தாய்க்கு இயற்கையாகவே குழந்தை மீது பற்று இருப்பது போல, இறைவன் ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் எப்போதும் அளவுகடந்தபாசம் கொண்டவர் ஆவார்
அளவற்ற அறிவு மற்றும் முடிவற்ற ஆனந்தம் ஆகியவற்றைக் கொண்ட நித்திய வாழ்வின் உண்மையான இன்பத்தை நம்மில் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாராம்சத்தைப் பற்றிய அறிவற்ற மூடர்கள் நிஜ வாழ்வை மாயையில் தேடி அலைகின்றனர். இந்த ஜட உடல் நித்தியமாக நீடித்திருக்காது. மேலும் மனைவி, மக்கள், சமூகம் மற்றும் தேசம் போன்ற இந்த நிரந்தரமற்ற உடலோடு சம்பந்தம் உள்ளவை அனைத்தும் உடல் மாற்றமடையும் பொழுது மாறிவிடுகின்றன. இது பிறப்பு, இறப்பு மூப்பு மற்றும் நோய் ஆகியவற்றின் தொடர்ச்சி அல்லது சம்சாரம் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு விடையைக் கண்டுபிடிக்க நாம் விரும்புகிறோம். ஆனால் அதற்குரிய வழி நமக்குத் தெரியவில்லை. வாழ்வின் இத்துன்பங்களாகிய பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவர விருப்பமுள்ள எவரும், பிறரை அல்லாது பரமபுருஷரை வழிபடும் முறையைப் பின்பற்ற வேண்டுமென்று இங்கு அறிவுறுத்தப்படுகின்றனர். பகவத் கீதையிலும் (18.65) இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எப்படியாவது நம் பந்தப்பட்ட வாழ்வை நாம் முடித்துக் கொள்ள விரும்பினால், பகவானின் பின்னப் பகுதிகளான ஜீவராசிகளிடம் அவருக்குள்ள இயற்கையான அன்பினால், அனைவரின் இதயத்திலும் வீற்றிருப்பவரான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். தாயின் மடியிலுள்ள குழந்தை இயற்கையாகவே தாயிடம் பற்று கொண்டுள்ளது. தாயும் குழந்தையிடம் பற்று கொண்டுள்ளான். ஆனால் குழந்தை வளர்ந்து சூழ்நிலைகளுக்கு அடிமையாகும் பொழுது தாயிடம் அதற்கு இருந்த பற்று மறைந்துவிடுகிறது. வளர்ந்துவிட்ட குழந்தையிடமிருந்து ஏதேனும் சேவையை தாய் எப்பொழுதும் எதிர்பார்க்கிறாள். இவை அனைத்தையும் குழந்தை மறந்துவிட்டாலும், தாய் அவளுடைய குழந்தையிடம் மாறாத அன்பு கொண்டிருக்கிறாள். அதைப் போலவே, நாம் எல்லோரும் பகவானின் பின்னப் பகுதிகளாக இருப்பதால், பகவான் எப்பொழுதும் நம்மீது கருணை கொண்டவராக இருப்பதுடன், அவரது இராஜ்யத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதற்காக எப்பொழுதும் அவர் முயன்றும் வருகிறார். ஆனால் கட்டுண்ட ஆத்மாக்களான நாம் அவரைப் பற்றி அக்கறை கொள்ளாமல், மாயையான உடல் சம்பந்தங்களின் பின்னால் ஓடித்திரிகிறோம். எனவே, நம்மை நாம் உலகின் எல்லா மாயைகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டு பகவானுக்குத் தொண்டு செய்ய முயற்சிப்பதன் மூலமாக அவருடன் மீண்டும் இணையும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். உண்மையில், சேய் தாயைத் தேடுவது போல், நாம் பகவானை ஆசையுடன் தேடிக் கொண்டிருக்கிறோம். முழுமுதற் கடவுளைத் தேடி நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் நம் இதயத்திலேயே அவர் இருக்கிறார். கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் போன்ற வழிபாட்டுக்குரிய இடங்களுக்கு நாம் போகக் கூடாது என்பதை இது வலியுறுத்தவில்லை. பகவான் எங்கும் பரவி இருப்பவர் என்பதால், இத்தகைய வழிபாட்டுக்குரிய இடங்களிலும் அவர் நிறைந்திருக்கிறார். சாதாரண மனிதனுக்கு இப்புண்ணிய ஸ்தலங்கள் பகவானின் விஞ்ஞானத்தை கற்பதற்குரிய மையங்களாக உள்ளன. ஆலயங்கள் செயலற்றவை ஆகும் பொழுது, மக்கள் அத்தகைய இடங்களில் சிரத்தை அற்றவர்களாகி, படிப்படியாக இறை உணர்வற்றவர்கள் ஆகின்றனர். இதன் விளைவு இறைவனற்ற நாகரிகமாகும். நரகம் போன்ற இத்தகைய நாகரிகம் செயற்கையான முறையில் வாழ்வின் பந்தங்களை அதிகரித்துக் கொண்டு போகிறது. இதனால் வாழ்வு அனைவருக்கும் சகிக்க முடியாததாக ஆகிவிடுகிறது. கடவுளற்ற நாகரிகத்தின் முட்டாள் தலைவர்கள், உலகில் அமைதியையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்த பல்வேறு திட்டங்களைத் தீட்ட முயல்கின்றனர். பகவானற்ற நாகரிகத்தின் இந்த ஒழுங்கற்ற போக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவர சிறிதளவேனும் நாம் விரும்பினால், ஸ்ரீமத் பாகவதத்தைப் போன்ற வேத நூல்களின் நியமங்களை நாம் பின்பற்றுவதுடன், ஜட லாபத்தில் ஈர்ப்பற்றவரான ஸ்ரீசுகதேவ கோஸ்வாமியைப் போன்ற ஒருவரின் உபதேசங்களை பின்பற்றுவதும் அவசியமாகும்.
( ஶ்ரீமத் பாகவதம் 2.2.6 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment