தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: சரணம் சரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்
மொழிபெயர்ப்பு
அரசே, பௌதிக கடகைமளையெல்லாம் விட்டு அனைவருக்கும் புகலிடமளிக்கும் முகுந்தனின் தாமரைப் பாதங்களைப் புகலிடம் அடைந்தவன் தேவர்களுக்கோ, சிறந்த முனிவர்களுக்கோ சாதாரண ஜீவராசிகளுக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ மனித குலத்திற்கோ அல்லது முன்னோர்களுக்கோ கடனாளி அல்ல. இவ்வெல்லா ஜீவராசிகளும் பரமபுருஷரின் அங்கங்களே என்பதால், பகவானின் சேவைக்காகத்தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் தனித்தனியாக இவர்களுக்குச் சேவை செய்ய அவசியமில்லை.
பொருளுரை
பகவானின் பக்தித் தொண்டிடம் முழுமையாகச் சரணடையாதவனுக்கு நிச்சயமாகப் பல பௌதிக கடமைகள் உள்ளன. ஒவ்வொரு சாதாரண பந்தப்பட்ட ஆத்மாவும் சூரிய ஒளி, சந்திர ஒளி, மழை, காற்று, உணவு ஜட உடல் போன்ற எண்ணற்ற நன்மைகளை தேவர்களிடமிருந்து பெறுகிறான். இவற்றிற்குப் பதிலாக தேவர்களுக்கு யாகத்தில் நிவேதனம் செய்யாதவன் திருடன் (ஸ்தேன) என்று பகவத் கீதை கூறுகிறது. அவ்வாறே, பசு முதலான ஜீவராசிகள் சுவை மிக்க அநேக உணவு வகைகளை அளிக்கின்றன. காலையில் எழுந்ததும் பறவைகளின் இனிய கானங்கள் மனதுக்குப் புத்துணர்வை அளிக்கின்றன. கோடையில் மரங்களில் நிழலையும், தென்றலையும் நாம் அனுபவிக்கிறோம். இவ்வாறு எண்ணற்ற ஜீவன்களிடமிருந்து சேவைகளைப் பெறும் நாம் அவற்றிற்குக் கடன் பட்டவர்களாவோம். ஆப்த என்றால் சொந்த குடும்ப அங்கத்தினர்கள். அவர்களுக்கு நிச்சயமாக நாம் கடமைப்பட்டுள்ளோம். ந்ருணாம் என்றால் மனித சமுதாயம், ஒருவன் ஒரு பகவத் பக்தனாகுமுன் அவன் நிச்சயமாக அவனது சமுதாயத்தின் ஒரு விளைபொருளாவான். நாம் வாழும் சமுதாயத்திலிருந்து பௌதிக கல்வி, பண்பாடு, பாரம்பரியம், பாதுகாப்பு ஆகியவற்றை நாம் பெறுகிறோம்.
மேற்கூறிய கடன்களை அடைப்பதற்குப் பதிலாக கிருஷ்ண உணர்வு சமுதாயம் கிருஷ்ணரிடம் அதிக கவனம் செலுத்துவதாக பௌதிகவாதிகள் கண்டனம் செய்கின்றனர். பாகவதம் (4.31.14) இதற்கு விடையளிக்கிறது. யதா தரோர் மூல நிஷேசனேன த்ருப்யந்தி -தத் -ஸ்கந்த புஜோபசாகா: ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றினால் தானாகவே அதன் கிளைகள், இலைகள் முதலானவை போஷாக்கைப் பெறுகின்றன. மரத்தின் கிளைகளுக்கும், இலைகளுக்கும் தனியாக நீரூற்ற அவசியமில்லை. அவ்வாறே வயிற்றுக்கு உணவளிக்க வேண்டும். அங்கிருந்து அது மற்றெல்லா அங்கங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறே, பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்திற்கும் மூலமாவார். அனைத்தும் கிருஷ்ணரிடமிருந்தே தோன்றுகின்றன. அவராலேயே பராமரிக்கப்படுகின்றன. இறுதியில் அவருக்குள்ளேயே ஒடுங்குகின்றன. கிருஷ்ணரே ஒவ்வொரு ஜீவராசிக்கும் நண்பர், காவலர், நலம் விரும்பி மற்றும் மேலான உதவியாளர். அவர் திருப்தியடைந்தால் தானாகவே உலகம் முழுவதும் திருப்தியடைகிறது.
ஒரு பேரரசரிடம் வேலை செய்யும் ஒரு செயலாளர் சிற்றரசர்களுக்குக் கடமைப்பட்டவரல்ல. சாதாரண மனிதனுக்கு இவ்வுலகில் பல கடன்கள் உள்ளன. உண்மையில் பரமபுருஷரே எல்லா நன்மைகளையும் கொடுக்கிறார். உதாரணமாக பெற்றோர்களின் கருணையால் ஒருவன் தன் உடலைப் பெறுகிறான். ஆனால் சிலசமயம் ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆண்மையற்றவர் ஆகக்கூடும். சில சமயம் குழந்தை அங்கவீனத்துடன் பிறக்கிறது. சிலசமயம் குழந்தை இறந்தே பிறக்கிறது. பெரும்பாலும் உடலுறவினால் குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. எனவே எல்லா பெற்றோர்களும், அழகிய, உயர்ந்த தகுதியுடைய குழந்தையையே விரும்பினாலும், பெரும்பாலும் இவ்வாறு அமைவதில்லை. இவ்விதமாக பரமபுருஷரின் கருணையாலேயே ஓர் ஆணும் பெண்ணும் உடலுறவின் மூலம் குழந்தைபெற முடிகிறது. பகவானின் கருணையினாலேயே ஆணின் விந்து வீரியமுள்ளதாகவும், பெண்ணின் சினைமுட்டை வளமுள்ளதாகவும் இருக்கின்றன. அவ்வாறே பகவானின் கருணையினாலேயே குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கிறது. ஒரு மனிதனுடைய பரிணாமத்தின் எந்த கட்டத்திலாவது பகவானின் கருணை பின்வாங்கப்படுமானால், அவனுக்கு உடனே மரணம் ஏற்படுகிறது அல்லது முடமாக்கும் நோய் வருகிறது-
தேவர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. “பிற கடமைகளை விட்டுவிட்டு” (பரிஹ்ருத்ய கர்தம்) என்ற சொற்கள், தேவர்கள் கிருஷ்ணரிலிருந்து தனிப்பட்டவர்கள் என்பது போன்ற கருத்துக்களை விட்டுவிட வேண்டும் என்பதைக் குறிக்கின்றன. தேவர்கள் பரமபுருஷருடைய விஸ்வ-ரூபத்தின வெவ்வேறு அங்கங்கள் என்று வேத இலக்கியத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பரமபுருஷர் எல்லோருடைய இதயங்களிலும் இருக்கிறார் என்றும், அவரே அறிவையும், ஞாபகசக்தியையும் கொடுக்கிறார் என்றும் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது. இவ்விதமாக ஒரு மூளையில்லாமல் யாராலும் புத்திசாலியாக இருக்க முடியாது. கிருஷ்ணரின் கருணையாலேயே ஒரு மனித மூளையை நாம் பெறுகிறோம். இவ்விதமாக வெவ்வேறு ஜீவராசிகளிடம் நமக்குள்ள பலவிதமான கடன்களை நாம் ஆராய்வோமானால், முடிவாக பகவானாலேயே ஒரு குறிப்பிட்ட நன்மையை நாம் பெற்றோம் என்பது புலனாகும். எனவே சாதாரண மனிதனொருவன் பலவிதத்தில் தனக்கு நன்மை செய்துள்ளவர்களை திருப்திபடுத்த வெவ்வேறு வகையான யாகங்களையும், தான தருமங்களையும் செய்து தான் பட்ட கடன்களை அடைக்கவேண்டும். இருப்பினும் பரமபுருஷருக்கு நேரடியாகத் தொண்டு செய்பவன் உடனே இத்தகைய கடன்களையெல்லாம் நிறைவேற்றி விடுகிறான். ஏனெனில் குடும்பம், முன்னோர்கள், தேவர்கள் போன்றவர்களின் மூலம் வரும் நன்மைகளெல்லாம் முடிவாக பகவானிடமிருந்து வந்தவையே. இதை ஸ்ரீமத் பாகவதம் (11.20.9) பின்வருமாறு கூறுகிறது.
தாவத் கர்மாணி குர்வீத ந நிர்வித்யேத யாவதா
மத்-கதா ஸ்ரவணாதௌ வா ஸ்ரத்தா யாவன் ந ஜாயதே
“ஒருவன் பலன் கருதும், செயலால் திருப்தியடையாமலும், பரமபுருஷரைப் பற்றிக் கேட்டல், கூறுதல் ஆகிய முறைகளால் பக்தித்தொண்டில் ஒரு சுவையை ஏற்படுத்திக் கொள்ளாமலும் இருக்கும்வரை அவன் வேத விதிகளுக்கேற்பவே செயலாற்ற வேண்டியிருக்கும்.” முடிவு என்னவெனில் பகவானின் பக்தித் தொண்டில் பூரண சரணடைந்தவன் முதல் தர மனிதனாவான்.
பொதுவாக மக்கள் தேவர்களிடமிருந்தம், குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தம நன்மைகளைப் பெறுவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளனர். ஏனெனில் இத்தகைய நன்மைகள் புலன் நுகர்வுக்கு உகந்தவையாக உள்ளன. இத்தகைய பௌதிக முன்னேற்றமே வாழ்வின் ஒரே இலட்சியம் என்று குறை மதியாளர்கள் எண்ணுகின்றனர். இதனால் தூய பகவத் தொண்டின் உன்னத நிலையை அவர்களால் உணரமுடியவில்லை. தூய பக்தித் தொண்டே (பக்தி யோகம்) பரமபுருஷரின் புலன்களை நேரடியாக திருப்திப்படுத்தப்படுவற்கென உள்ளது. ஆனால் பகவானின் நினைத்தற்கரிய அழகு, பலம், செல்வம், அன்பு ஆகியவற்றைச் சந்தேகிப்பதில் பக்தர்கள் நேரத்தை வீணடிக்காமல், அன்புத் தொண்டினால் பகவானின் புலன்களை நேரடியாக திருப்திப்படுத்துகின்றனர். இவ்விதமாக பரமபதம் அடையும் உயர்ந்த வரத்தை அவர்கள் பெறுகின்றனர். ஆனந்தமும், அறிவும்நிறைந்த நித்திய வாழ்வுடைய பகவானின் ஆன்மீக உலகிற்கு பக்தர்கள் செல்கின்றனர். தேவர்கள், முன்னோர்கள். குடும்ப அங்கத்தினர்கள் ஆகிய எவராலும் ஆனந்தமும், அறிவும் நிறைந்த நித்திய வாழ்வைக் கொடுக்கமுடியாது. ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களை அலட்சியம் செய்து நிலையற்ற ஜட உடலையே அனைத்துமாக ஏற்றுக் கொள்பவன் மேலே குறிப்பிட்ட கடன்களை அடைக்கப் பெரிய யாகங்களையும் தவங்களையும், தான தருமங்களையும் செய்தே ஆகவேண்டும். இல்லையெனில், பௌதிக கண்ணோட்டத்தில் கூட ஒருவன் பெரும் பாவியாகவும், நிந்தனைக்குரியவனாகவும் ஆகிறான்.
ஶ்ரீமத் பாகவதம் 11.5.41
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment