ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 2
பயோ - விரத வழிபாட்டு முறையை நிறைவேற்றுதல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவது போல்,
தேவர்களின் தாயான அதிதி பெருந்துன்பத்திற்கு ஆளானதால், அவளது புத்திரர்களின் நன்மைக்காக
எப்படி விரதங்களை அனுஷ்டிப்பது என்பதைப் பற்றி அவளது கணவரான கஸ்யப முனிவர் அவளிடம்
கூறினார்.
சுவர்க்கலோக இராஜ்யங்களில் தேவர்கள் காணப்படாததால்
அவர்களின் தாயாகிய அதிதி, பெரும் வேதனையடைந்தாள். பற்பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள்,
சமாதி நிலையிலிருந்து மீண்ட பெரு முனிவரான கஸ்யபர் தமது ஆசிரமத்திற்கு திரும்பிச் சென்றார்.
தமது ஆசிரமம் பொலிவிழந்து கிடப்பதையும், தமது மனைவி வருத்தத்துடன் இருப்பதையும் அவர்
கண்டார். ஆசிரமத்தில் எங்கு பார்த்தாலும் துக்கத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. ஆகவே
முனிவர் ஆசிரமத்தின் நலனைப் பற்றியும், கவலையுடன் அவள் காணப்படுவதற்கான காரணத்தைப்
பற்றியும் வினவினார். ஆசிரமத்தின் நலனைப் பற்றி கஸ்யப முனிவருக்கு அறிவித்த பின், தமது
புத்திரர்களின் பிரிவினால் தாம் கவலைப்படுவதாக அவரிடம் கூறினாள். அதன்பிறகு தமது புத்திரர்களால்
எவ்வாறு மீண்டும் திரும்பி வந்து அவரவரர் பதவிகளை ஏற்க முடியும் என்பதைப் பற்றி தன்னிடம்
கூறுமாறு அவரை வேண்டினாள். தமது புத்திரர்கள் எல்லா நல்லதிர்ஷ்டங்களையும் பெற வேண்டும்
என்று அவள் விரும்பினாள். அதிதியின் வேண்டுகோளினால் திகைப்படைந்த கஸ்யப முனிவர், தன்னுணர்வைப்
பற்றிய தத்துவம், ஜடத்திற்கும், ஆன்மீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு மற்றும் பௌதிக
நஷ்டத்தால் எப்படி பாதிப்படையாமல் இருப்பது எனும் விஷயங்களைப் பற்றி அவளுக்கு உபதேசித்தார்.
ஆனால் அவ்வுபதேசங்களைக் கொடுத்த பின்னரும் அதிதி திருப்தி அடையாததைக் கண்ட கஸ்யப முனி,
வாசுதேவரான, ஜனார்தனனை வழிபடுமாறு அவளுக்கு அறிவுரை கூறினார். வாசுதேவனால் மட்டுமே
அவளைத் திருப்திபடுத்தி, அவளது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று அவளுக்கு
அவர் உறுதி கூறினார். அதிதி பிறகு பகவான் வாசுதேவனை வழிபடும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினாள்.
பிரஜாபதியான கஸ்யபரும் பயோ - வ்ரதம் எனப்படும் ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி அவளிடம்
கூறினார். இது பன்னிரண்டு நாட்களில் செய்யப்பட வேண்டியதாகும். இம்முறையினால் பகவான்
ஸ்ரீ கிருஷ்ணரை எப்படி திருப்தி செய்வது எனும் முறையை பிரம்ம தேவர் அவருக்கு உபதேசம்
செய்திருந்தார். இவ்வாறாக இவ்விரதத்தையும், அதன் கட்டுப்பாட்டு விதிகளையும் மேற் கொள்ளும்படி
தமது மனைவிக்கு அவர் அறிவுரை கூறினார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 16 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment