"ராதா-கிருஷ்ணர்" இவ்விரு நபர்களின் இரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கு மாபெரும் ஆன்மீக நுண்ணறிவு தேவைப்படுகிறது.
ராதா க்ரிஷ்ண ஏக ஆத்மா, துஇ தேஹ தாரி'
அன்யோன்யே விலஸே ரஸ ஆஸ்வாத₂ன கேரி
மொழிபெயர்ப்பு
ராதையும் கிருஷ்ணரும் ஒருவரே, ஆனால் அவர்கள் இரண்டு திருமேனிகளை ஏற்று, பிரேம ரஸங்களைச் சுவைத்து, ஒருவரையொருவர் அனுபவிக்கின்றனர்.
பொருளுரை:
தெய்வீக நபர்களான ராதையும் கிருஷ்ணரும் பௌதிகவாதிகளுக்குப் புரியாத புதிராக உள்ளனர். ராதா - கிருஷ்ணரைப் பற்றி ஸ்ரீல ஸ்வரூப தாமோதர கோஸ்வாமியின் கையேட்டிலிருந்து வரும் மேற்கூறிய வர்ணனை ஒரு சுருக்கமான விளக்கமாகும், ஆனால் இவ்விரு நபர்களின் இரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கு மாபெரும் ஆன்மீக நுண்ணறிவு தேவைப்படுகிறது. ஒருவர் இருவராக அனுபவிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் சக்திமானாகவும் ஸ்ரீமதி ராதாராணி அந்தரங்க சக்தியாகவும் உள்ளனர். வேதாந்த தத்துவத்தின்படி, சக்திமானுக்கும் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லை; அவை ஒன்றே. நெருப்பையும் வெப்பத்தையும் நம்மால் எவ்வாறு பிரிக்க முடியாதோ, அதுபோல அந்த ஒன்றினை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த இயலாது.
பக்குவமற்ற வாழ்வில் பூரணத்தைப் பற்றிய அனைத்தும் புரியாத புதிராகவே உள்ளது; எனவே, இத்தகைய சார்ந்த அறிவாற்றலின்படி, சக்திமானுக்கும் சக்திக்கும் இடையிலுள்ள ஒற்றுமையின் உண்மையை கிரகிப்பது மிகவும் கடினமாகும். தெய்வீகத்தின் அத்தகு உள்விவகாரங்களைப் புரிந்துகொள்வதற்கு சைதன்ய மஹாபிரபுவினால் வழங்கப்பட்ட அசிந்திய- பேதாபேத தத்துவம் மட்டுமே ஆதாரமாகும்.
உண்மையில், ஸ்ரீ கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியான ராதாராணி,ஸ்ரீ கிருஷ்ணரின் இன்பத்தினை நித்தியமாக அதிகரிக்கின்றாள். மஹா- பாகவத பக்தரின் உதவி இல்லாமல், அருவவாதிகளால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரின் துணைவியரில் ஸ்ரீமதி ராதாராணியே நித்தியமாக மிகவுயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறாள் என்பதை அவளது பெயரான "ராதா" சுட்டிக்காட்டுகிறது. இதனால், ஸ்ரீ கிருஷ்ணருக்கான உயிர்வாழிகளின் சேவையை கிருஷ்ணரிடம் எடுத்துச் சென்று வழங்கும் ஊடகம் அவளே. எனவே, விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புத் தொண்டர்களாக அங்கீகாரம் பெறுவதற்கு ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை வேண்டுகின்றனர்.
பகவானுடனான தெய்வீக உறவின் மிகவுயர்ந்த உண்மையினை வழங்குவதற்காக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, இரும்பு யுகத்தின் வீழ்ச்சியடைந்த கட்டுண்ட ஆத்மாக்களைத் தாமே நேரடியாக அணுகுகிறார். ஸ்ரீ சைதன்யரின் செயல்கள், அவரது அந்தரங்க சக்திகளில் ஒன்றான ஆனந்த சக்தியின் கதாபாத்திரத்தினை முதன்மையாகக் கொண்டுள்ளன.
பூரண புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், தெய்வீக இருப்பு, அறிவு, ஆனந்தத்தினை முழுமையாகக் கொண்டுள்ள ஸர்வ சக்தி பெற்ற ரூபமாவார். அவருடைய அந்தரங்க சக்தி முதலில் ஸத் (இருப்பு) என்னும் பகுதியாக வெளிப்படுத்தப்படுகிறது. அதாவது பகவானின் இருப்பை விரிவுபடுத்தும் பகுதியாகச் செயல்படுகிறது. அதே சக்தி பூரண ஞானத்தை வெளிப்படுத்தும்போது, அது சித் அல்லது ஸம்வித் என்று சொல்லப்படுகிறது, அந்த சக்தி பகவானின் தெய்வீக ரூபங்களை விரிவடையச் செய்கிறது. இறுதியாக, அதே சக்தியானது இன்பத்தை வழங்கும் சக்தியாகச் செயல்படும்போது, ஹ்லாதி, னீ அல்லது தெய்வீக ஆனந்தத்தின் சக்தி என்று அறியப்படுகிறது. இவ்வாறாக, பகவான் தமது அந்தரங்க சக்தியினை மூன்று தெய்வீகப் பிரிவுகளில் வெளிப்படுத்துகிறார்.
ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஆதிலீலை 4.56
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment