க்ரிஷ்ண நாம-மஹா-மந்த்ரேர ஏஇ த' ஸ்வபாவ
ஜேஇ ஜபே, தார க்ரிஷ்ணே உபஜயே பாவ
மொழிபெயர்ப்பு
"'ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பவர் உடனடியாக கிருஷ்ணருக்கான அன்புப் பரவசத்தினை வளர்த்துக்கொள்கிறார். இதுவே அந்த மஹா மந்திரத்தின் சுபாவமாகும்.
பொருளுரை: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பவன் பாவ அல்லது பரவசம் எனப்படும் நிலையை வளர்த்துக்கொள்வதாக இந்த ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில்தான் கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். இஃது ஒருவனது உண்மையான கிருஷ்ண பிரேமையை வளர்ப்பதன் ஆரம்பநிலையாகும். பகவான் கிருஷ்ணர் இந்த பாவ நிலையினை பகவத் கீதையில் (10.8) குறிப்பிடுகிறார்:
அஹம் ஸர்வஸ்ய ப்ரப வோ மத்த: ஸர்வம்' ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம்' புதா பாவ-ஸமன்விதா:
"ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்." ஓர் ஆரம்பநிலை சீடன், ஸ்ரவணம், கீர்த்தனம், பக்தர்களின் சங்கம், விதிமுறைகளைப் பயிற்சி செய்தல் என பக்தித் தொண்டினைத் தொடங்குகிறான்; இவ்வாறாக, அவன் தன்னுடைய தேவையற்ற தீய பழக்கங்கள் எல்லாவற்றையும் அழித்து, அதன் பின்னர், கிருஷ்ணருக்கான பற்றுதலை வளர்த்துக்கொள்கிறான், அவனால் கிருஷ்ணரை ஒருகணம் கூட மறக்க இயலாது. பாவ என்பது ஏறக்குறைய ஆன்மீக வாழ்வின் பக்குவநிலையாகும்.
ஓர் உண்மையான சீடர் ஆன்மீக குருவிடமிருந்து திருநாமத்தைச் செவிவழியாகப் பெறுகிறார், தீக்ஷை பெற்ற பின்னர் ஆன்மீக குருவினால் கொடுக்கப்பட்ட ஒழுக்கநெறிகளைப் பின்பற்றுகிறார். திருநாமம் இவ்வாறு முறையாக சேவை செய்யப்படும்போது, அதன் ஆன்மீகத் தன்மை தானாகப் பரவுகின்றது; வேறுவிதமாகக் கூறினால், பக்தரொருவர் திருநாமத்தினை அபராதமின்றி உச்சரிப்பதற்குத் தகுதி பெறுகிறார். திருநாமத்தை இவ்வாறு உச்சரிப்பதற்கு முழு தகுதியைப் பெறும்போது, அவர் உலகம் முழுவதும் சீடர்களை ஏற்பதற்கான தகுதியைப் பெறுகிறார், உண்மையில் அவர் ஜகத்குருவாக ஆகிறார். அதன் பின்னர், அவருடைய பிரபாவத்தினால் முழு உலகமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர வடிவில் திருநாமத்தை ஜபிக்கத் தொடங்குகிறது. இவ்வாறாக, அத்தகு ஆன்மீக குருவின் எல்லா சீடர்களும் கிருஷ்ணருக்கான பற்றுதலை வளர்க்கின்றனர். இவற்றால், அவர் சில நேரங்களில் அழுகிறார், சில நேரங்களில் சிரிக்கிறார், சில நேரங்களில் ஆடுகிறார், சில நேரங்களில் பாடுகிறார். இந்த அறிகுறிகள் ஒரு தூய பக்தரின் திருமேனியில் தெள்ளத்தெளிவாக வெளிப்படுகின்றன. சில நேரங்களில் எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சீடர்கள் பாடி ஆடும்போது, இந்த வெளிநாட்டினர் இத்தகைய பரவசத்துடன் பாடி ஆடுவதற்கு எவ்வாறு கற்றுக் கொண்டனர் என்று இந்திய மக்கள்கூட ஆச்சரியப்படுகின்றனர். இருப்பினும், உண்மையில் இது பயிற்சியினால் எழக்கூடிய பரவசமல்ல, யாரொருவன் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உண்மையாக உச்சரிக்கின்றானோ அவனில் இத்தகைய அறிகுறிகள் எந்தவொரு தனிப்பட்ட முயற்சியுமின்றி தோன்றுகின்றன என்று சைதன்ய மஹாபிரபு விளக்கியுள்ளார்.
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் தெய்வீக இயற்கையை அறியாத பல்வேறு முட்டாள்கள், சில நேரங்களில் இந்த மந்திரத்தினை நாங்கள் பலமாக கீர்த்தனம் செய்வதைத் தடுக்கின்றனர். இருந்தும், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதன் பக்குவநிலைக்கு உண்மையிலேயே முன்னேறியவர் மற்றவர்களையும் உச்சரிக்கும்படி தூண்டுகிறார். கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி விளக்குகிறார், க்ரி'ஷ்ண-ஷக்தி வினா நஹே தார ப்ரவர்தன,ஒருவர் பரம புருஷ பகவானிடமிருந்து விசேஷ அங்கீகாரத்தைப் பெறாவிடில், அவரால் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் புகழை பிரச்சாரம் செய்ய முடியாது. பக்தர்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைப் பரப்புகையில், உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் திருநாமத்தின் மகிமையினைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பினைப் பெறுகின்றனர். பாடி ஆடும்போது அல்லது பகவானின் திருநாமத்தைக் கேட்கும்போது, ஒருவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளை இயல்பாக நினைவுகொள்கிறார், திருநாமத்திற்கும் கிருஷ்ணருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதால், ஜபிப்பவர் உடனடியாக கிருஷ்ணருடன் தொடர்புகொள்கிறார். அந்தத் தொடர்பினால், ஒரு பக்தர் பகவானின் தொண்டிற்கான தமது மூல சுபாவத்தினை வளர்த்துக்கொள்கிறார். கிருஷ்ணருக்கு இடையறாது சேவை செய்யும் இந்த மனப்பான்மை பாவ என்று அறியப்படுகிறது, இந்நிலையில் அவர் பலதரப்பட்ட வழிகளில் எப்போதும் கிருஷ்ணரை நினைக்கின்றார். இந்த பாவ நிலையை அடைந்தவர் இதன் பின்னர் மாயா சக்தியின் பிடியின் கீழ் இருப்பதில்லை. இந்த பா,வ நிலையுடன், உடல்நடுக்கம், வியர்வை, கண்ணீர் முதலிய ஆன்மீக உபகரணங்கள் இணையும்போது, பக்தர் படிப்படியாக கிருஷ்ண பிரேமையை அடைகிறார்.
கிருஷ்ணருடைய திருநாமம் மஹா மந்திரம் என்று அறியப்படுகிறது. நாரத, பஞ்சராத்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதர மந்திரங்கள் வெறுமனே மந்திரங்கள் என்று அறியப்படுகின்றன, ஆனால் பகவானுடைய திருநாம உச்சாடனம் மஹா மந்திரம் என்று அறியப்படுகிறது.
(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதி லீலை 7.83 / பொருளுரை)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment