மகாராஜா யுதிஸ்டிரருக்கு விளக்கிக் கூறினார். மகாராஜா யுதிஸ்டிரர் வினவினார். ஓ! எனது பகவானே, புருஷோத்தம அதிக மாதத்தில் தேய்பிறையில் தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயரையும் அதை கடைபிடிக்கும் முறையினைப் பற்றியும் எனக்குக் கூறுங்கள்.
பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார், ஓ! மன்னா! இந்த ஏகாதசியின் பெயர் பரம ஏகாதசி இந்த மங்களகரமான ஏகாதசி ஒருவரின் பாவ விளைவுகள் அனைத்தையும் அழித்துவிடும் மற்றும் ஒருவருக்கு ஜட இன்பத்துடன் முத்தியையும் கொடுக்கும். ஏற்கனவே நான் உன்னிடம் விளக்கியுள்ளபடியே இந்த ஏகாதசியையும் அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து இருப்புகளுக்கும் ஆதாரமான முழு முதற்கடவுளை பூஜிக்க வேண்டும். கம்பில்ய நகரத்தில் முனிவர்கள் கூறிய ஒரு சுவாரஸ்யமான கதையை கூறுகிறேன் கேள்.
கம்பில்ய நகரில் தெய்வ பக்தி மிகுந்த ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் பெயர் சுமேதா, அவருக்கு பவித்ரா என்று ஒரு கற்புள்ள மனைவி இருந்தாள். ஆனால் சில பாவவிளைவுகளால் அந்த அந்தணர் மிகவும் ஏழையானார். பிச்சை எடுத்தும் வாழ்க்கை நடத்த முடியவில்லை. அவருக்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. அணிவதற்கு ஆடை இருக்கவில்லை மற்றும் உறஙகுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. அப்படி இருப்பினும் அழகுடன் கூடிய தன் இளமையான மனைவி உறுதியுடன் அவருக்கு சேவை புரிந்தாள். விருந்தினரை உபசரிப்பதற்காக பல வேளைகளில் தான் பட்டினி கிடந்தாள். பல வேளைகளில் பட்டினியாக இருந்தாலும் தன் முகத்தில் சோர்வு காணப்படவில்லை. இதைப்பற்றி ஒரு பொழுதும் தன் கணவரிடம் கூறியதும் இல்லை. தன் மனைவி நாளுக்கு நாள் மெலிந்து போவதைக் கண்ட அந்தணர் தன்னைத் தானே வெறுத்துக் கொண்டார். இனிமையாக பேசக்கூடிய தன் மனைவியிடம் கூறினார்.
ஓ! பிரியமானவளே! வசதி படைத்தவர்களிடம் யாசிக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் எதுவும் பெற முடியவில்லை. இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? செல்வத்தை சம்பாதிக்க நான் அயல் நாட்டிற்கு செல்லட்டுமா? அதிர்ஷ்டம் இருந்தால் அங்கு எனக்கு ஏதேனும் கிடைக்கலாம் அல்லவா? ஆர்வமும் முயற்சியும் இன்றி எந்த காரியமும் வெற்றி அடையாது. ஆகையால்தான் ஆர்வம் மிக்கவர்களை அறிவாளிகள் எப்பொழுதும் போற்றுவர். தன் கணவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அழகிய விழிகளுடைய பவித்ரா கூப்பிய கைகளோடு கண்ணீர் ததும்ப தன் கணவனிடம் கூறலானாள்; உங்களை விட அதிக அறிவாளி யாரும் இல்லை. இந்த வாழ்க்கையில் நாம் என்னென்ன செய்கிறோமோ எதையெல்லாம் அடைகிறோமா அவையெல்லாம் நம் முற்பிறவியின் கர்மவினைகளே, ஒருவர் முற்பிறவியில் புண்ணியத்தை சேமித்து வைக்கவில்லை எனில், இவ்வாழ்க்கையில் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும், எதையும் அடைய முடியாது. ஒருவர் முற்பிறவியில் அறிவையோ செல்வத்தையோ விநியோகம் செய்திருந்தால், இந்த வாழ்க்கையில் அதனை அடைவார், ஓ! சிறந்த அந்தணரே! நானோ அல்லது நீங்களோ முற்பிறவியில் தகுந்த நபருக்கு எந்தவொரு தானமும் செய்யவில்லை. என்று தோன்றுகிறது. ஆகையால் தான் இங்கு நாம் இருவரும் சேர்ந்து துன்பப்பட வேண்டியுள்ளது.
ஓ! என் எஜமானே! ஒரு கணம் கூட உங்களை பிரிந்து என்னால் இருக்க இயலாது. அது மட்டுமல்லாமல் மக்கள் என்னை ஒரு துர்பாக்கியசாலி என தூற்றுவர். எனவே இங்கு உங்களால் எவ்வளவு செல்வம் சேமிக்க முடியுமோ, அதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். நிச்சயமாக இந்த நாட்டிலே தான் நீங்கள் மகிழ்ச்சி அடைய முடியும். தன் மனைவியின் இந்த வார்த்தை களைக் கேட்ட அந்தணர். அயல்நாட்டிற்கு செல்லும் முயற்சியை கைவிட்டார். ஒரு நாள் கடவுள் அருளால், பெருமுனிவரான கவுன்தின்ய முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டவுடன் சுமேதாவும் தன் மனைவியும் மகிழ்ச்சியடைந்து, முனிவருக்கு தங்கள் வணக்கங்களை சமர்ப்பித்தனர். சுமேதா அந்த முனிவருக்கு ஒரு இருக்கையை அளித்து சரியான முறையில் வணங்கினார். சுமேதா கூறினார். ஓ! பெருமுனிவரே! இன்று உங்கள் தரிசனத்தால் எங்கள் வாழ்க்கை வெற்றியடைந்தது. பிறகு தம்பதியர் தங்களால் இயன்ற அளவு முனிவரை உபசரித்தனர். பிறகு அந்தணரின் மனைவி முனிவரிடம் கேட்டாள்.
ஓ! கற்றறிந்த முனிவரே. ஏழ்மையை எவ்வாறு ஒழிப்பது? எந்த ஒரு தானமும் செய்யாமல் செல்வம், கல்வி போன்றவற்றை எப்படி அடைவது? என் கணவர் செல்வம் சேர்ப்பதற்காக அயல்நாட்டிற்கு செல்ல வேண்டும். என எண்ணினார். ஆனால் நான் அவரை தடுத்து நிறுத்தினேன். உண்மையில் தாங்கள் இங்கு வந்தது எங்கள் நல்ல அதிர்ஷ்டமே. தங்கள் கருணையால் ஏழ்மை எங்களை விட்டு விலகும். தயவு செய்து ஏழ்மையை ஒழிப்பதற்கான அறிவுரையை எங்களுக்கு கூறுங்கள். பவித்ராவிடம் இந்த வார்த்தைகளைக் கேட்ட பெருமுனிவர் கவுன்தின்யா கூறினார். புருஷோத்தம அதிக மாதத்தில் தேய்பிறையில் தோன்றும் ஏகாதசி பரம ஏகாதசி எனப்படுகிறது. இது பகவானுக்கு மிகவும் பிரியமானது. இந்த ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும், ஜடப் பிரச்சனைகளையும், ஏழ்மையையும் அழித்துவிடும். இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால் ஒருவர் செழுமை அடைவார்.
இந்த புனிதமான ஏகாதசியை முதலில் குபேரன் அனுஷ்டித்தார். அதன் பலனாக, சிவபெருமான் திருப்தியடைந்து மிகப்பெரிய செல்வந்தர் ஆகும்படியான வரத்தை குபேரனுக்கு அருளினார். ஹரிஸ் சந்திர மன்னர் இந்த ஏகாதசியை அனுஷ்டித்து இழந்த தன் இராஜ்யத்தையும் மனைவியையும் மீண்டும் பெற்றார். ஓ! அழகிய விழிகள் உடைய பெண்ணே! நீ இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ! பாண்டவ! பரம ஏகாதசியின் பெருமைகளை மகிழ்ச்சியுடன் எடுத்துரைத்த கௌண்டின்ய முனிவர். பஞ்சராத்ரி என்ற மங்களகரமான விரதத்தைப் பற்றியும் கூறினார். பஞ்சராத்ரி விரதத்தை அனுஷ்டிப்பவர் முக்தி அடைவார். பஞ்சராத்ரி விரதத்தை பரம ஏகாதசி நாளன்றே விதிமுறைப்படி அனுஷ்டிக்கத் துவக்க வேண்டும். பரம ஏகாதசி நாள் துவங்கி ஐந்து நாட்கள் தங்கள் திறமைக்கேற்ப உண்ணாவிரதம் மேற் கொள்பவர் தன் தந்தை, தாய் மற்றும் மனைவியுடன் பகவான் விஷ்ணுவின் பரமத்தை அடைவர். யாரேனும் இந்த 5 நாட்களிலும் ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டால், அவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு ஆன்மீக உலகை அடைவார்.
கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி கணவனும் மனைவியும் சரியான முறையில் இந்த பரம ஏகாதசியை அனுஷ்டித்தனர். ஏகாதசி மற்றும் பஞ்சராத்ரி விரதங்கள் முடிவு பெற்ற தருவாயில் அந்நாட்டு இளவரசர் அங்கு வந்தார். பகவான் பிரம்மாவால் ஊக்குவிக்கப்பட்டு, அந்த இளவரசர் அந்த தம்பதியருக்கு அழகான வீட்டுப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு புதிய வீட்டை வழங்கினார். மேலும் ஒரு பசுவை அவர்களுக்கு கொடுத்து அவர்களை புகழ்ந்து விட்டு சென்றார். அதன் பலனாக இளவரசர் தன் வாழ்க்கை முடிந்ததும் விஷ்ணுவின் பரமத்தை அடைந்தார்.
மனிதரில் சிறந்தவர் அந்தணர்கள், விலங்குகளில் சிறந்தது பசு, தேவர்களில் சிறந்தவர்கள் இந்திரன், அதுபோன்றே மாதங்களில் சிறந்தது புருஷோத்தம அதிக மாதம். இந்த மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளான பத்மினி மற்றும் பரம ஏகாதசி பகவான் ஹரிக்கு மிகவும் பிரியமானவை. மனித உடல் பெற்ற பிறகு ஏகாதசியை கடைபிடிக்கவில்லையெனில் அவர் 8400,000 ஜீவராசிகள் வாழ்க்கை முழுவதிலும் எந்த ஒரு மகிழ்ச்சியையும் அடையமாட்டார். மாறாக எண்ணற்ற துயரங்களை அடைவார். மிகுந்த புண்ணியத்தின் காரணமாக ஒருவர் மனிதப் பிறவியை அடைவார். ஆகையால் ஒருவர் நிச்சயமாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதசியின் புகழைக் கேட்ட பிறகு, மகாராஜா யுதிஸ்டிரர் தன் மனைவி மற்றும் தன் சகோதரர்களுடன் இந்த புனிதமான ஏகாதசியை அனுஷ்டித்தார்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment