மொழிபெயர்ப்பு
போற்றுதற்குரிய பகவானே! உமது அளவற்ற கருணை வேண்டி
நம்பிக்கையுடன் காத்திருப்பவன், அக்காலக் கட்டத்தில் தான் செய்த முன்னையப் பாவங்களின்
பலன்களைப் பொறுமையுடன் அனுபவித்துக் கொண்டும், தனது மனம், வாக்கு, காயத்தினால் உமக்கு
மரியாதையுடன், தனது வணக்கங்களையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்தானென்றால் அவன் நிச்சயம்
விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையனாவான். ஏனெனில் அவ்விடுதலையானது அவனுக்கு மரபு வழியாக
வரும் உரிமையாகி விடுகிறது.
பொருளுரை
ஸ்ரீல ஸ்ரீதர சுவாமிகள் தனது விளக்க உரையில்,
ஒருவன் தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிப்பதற்கு மரபு வழியாக எவ்வாறு உரிமையுடையவனாகின்றானோ
அது போல பக்தியோக நெறி முறைகளைப் பின்பற்றி கிருஷ்ண உணர்வில் இருப்பவன், முழுமுதற்
கடவுளின் கருணையைப் பெறுவதற்குத் தானாகவே தகுதியுடையவனாகிறான். அதாவது அவன் கடவுள்
இராஜ்ஜியத்திற்கு உயர்வு பெறுகிறான் என்று குறிப்பிடுகிறார்.
ஸு-ஸமீக்ஷமான என்னும் சொல் ஒரு பக்தன் தான்
செய்த முன்னையப் பாவங்களின் பலன்களை வேதனையுடன் அனுபவித்துக் கொண்டிருக்கும்பொழுதும்,
பரமபுருஷ பகவானின் கருணைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறான் என்று குறிப்பிடுகிறது.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தன்னை முற்றிலும் சரணடையும் பக்தன் அவனது முந்தைய
கர்மப் பலன்களை அனுபவிக்க மாட்டான் என்று கூறுகிறார். ஒரு பக்தன் தனது மனதில் தனது
முந்தைய பாவ மன இயல்புகளின் மிச்ச மீதத்தினைச் சுமந்து கொண்டிருக்கும் காரணத்தினால்,
பகவான் அப்பக்தனுக்குத் தண்டனை கொடுப்பதின் மூலம், அனுபவிக்கின்ற வேகத்தின் இறுதித்
தடங்களை இல்லாது நீக்குகிறார். இத்தண்டனை கூடச் சிலசமயம் பாவத்தின் பலன்களைப் போல்
தோன்றலாம். பகவானது படைப்பின் ஒட்டுமொத்த நோக்கமே, பகவான் இன்றிதான் மட்டும் அனுபவிக்க
வேண்டும் என்னும் உயிர் வாழியின் மனப்பான்மையினைச் சரிசெய்வதாகவே இருக்கிறது. ஆகையினாலேயே
ஒரு பாவச் செயலுக்கு அளிக்கப்படும் குறிப்பிட்ட தண்டனையானது, மீண்டும் இது போன்ற பாவச்
செயலைச் செய்யத் தூண்டும் மன இயல்பினை நீக்குவதற்குரிய விதமாகவே வடிவமைக்கப்படுகிறது.
ஒரு பக்தன் பகவானது பக்தித் தொண்டினைச் சரணடைந்திருந்த போதிலும், கிருஷ்ண உணர்வில்
அவன் நிறைவு பெறாதவரை, இவ்வுலகின் பொய்ம்மை இன்பத்தினை அனுபவிக்க வேண்டும் என்னும்
சிறிய நாட்டம் அவனிடத்தில் இருத்தல் கூடும். அதனால் தான் பகவான், மீதமிருக்கும் அனுபவிக்கும்
வேகத்தினை அறவே நீக்குவதற்கான சூழ்நிலையினை உருவாக்குகிறார். ஒரு சீரிய பக்தன் அனுபவிக்கும்
இத்துன்பமானது கர்மப் பலன் அன்று; மாறாக அது அவன் பௌதீக உலகினை நீங்கி, வீடுபேறு பெற்று
முழுமுதற் கடவுளை அடையவேண்டும் என்பதற்காகப் பகவான் அவனிடம் காட்டும் தனிப் பெரும்
கருணையாகும்.
ஒரு சீரிய பக்தன் பகவானின் உறைவிடத்தினை அடைய
வேண்டும் என்னும் தீவிர இச்சையுடையவனாக இருக்கிறான். இதன் காரணமாக அவன் பகவானது கருணைமிகு
தண்டனையினை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, தனது மனம், வாக்கு, காயத்தினால், தனது மரியாதைக்குரிய
வந்தனங்களை அவருக்குத் தொடர்ந்து அர்ப்பணிக்கிறான். இவ்வாறுதான் அனுபவிக்கும் துன்பமெல்லாம்,
பகவானுடன் தான் கொள்ளப்போகும் தொடர்பிற்கான சிறிய விலை என்று கருதும் உண்மையான பக்தன்
கடவுளின் சட்டப்படியான புதல்வனாகிறான். இதைத்தான் இச்சுலோகத்தில் உள்ள தாய-பாக் என்னும்
சொல் குறிப்பிடுகிறது. நெருப்பாக மாறினாலன்றி ஒருவனால் சூரியனை நெருங்க முடியாது என்பதுபோல்.
பரம தூய்மையாக விளங்கும் பகவான் கிருஷ்ணரை, கடினமானத் தூய்மை செய்யும் வழிமுறைகள் இன்றி
ஒருவனால் நெருங்க முடியாது. இவ்வழி முறையானது, துன்பம் போன்று தோன்றாம், ஆனால் உண்மையில்
இது பகவான் தனது திருக்கரங்களினால் செய்யும் பிரி தீர்க்கும் மருத்துவமாகும்.
ஶ்ரீமத் பாகவதம் 10.14.8 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment