மொழிபெயர்ப்பு
மகாராஜனே, பெரும் அதிகாரிகள் பகவானின் புனித நாமங்களை இடைவிடாமல் பாடியவண்ணமாக இருக்கின்றனர். அவர்களின் வழியைப் பின்பற்றுவதே சந்தேகமும், பயமும் அற்றதும், அனைவருக்கும் வெற்றி அளிக்கக் கூடியதுமான வழியாகும். இவ்வழி, அனைத்து ஜட ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களுக்கும், ஜட இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், மற்றும் உன்னத அறிவின் பயனாக சுய திருப்தி அடைந்துள்ளவர்களுக்கும் ஏற்றதாகும்.
முகுந்தன் மீதுள்ள பற்றை அடையவேண்டியதன் அவசியம் முந்திய பதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மனிதர்கள் வெவ்வேறு வகையான தொழில்களில் வெற்றி பெற விரும்புகின்றனர். பௌதிக வாதிகள் பொதுவாக ஜட இன்பங்களை முழுமையாக அனுபவிக்க விரும்புகின்றனர். அவர்களை அடுத்துள்ளவர்கள் ஆன்மீகிகள் எனப்படுகின்றனர். இவர்கள் பௌதிக இன்பத்தின் தன்மையைப் பற்றிய முழு அறிவைப் பெற்றிருப்பதால், இத்தகைய மாயைக்குட்பட்டுள்ள வாழ்விலிருந்து விலகி இருப்பதுடன், ஆன்மீகத் தன்னுணர்வினால் அவர்கள் சுய திருப்தி கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களைவிட மேல் நிலையில் உள்ள பகவத் பக்தர்கள், ஜட உலகை அனுபவிக்கவோ அல்லது அதிலிருந்து வெளியேறவோ ஆவலற்றவர்களாக உள்ளனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்தியே இவர்களுடைய இலட்சியமாகும். அதாவது பகவத் பக்தர்கள் தங்களின் சொந்த இலாபத்துக்காக எதையும் விரும்புவதில்லை. பகவான் விரும்பினால், எல்லா வகையான ஜட வசதிகளையும் பக்தர்கள் ஏற்றுக் கொள்ளலாம். அவர் விரும்பவில்லை எனில், முக்தி உட்பட எல்லா வகையான வசதிகளையும் அவர்கள் ஒதுக்கியும் விடலாம். ஸ்ரீகிருஷ்ணரின் திருப்தியை மட்டுமே விரும்புவதால், அவர்கள் சுய திருப்தி கொண்டவர்களும் அல்ல. இப்பதத்தில், பகவானின் தெய்வீகமான புனித நாமங்களைப் பாடும் முறையை ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி சிபார்சு செய்கிறார். பகவானின் புனித நாமத்தை குற்றமற பாடுவதாலும், செவியுறுவதாலும், அவரது உன்னத உருவத்திலும், பின் அவரது இயல்புகளிலும், அதன் பின் அவரது தெய்வீகமான லீலைகளிலும், இன்னும் பிற விஷயங்களிலும் பரிச்சயம் உள்ளவராக ஒருவர் ஆகிறார். பகவானின் புனித நாமத்தை அதிகாரிகளிடமிருந்து கேள்விப்பட்ட பின் அதை ஒருவர் இடைவிடாமல் பாட வேண்டும் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தகுந்த அதிகாரியிடமிருந்து கேட்பதுதான் அடிப்படையானது என்பது இதன் பொருளாகும். பகவானின் புனித நாமத்தை ஒருவன் செவியுறுவதால், அது படிப்படியாக அவனை பகவானின் உருவம், இயல்புகள் மற்றும் லீலை ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு உயர்த்துகிறது. இதனால் அவரது புகழைப் பாட வேண்டுமெனும் ஆவல் அதிகரிக்கிறது. இவ்வழி, பக்தித் தொண்டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும், ஜடப்பற்றில் ஆழ்ந்துள்ளவர்களுக்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. வெற்றி தரும் இவ்வழியை தாமே முடிவு செய்ததாகவும், முந்தைய ஆசார்யர்களிம் கூட இம்முடிவையே செய்திருப்பதாகவும் ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறுகிறார். ஆகவே இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. இவ்வழி, தத்துவார்த்த அறிவின் வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த, முன்னேற்றம் அடைந்துவரும் மாணவர்களுக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வெற்றி அடைந்துவிட்டவர்களான கருமிகள், தத்துவவாதிகள் அல்லது பகவத் பக்தர்கள் ஆகியோருக்கும் கூட இதே வழி சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
பகவன் நாம கீர்த்தனத்தை உரத்த சப்தத்துடன் செய்யவேண்டும் என்பதுடன், பத்ம புராணத்தில் சிபார்சு செய்யப்பட்டுள்ளதைப் போன்று குற்றங்கள் இல்லாமலும் அது செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி உபதேசித்துள்ளார். பகவானிடம் சரணாகதி அடைவதன் மூலமாக, எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்ள முடியும். பகவானின் புனித நாமத்திடம் அடைக்கலம் புகுந்தவன் வாயிலாக, அவரது பாதங்களில் இழைத்துள்ள எல்லாக் குற்றங்களிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்ளலாம். ஆனால் பகவானுடைய புனித நாமத்தின் திருவடிகளில் குற்றம் புரிந்தவனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. இத்தகைய குற்றங்கள் மொத்தத்தில் பத்து உள்ளனவென்று பத்ம புராணம் குறிப்பிடுகிறது. முதல் குற்றம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ள சிறந்த பக்தர்களை நிந்திப்பதாகும். இரண்டாம் குற்றம்,பகவானின் புனித நாமங்களை பௌதிகக் கண்ணோட்டத்தில் காண்பதாகும். எல்லா பிரபஞ்சங்களுக்கும் பகவானே உரிமையாளராவார். இதனால் வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட நாமங்களால் அவர் அறியப்படுகிறார். ஆனால் பகவானின் பூரணத்துவத்தை அது எவ்விதத்திலும் குறைப்பதாகாது. பரம புருஷருக்கென உள்ள ஒவ்வொரு நாமமும் அவரது சிறப்பான இயல்புகளைக் குறிப்பதால் அவையனைத்துமே புனிதமானவைதான். பகவானின் இந்நாமங்கள் அவருக்கு ஈடான சக்தி கொண்டவையாகும். சிருஷ்டியின் எப்பகுதியிலுள்ள எவரும், அவரவருக்கு தெரிந்த எந்த மொழியில் வேண்டுமானாலும் பகவானின் நாமத்தைப் பாடுவதற்கு எத்தடையுமில்லை. அந்நாமங்கள் அனைத்தும் சர்வமங்களம் தருபவையாகையால், அவற்றை பௌதிகமானவை எனக் கருதி அவற்றிற்கிடையில் தராதரம் காணக்கூடாது. மூன்றாவது குற்றம், அங்கீகரிக்கப்பட்ட ஆசார்யர்கள் அல்லது ஆன்மீக குருமார்களின் கட்டளைகளை மீறுவது. நான்காவது குற்றம், சாஸ்திரத்தை அல்லது வேத அறிவை நிந்திப்பது. ஐந்தாவது குற்றம், பகவானின் திருநாமத்திற்கு பௌதிகமான கண்ணோட்டத்தில் அர்த்தம் கற்பிப்பது. இந்நாமம் பகவானோடு முற்றிலும் ஒன்றானதாகும். பகவானுக்கும் அவரது திருநாமத்திற்கும் வேறுபாடில்லை என்பதை ஒருவன் அறியவேண்டும். ஆறாவது குற்றம், புனித நாமத்திற்கு தப்பான அர்த்தம் கற்பித்தல். பகவானும், அவரது திருநாமமும் கற்பனையானவை அல்ல. பகவானை, வழிபடுபவர்களின் கற்பனையில் உதித்த ஒரு மூர்த்தி என்றெண்ணும் குறைந்த அறிவுள்ள மனிதர்களும் உள்ளனர். எனவே, அவரது திருநாமமும் கற்பனையானதே என்று அவர்கள் நினைக்கின்றனர். இத்தகைய மனோநிலையில் பகவானின் நாம கீர்த்தனத்தைச் செய்பவன், தான் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது. ஏழாவது குற்றம், புனித நாமத்தின் வலிமையால் வேண்டுமென்றே பாவங்கள் செய்வது. பகவானின் திருநாமங்களை ஜபிப்பதால் அனைத்து பாவ விளைவுகளிலிருந்தும் ஒருவன் விடுபடமுடியும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பகவானின் திருநாமத்தை ஜபிப்பதால் பாவ விளைவுகளைப் போக்கிவிடலாம் என்று எதிர்பார்த்து, தொடர்ந்து பாவங்களைச் செய்பவன், புனித நாமத்தின் மலர்பாதங்களில் மிகப் பெரிய குற்றம் செய்தவனாகிறான். இத்தகைய குற்றவாளி ஒருவன் சிபார்சு செய்யப்பட்டுள்ள எவ்வகையான பிராயச்சித்தத்தாலும் தன்னை புனிதப்படுத்திக் கொள்ள முடியாது. அதாவது, ஒருவன் புனித நாமத்தை ஜபிக்கும் முன் பாவம் செய்தவனாக இருக்கக்கூடும். ஆனால் பகவானின் புனித நாமத்தில் அடைக்கலம் புகுந்து, அதனால் பாதுகாப்பு அளிக்கப்பட்டபின், புனித நாமத்தை ஜபிக்கும் இம்முறை தனக்குப் பாதுகாப்பை அளிக்குமென்று எதிர்பார்க்காமல், பாவச் செயல்களிலிருந்தும் அவன் உறுதியாக விலகியிருக்க வேண்டும். எட்டாவது குற்றம், பகவானின் திருநாமத்தையும், அதைப் பாடும் முறையையும், அனுகூலமான சில ஜடச் செயல்களுக்கு ஒப்பானவை என்று எண்ணுவது. பௌதிக நன்மைகளை அளிக்கக்கூடிய பல வகையான நற்செயல்கள் உள்ளன. ஆனால் புனித நாமமும், அதை ஜபிக்கும் முறையும் வெறும் புண்ணியச் செயல்கள் மட்டுமல்ல. இப்புனித நாம ஜபம் புண்ணியச் செயல்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்தகைய நோக்கங்களுக்காக அதை உபயோகிக்கக் கூடாது. புனித நாமமும் பகவானும் ஒத்த தன்மையை உடையவர்களாதலால், மனித வர்க்கத்தின் சேவைக்காக அப்புனித நாமத்தை ஈடுபடுத்தக் கூடாது. இதன் கருத்து என்னவென்றால், பரம புருஷர் உன்னத அனுபவிப்பாளராக இருப்பதால், அவர் எவருடைய கட்டளையையும் நிறைவேற்ற வேண்டியவரோ அல்லது அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவரோ அல்ல. அது போலவே பகவானின் புனித நாமம் அவரோடு முற்றிலும் ஒத்தத் தன்மையுடையதாக இருப்பதால், ஒருவன் தன் சொந்த சேவைக்காக புனித நாமத்தை பயன்படுத்திக் கொள்ள முயலக் கூடாது.
ஒன்பதாவது குற்றம், பகவானின் புனித நாமத்தைப் பாடுவதிலும், அதன் உன்னதத் தன்மையைப் பற்றி அறிவதிலும் ஆர்வமற்றவர்களுக்கு இத்தகைய உபதேசம் அளிக்கப்படுமாயின், இச்செயல் திருநாமத்தின் பாதங்களில் செய்யப்படும் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பத்தாவது குற்றம், புனித நாமத்தின் உன்னதத் தன்மையைப் பற்றி கேள்விப்பட்டிருந்தும், அந்நாமத்தில் சிரத்தை கொள்ளாமல் இருப்பது. பகவானின் உன்னத நாமத்தைப் பாடுவதால் விளையும் பயன், அதைப் பாடுபவனுக்கு முக்தியாகக் காட்சி அளிக்கிறது. இது அவனது போலி அகங்காரத்தால் விளைந்ததாகும். தானே உலகை அனுபவிப்பவன், உலகில் உள்ளவை அனைத்தும் தன் சுகத்துக்காக மட்டுமே உள்ளன என்ற எண்ணங்களால் இந்த போலி அகங்காரம் வெளிப்படுத்தப்படுகிறது. ஜட உலகம் முழுவதும் “நான்”, “எனது” என்ற இத்தகைய போலி அகங்காரத்தின் கீழ்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இத்தகைய தப்பான எண்ணங்களிலிருந்து விடுபடுவதுதான் திருநாம ஜபத்தின் உண்மையான பயனாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment