ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 4
குள்ள-அவதாரமான பகவான் வாமனதேவர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இந்த அத்தியாயம், பகவான் வாமனதேவர் எப்படி தோன்றினார்
என்பதையும், பலி மகாராஜனின் யாக அரங்கிற்கு அவர் எப்படி சென்றார் என்பதையும், பலி மகாராஜன்
எப்படி அவரை நன்கு வரவேற்று, அவர் யாசித்ததை அளித்து அவரது விருப்பத்தை நிறைவேற்றினார்
என்பதையும் விவரிக்கிறது.
பகவான் வாமனதேவர் இவ்வுலகில், சங்கு, சக்கரம்,
கதை மற்றும் தாமரை ஆகியவற்றுடன் அதிதியின் கருவிலிருந்து தோன்றினார். அவரது தேகம் கருமை
நிறம் கொண்டதாக இருந்தது. அவர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். அபிஜித் நட்சத்திரம்
உதயமாகியிருந்த சமயத்தில், ஸ்ரவண - துவாதசி எனும் மங்களகரமான வேளையில் பகவான் விஷ்ணு
தோன்றினார். அப்போது (உயர் கிரக அமைப்பு, பரவெளி மற்றும் இந்த பூமி ஆகியவை உட்பட) மூவுலகங்களிலிம்,
தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பருவ காலங்களும் கூட பகவானின் தோற்றத்தால்
மகிழ்ச்சியடைந்தனர். எனவே மங்களகரமான இந்நாள் விஜயா என்று அழைக்கப்படுகிறது. சத் -
சித் - ஆனந்த உடலைக் கொண்டவரான முழுமுதற் கடவுள் கஸ்யபருக்கும், அதிதிக்கும் புதல்வராகத்
தோன்றியபோது, அவரது பெற்றோர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். அவரது தோற்றத்திற்குப் பிறகு,
பகவான் குள்ளமான (வாமன) ரூபத்தை மேற்கொண்டார். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய
பெரும் முனிவர்கள் எல்லோரும், கஸ்யப முனிவரின் முன்னிலையில் பகவான் வாமனரின் பிறப்புச்
சடங்கை நிறைவேற்றினர். பகவான் வாமனதேவரின் புனித நூல் சடங்கின்போது, அவர் சூரியதேவன்,
பிருஹஸ்பதி, பூமாதேவி, சுவர்க்க லோகங்களுக்குரிய அதி தேவதை, அவரது தாயார், பிரம்தேவர்,
குபேரன் மற்றும் ஏழு ரிஷிகள் முதலானவர்களால் கௌரவிக்கப்பட்டார். வாமன தேவர் பிறகு பிருகு,
வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்கள் யாகம் இயற்றிக் கொண்டிருந்த, நர்மதா நதியின் வடக்கில்,
பிருகுகச்சம் எனப்படும் இடத்தில் நிறுவப்பட்டிருந்த யாக அரங்கிற்குச் சென்றார். பகவான்
வாமனதேவர் வைக்கோலினால் ஆன ஒரு கச்சையையும், மான் தோலாலான ஒரு மேலாடையையும், ஒரு புனித
நூலையும் அணிந்திருந்ததுடன், அவரது கரங்களில் ஒரு தண்டம், ஒரு குடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றை
ஏந்தியவராய் பலி மகாராஜனின் யாக அரங்கில் தோன்றினார். அவரது தெய்வீகத் தன்மையுடைய பிரகாசமான
தோற்றத்தினால், வேதியர்கள் அனைவரும் தங்களது பொலிவை இழந்தனர். இவ்வாறாக அவர்கள் அனைவரும்
தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்து பகவான் வாமனதேவரை துதித்தனர். பகவான் வாமனதேவரின்
கால் விரலிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீரை சிவ பெருமான் கூட தமது தலைமீது தாங்கிக்
கொள்கிறார். ஆகவே, பகவானது பாதங்களைக் கழுவிய பின், அந்நீரை பலி மகாராஜன் உடனே தமது
தலைமீது தாங்கிக் கொண்டார். இதனால் தானும், தமது முன்னோர்களும் பெருமையடைந்ததை உணர்ந்தார்.
பிறகு பகவான் வாமனதேவரின் நலனைப் பற்றி வினவிய பலி மகாராஜன், தனம், ஆபரணங்கள் அல்லது
அவர் விரும்பக்கூடிய எதையும் தன்னிடமிருந்து கேட்டுப் பெறுமாறு பகவானை வேண்டினார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 18 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment