முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ ராமர் ஒரு மானிட ரூபத்தை ஏற்று பூமியில் அவதரித்தார். பிரபஞ்ச ஒழுசைகக் காப்பாற்றி, அதன் மூலமாக பிரபஞ்ச ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகவே சில அமானுஷ்யமான செயல்களை அவர் புரிந்தார். சில சமயங்களில் இராவணனையும், ஹிரண்யகசிபுவையும் போன்ற பெரும் அசுரர்களும், நாஸ்திகர்களும் மிகவும் பிரபலமடைகின்றனர். பகவானால் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குமுறையை எதிர்க்கும் மனோநிலையுடன், பௌதிக விஞ்ஞானத்தின் உதவியால் அவர்கள் பெறும் பௌதிக முன்னேற்றமே இதற்குக் காரணமாகும். உதாரணமாக, பௌதிகமான வழிகளின் மூலமாக மற்ற கிரகங்களுக்குச் செல்லும் முயற்சியானது, ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கு முறைக்கு எதிரான ஒரு செயலாகும். ஒவ்வொரு கிரகத்தின் சூழ்நிலையும் வேறுபட்டதாக உள்ளது. பகவானின் திட்டப்படி வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கு அக்கிரகங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பௌதிக முன்னேற்றத்தின் சிறு வெற்றியால் திமிர் பிடித்தவர்களாக மாறிவிட்ட இறை உணர்வற்ற பௌதிகவாதிகள் சில சமயங்களில் இறைவனே இல்லை என்கிறனர். அவர்களில் இராவணனும் ஒருவன். மனிதர்களுக்குத் தேவையான தகுதிமுறைகளை எண்ணிப்பார்க்காமலேயே, பௌதிக மார்க்கங்களின் மூலமாக சாதாரண மனிதர்களை இந்திரலோகத்திற்கு (ஸ்வர்கத்திற்கு) அனுப்ப அவன் விரும்பினான். ஸ்வர்க லோகத்தை அடைவதற்குரிய நேரடியான படிக்கட்டுகளை நிர்மாணிக்க அவன் விரும்பினான். இதனால் அக்கிரகத்தை அடைவதற்குத் தேவையாக உள்ள வழக்கமான புண்ணியச் செயல்களை மக்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அவன் எண்ணினான். பகவானின் சட்டத்திற்குப் புறம்பான மற்ற செயல்களையும் கூட அவன் நிறைவேற்ற விரும்பினான். அவன் முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ ராமரின் அதிகாரத்தை எதிர்த்து, அவரது மனைவியான சீதையையும் அபகரித்துச் சென்றான். தேவர்களின் பிரார்த்தனைக்கும் விருப்பத்திற்கும் விடையளிக்கும் வகையில், இந்த அசுரனை தண்டிப்பதற்காக பகவான் ஸ்ரீ ராமர் அவதரித்து இராவணனின் சவாலை ஏற்றார். இவ்விஷயங்களைப் பற்றிய முழு விவரமே இராமாயணமாகும். பகவான் ஸ்ரீ இராமச்சந்திரர் முழுமுதற் கடவுளாகையால், பௌதிக முன்னேற்றமடைந்த இராவணன் உள்பட, வேறெந்த மனிதனாலும் செய்ய முடியாத அமானுஷ்யமான செயல்களை அவர் செய்து காட்டினார். கற்களாலான இராஜ வீதியொன்றை அவர் இந்து மகா சமுத்திரத்தின் மீது அமைத்தார். பாரமற்ற தன்மையைப் பற்றி நவீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் எல்லா இடங்களிலும் பாரமற்ற தன்மையைக் கொண்டு வருவது சாத்தியமில்லை. ஆனால் பாரமற்ற தன்மை பகவானின் ஒரு படைப்பாகும். இதன் வாயிலாக பிரம்மாண்டமான கிரகங்களை காற்றில் பறக்கவும், மிதக்கவும் செய்ய அவரால் முடிகிறது. இந்த பூமியிலுள்ள கற்களையும் கூட அவர் பாரமற்றவையாக மாற்றி, கற்களாலான பாலம் ஒன்றை அவர் கட்டினார். அதுவே பகவானுக்குள்ள சக்தியாகும்.
( ஶ்ரீமத் பாகவதம் 1.3.22 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment