கோலோகத்தில் ஶ்ரீ கிரிராஜ கோவர்தனத்தின் உற்பத்தி வர்ணனை.



பஹூலாஸ்வன் கேட்டார்: 'தேவரிஷி கோவர்தனம் சாக்ஷாத் மலைகளின் அரசனும் ஸ்ரீ ஹரிக்குப் பிரியமானதும் என்பது மிக ஆச்சரியமான விஷயமாகும். அதற்கு ஈடாக இப்புவியிலும் வேறு தீர்த்தம் இல்லை, சுவர்க்கத்திலும் கிடையாது. தாங்கள் சாக்ஷாத் ஹரியின் இதயமாயிருப்பவர். ஆகவே இந்த கிரிராஜன் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருமார்பிலிருந்து எப்போது தோன்றினார் என்று கூறுங்கள்.


ஸ்ரீநாரதர் கூறினார்: 'அரசே! கோலோகம் தோன்றிய வரலாற்றைக் கேள். இது ஸ்ரீஹரியின் ஆதி லீலையோடு தொடர்புடையது. மனிதனுக்கு தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லது. இயற்கைக்கு அப்பாலுள்ள சாக்ஷாத் பரிபூர்ணதம பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சர்வசமர்த்தர். நிர்குண புருஷர், அனாதி, ஆத்மா ஆவார். அவரது தேஜஸ் உள்ளார்ந்தது. ஸ்வயம் பிரகாசரான அந்தப் பிரபு எப்போதும் ஆனந்தமயமாயிருப்பவர். அவர்மீது இருப்பிட கர்வம் கொண்ட தேவர்களின் ஈஸ்வரனான காலனும் அதிகாரம் செலுத்த முடியாது. மாயையே அவர்மீது தன் செல்வாக்கைப் பிரயோகிக்க முடியாதென்றால் மஹத்தத்துவம்,சத்வம் முதலான குணங்கள் எப்படி வசப்படுத்த முடியும்? மன்னா! அவரிடம் ஒருபோதும் மனம், சித்தம், புத்தி அகங்காரம் ஆகியவை பிரவேசிக்க முடியாது. அவர் தனது சங்கல்பத்தால் தனது ஸ்வரூபத்திலிருந்தே ஸாகார (உருவமுள்ள) பிரம்மத்தைத் தோற்றுவித்தார்.


முதன்முதலில் பெரிய உடலுடைய சேஷநாகம் தோன்றியது. அவர் தாமரைத் தண்டைப்போல வெண்மை நிறமுடையவராவார். அவருடைய மடியிலேயே உலகம் வணங்கும் பெரிய லோகமான கோலோகம் - எதையடைந்த பிறகு பக்த மானிடர் இவ்வுலகிற்குத் திரும்புவதில்லையோ அந்த கோலோகம் தோன்றியது. பிறகு எண்ணற்ற பிரம்மாண்டங்களுக்குத் தலைவனான கோலோகநாதன் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடித் தாமரையிலிருந்து 'த்ரிபதகா' என்றழைக்கப்படும் கங்கை தோன்றினார். மன்னா!, அதன்பின் ஸ்ரீ கிருஷ்ணனின் இடது கழுத்திலிருந்து நதிகளிற் சிறந்த யமுனை பிறந்தார். அவர் அழகிய தலைப்பாகை வஸ்திரம் பொலிவுறுவதைப்போல மலர் அலங்காரங்களுடன் விளங்கினார். பிறகு ஸ்ரீ ஹரியின் இரு கணுக்கால்களிலிருந்தும் ஹேமரத்தினங்களுடன் திகழும் திவ்யராஸ மண்டலமும் பலவகை அலங்கார சாதனங்களும் தோன்றின. இதன்பின் ஸ்ரீ கிருஷ்ணனின் இரண்டு கெண்டைக் கால்களிலிருந்தும் சபாபவனங்களும் மைதானங்களும் தெருக்களும் மண்டபங்களும் சூழ்ந்த நிகுஞ்ஜம் தோன்றியது. அந்த நிகுஞ்ஜம் வசந்தத்தின் இனிமையை தரிந்திருந்தது.


அதில் கூவும் குயில்களின் மகிழ்ச்சி ஒலி எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. மயில், வண்டு, பல்வேறு நீர்திவிலைகளால் சோபையுடனும் சேவிக்கப்பட்டும் திகழ்ந்தது. மன்னார் பகவானின் இரு முழங்கால்களிலிருந்தும் எல்லா வனங்களிலும் சிறந்ததான ஸ்ரீப்ருந்தாவனம் தோன்றியது. உடன் அந்த பரமாத்மாவின் இரண்டு தொடைகளிலிருந்தும் லீலா சரோவர் தோன்றியது. அவரது இடுப்பிலிருந்து திவ்ய ரத்தினங்கள் இழைத்த ஒளிபொருந்திய ஸ்வர்ண பூமி தோன்றியது. அவரது திருவயிற்றில் உள்ள ரோமாவளிகளே பரவலான மாதவிக் கொடிகளாயின. அந்தக் கொடிகளில் பலவகையான பறவைகளின் கூட்டங்கள் எல்லாப் பக்கங்களிலும் பரவி கலகலவென ஒலி செய்தன. ரீங்காரமிடும் வண்டு அந்தக் கொடிமண்டபங்களின் அழகுக்கு மெருகூட்டின. கொடிகள் அழகிய மலர் மற்றும் பழச்சுமையால் உத்தமகுலப் பெண்டிர் வெட்கத்தாலும் பணிவாலும் தலைகுனிந்திருப்பதைப் போல குனிந்து தலைதாழ்ந்து விளங்கின. பகவானுடைய நாபி கமலத்திலிருந்து ஆயிரக்கணக்கான தாமரைகள் தோன்றி ஹரிலோகமாகிய குளத்தில் இங்குமங்கும் சோபையுடன் திகழ்ந்தன. பகவானுடைய மூன்று வரிசையுடைய இடத்திலிருந்து மெல்ல, குளிர்ந்த காற்று தோன்றியது. அவருடைய கழுத்தின் ஹஸூலிலிருந்து மதுரா, த்வாரகா என்னும் இரண்டு ஊர்கள் தோன்றின.


ஹரியின் இரு புஜங்களிலிருந்தும் ஸ்ரீதாமா முதலான எட்டு பார்ஷதர்கள் (அருகிலேயே இருப்பவர்) தோன்றினர். மணிக்கட்டிலிருந்து நந்தரும், கைமுன் பாகத்திலிருந்து உபநந்தரும் தோன்றினார்கள். ஸ்ரீ கிருஷ்ணனின் புஜங்களின் மூலத்திலிருந்து எல்லா வ்ருஷபானுகளும் தோன்றினர். மன்னா! ஆயர்கள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணனின் ரோம கூபத்திலிருந்து உற்பத்தியானவர்கள். ஸ்ரீ கிருஷ்ணனுடைய மனதிலிருந்து பசுக்களும் தர்மத்தில் சிறந்த காளைகளும் வெளிவந்தன.


மிதிலேசா! அவரது புத்தியிலிருந்து புல்லும் புதர்களும் தோன்றின. பகவான் ஶ்ரீ கிருருஷ்ணரின் இடது தோளிலிருந்து ஒரு ஒளிமயமான வெண்மையான தேஜஸ் வெளிப்பட்டு அதிலிருந்து லீலா, ஸ்ரீ, பூதேவி, விரஜா மற்ற பல ஹரிப்ரியைகள் தோன்றனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடைய  ப்ரியதமையான ஸ்ரீமதி ராதையை மற்றவர்கள் லீலாவதி அல்லது லீலா என்னும் பெயரால் அறிந்து கொள்கிறார்கள். ஸ்ரீமதி ராதையின் இரு புஜங்களிலிருந்தும் விசாகா, லலிதா என்னும் இரண்டு தோழிகளின் தோற்றம் திகழ்ந்தது. மன்னா, மேலும் உடனிருந்த பல கோபியர் அனைவரும் ஸ்ரீராதாராணியின் ரோமத்திலிருந்து தோன்றினார்கள். இவ்விதம் பகவான் மதுசூதன் ஶ்ரீ கோலோக தாமத்தை  ஸ்ருஷ்டித்தார்.


அரசே! இவ்விதம் தனது லோகம் முழுவதையும் அமைத்துவிட்டு எண்ணற்ற பிரம்மாண்டங்களின் தலைவர், பராத்பரர்.பரமாத்மா, பரமேஸ்வரர், பரிபூர்ண தேவர் ஸ்ரீ ஹரி அங்கு ஸ்ரீ ராதாராணியுடன் மிக வனப்புடன் திகழ்ந்தார். அந்த கோலோகத்தில் ஒருநாள் அழகிய ராஸமண்டலத்தில் சலங்கைகள் இனிய ஒலி எதிரொலிப்பதும் குடைமண்டிய முற்றத்தையுடையதும் முத்துச் சரங்களிலிருந்து அமுதமழை பெய்து கொண்டேயிருக்கும் காரணத்தால் ரஸத்துளிகள் பெரிதாய் விழும் அழகுடையதும், மாலதி விதானங்களால், தானே வீழும் மகரந்த மணத்தால் சரஸமாகவும் மணமுடையதும், மிருதங்க, தாள ஒலியும் குழலோசையும்  எல்லாப் பக்கங்களிலும் வியாபித்ததும், இனிய குரலால் பாடப்படும் இசை முதலியவற்றின் காரணமாக மனதைக் கவர்வதும், சுந்தரிகளின் ராஸரஸத்தால் நிறைந்ததும், மனதிற்கு உகந்ததாகவும் இருந்த அந்த ராஸமண்டலத்தின் மத்திய பாகத்தில் திகழ்ந்த கோடி மன்மதனை மயக்கும் ஹ்ருதயவல்லபனோடு ஸ்ரீ ராதா ரஸதானத்தில் தேர்ந்த கடைக்கண் பார்வையால் பார்த்து கம்பீரமான குரலில் கூறலானார்.


ஸ்ரீ ராதா கூறினார்: 'ஜகதீசா! நீங்கள் ராஸத்தில் என் அன்பால் மகிழ்ச்சியடைந்தீர் என்றால் நான் தங்களுக்கு முன்னால் என் மனதிலுள்ள வேண்டுகோளை வெளியிட விரும்புகிறேன்.


ஸ்ரீ பகவான் கூறினார்: 'ப்ரியே!, உன் மனம் விரும்புவதை நீ என்னிடமிருந்து கேட்டுப் பெறலாம். உன் அன்பின் காரணமாக நான் உனக்கு அளிக்க முடியாத பொருளைக்கூட அளித்துவிடுவேன்.


ஸ்ரீ ராதா கூறினார்: 'வ்ருந்தாவனத்தில் யமுனையின் கரையில் திவ்ய நிகுஞ்ஜத்தின் பக்கத்தில் தாங்கள் ராஸரஸத்திற்குத் தகுதியுடைய ஒரு தனிமையான வனப்புள்ள இடத்தைத் தோற்றுவியுங்கள். தேவதேவா இதுவே எனது விருப்பமாகும்.


நாரதர் கூறுகிறார்: 'அப்போது 'அவ்வாறே ஆகுக' என்று கூறிய பகவான் ஏகாந்த லீலைக்குத் தகுந்த இடத்தை சிந்தித்தவாறு தனது தாமரை கண்களால் தன் இதயகமலத்தை நோக்கினார். அதேசமயம் கோபியர் பார்க்கும் போதே , எவ்வாறு பூமியில் இருந்து விதை முளைப்பதை போல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் இதய கமலத்திலிருந்து பிரேமையின் உருவெடுத்த முளையைப்போல ஒரு அடர்த்தியான ஒளி வெளிப்பட்டது. ராஸ பூமியில் விழுந்த அது மலையுருவில் வளர்ந்தது. அந்த திவ்ய மலை முழுவதும் ரத்தின தாதுமயமாக இருந்தது. அழகிய குகைகளும், அருவிகளும் நிறைந்து அழகாகத் திகழ்ந்தது. கதம்ப, வகுள, அசோக முதலான மரங்களாலும் செடி-கொடிகளால் அது மேலும் பொலிவுடன் விளங்கியது. மந்தார குந்த மரங்கள் நிறைந்த அந்த மலையில் பலவகைப் பறவைகள் கலகலவெனும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. விதேஹ மன்னா!, ஒரே கணத்தில் அந்த மலை ஒரு லக்ஷ்ம் யோஜனை விஸ்தாரமாகி சேஷனைப்போல நூறுகோடி யோஜனை நீளமுடயதாகி விட்டது. அதன் உயரம் ஐம்பது கோடி யோஜனை ஆகிவிட்டது. ஐம்பது கோடி யோஜனை பரவிய அந்த மலை எப்போதும் கஜராஜனைப்போல காணப்பட்டது. கோடி யோஜனையுள்ள விசாலமான (அதன்) பல சிகரங்கள் ஒளிமயமாக இருந்தன. அந்த சிகரங்களால் கோவர்தன மலை, தங்கமயமான கலசங்களோடு சோபையுறுவதுபோல மிக அழகுடன் திகழ்ந்தது. ஒரு மாளிகை


சிலர் அந்த மலையை கோவர்தனமென்றும் மற்றவர்கள் சதச்ருங்கமென்றும்(நூறு சிகரங்களை கொண்டது)  கூறுகிறார்கள். இத்தனை விஸ்தாரமாக இருப்பினும் அந்த மலை மனதால் உத்ஸாகத்தில் வளரலாயிற்று. அதனால் கோலோகம் பயத்தால் கலக்கமடைந்தது. எல்லா இடங்களிலும் குழப்பம் உண்டாயிற்று. இதைக்கண்ட ஸ்ரீஹரி எழுந்தார். தன் திருக்கரத்தால் அதை அடித்து (தடவிக்கொடுத்து) வெளிப்படையாக ஏன் வளர்ந்து கொண்டேயிருக்கிறாய்? உலகமனைத்தையும் மறைத்துக்கொண்டு (பரவி) நிலைக்கிறாயா? இந்த உலகங்கள் இங்கிருப்பதை விரும்பவில்லையா? என்று கேட்டு ஸ்ரீஹரி அதை சாந்தப்படுத்தினார். அது பெருகுவதைத் தடுத்தார். அந்த உத்தமமான மலை தோன்றியதைக்கண்ட பகவானின் ப்ரியா ஸ்ரீராதா மிகவும் ஆனந்தமடைந்தார். அவர் அதன் தனிமையான இடத்தில் ஸ்ரீஹரியோடு மிக பொலிவாக விளங்கினார்.


இவ்விதம் இந்த கிரிராஜன் சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணனுடைய பிரமையினாலேயே இந்த வ்ரஜ மண்டலத்திற்கு வந்திருக்கிறது. இது சர்வ தீர்த்த மயமானது. கொடி குஞ்ஜங்களால் ஷ்யாம ஒளி தரித்த இந்த சிறந்த மலை மேகத்தைப்போல ஷ்யாம வண்ணமாகவும் தேவர்கள் விரும்புவதுமாக விளங்குகிறது. பாரதத்தின் மேற்கு திசையில் சால்மத்வீபத்தின் நடுப்பகுதியில் த்ரோணாசலத்தின் மனைவியின் கர்பத்திலிருந்து கோவர்தனம் பிறந்தது. புலஸ்திய மகரிஷி அதை பாரதத்தின் வ்ரஜ மண்டலத்திற்குக் கொண்டு வந்தார். விதேஹா! கோவர்தனத்தின் வருகையைப் பற்றி நான் உன்னிடம் முதலிலேயே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இது முன்பு கோலோகத்தில் உற்சாகத்தோடு வளரத் தொடங்கியதுபோல இங்கும் வளர்ந்தால் அது பூமிக்கே ஒரு மூடி போலாகிவிடும் என்று ஆலோசித்தே முனிவர் த்ரோன புத்திரன் கோவர்தனத்தை ஒவ்வொரு நாளும் குறையும்படி சாபமளித்தார்.


கர்க ஸம்ஹிதை  - கிரிராஜ காண்டம் - அத்தியாயம் 9


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more