ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 10 / அத்தியாயம் 31 / பதம் 1-19
*************************************************************************
பதம்
1
கோப்ய ஊசு:
மொழிபெயர்ப்பு
கோபியர்கள் கூறினர்: ஒ, அன்பிற்குரியவரே, விரஜத்தில் பிறந்ததினால், உமது பிறப்பு அதன் புகழை அதிகரித்திருக்கின்றது. அதனால் அதிர்ஷ்ட தேவதையான இந்திரா எப்போதும் இங்கே வசிக்கின்றாள். உமக்காகவே உமது பக்தியுள்ள பணிப்பெண்களாகிய நாங்கள் எங்கள் எல்லாவிடங்களிலும் தேடிக் கொண்டிருக்கின்றோம், அருள் கூர்ந்து உம்மைக் காணும் மகிழ்வை எங்களுக்குத் தந்தருள்வீராக.
பதம் 2
மொழிபெயர்ப்பு
ஓ, காதல் தேவனே, அழகில், உமது பார்வை சரத் காலத் தாமரைத் தடாகங்களில் மலர்ந்திருக்கும் எழில் மிகு தாமரை மலர்களின் சீரிய இதழ்களையும் விஞ்சுகின்றது. ஓ, நல்வரம் அருள்பவரே, எந்தவிதக் கூலியும் பெறாது தம்மையே உம்மிடம் அர்ப்பணித்திருக்கும் உமது பணிப்பெண்களை நீர் கொல்கின்றீர். இது கொலை இல்லையா?
பதம் 3
மொழிபெயர்ப்பு
ஓ, அனைவரினும் சிறந்தவரே, நீர் எங்களைத் தொடந்து-விஷம் நிறைந்த நீரிலிருந்தும், நரமாமிசம் தின்னும் அகாசுரனிடமிருந்தும், நாசகார மழையிலிருந்தும், சூறைக்காற்று அசுரனிடமிருந்தும், இந்திரனின் அனல்காக்கும் வஜ்ராயுதத்திடமிருந்தும், காளை அசுரனிடமிருந்தும், மயனின் மைந்தனிடமிருந்தும் வந்த எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளியிருக்கின்றீர்.
பதம் 4
மொழிபெயர்ப்பு
ஓ, நண்பரே, உண்மையில் நீர் கோபி யசோதையின் மைந்தன் இல்லை, மாறாக நீர் உடல் பெற்ற ஆத்மாக்களின் இதயங்களினுள்ளே சாட்சியாக வீற்றிருப்பவர் ஆவீர். பிரம்மதேவர், இப்பிரபஞ்சத்தினைக் காப்பதற்காக நீர் எழுந்தருள வேண்டுமென்று உம்மிடம் வேண்டினார், அதனால் இப்போது நீர் சாத்வத குலத்தில் தோன்றியிருக்கின்றீர்.
பதம் 5
மொழிபெயர்ப்பு
ஓ, விருஷ்ணிகளிற் சிறந்தவரே, அதிர்ஷ்ட தேவதையின் கரத்தினைப் பற்றிக் கொண்டிருக்கும் தாமரை மலர்போன்ற உமது கரம், பௌதீக வாழ்வின் அச்சத்தின் காரணமாக உமது திருவடிகளை அணுகுபவர்களுக்கு அச்சமின்மையினை அருள்கின்றது. ஓ, அன்பரே, விருப்பத்தினை நிறைவேற்றும் உமது தாமரை மலர்க் கரத்தினை எங்கள் தலைகளின் மீது வைத்தருளவேண்டும்.
பதம் 6
மொழிபெயர்ப்பு
ஓ, விரஜ மக்களின் துன்பத்தை நீக்குபவரே, ஓ, பெண்கள் அனைவரின் நாயகரே, உமது புன்னகை உமது பக்தர்களின் வீண் கர்வத்தினை அழிக்கின்றது. அன்பு நண்பரே, அருள்கூர்ந்து எம்மை உமது பணிப் பெண்களாக ஏற்றுக் கொண்டு, உமது எழில் மிகு செந்தாமரை மலர் முகத்தினை எமக்குக் காட்டுவீராக
பதம் 7
மொழிபெயர்ப்பு
உம்மைச் சரணடைகின்ற உடல்பெற்ற ஆத்மாக்களின் முன்னைய பாவங்களை உமது தாமரைத் திருவடிகள் அழிக்கின்றன. அத்திருவடிகள் மேய்ச்சல் நிலங்களில் பசுக்களைக் பின் தொடர்ந்து செல்கின்றன. மேலும் அதிர்ஷ்ட தேவதையின் நித்திய உறைவிடமாகவும் அவை இருக்கின்றன. அஞ்சவரும் காளிங்க நாகத்தின் தலைகளின் மீது ஒரு முறை நீர் அத்திருவடிகளை வைத்திருக்கின்றீர். ஆதலினால் அவற்றை எமது மார்பகங்களின் மீது அருள்கூர்ந்து வைத்து எமது மனத்திலுள்ள காமத்தினை வெட்டி எறிவீராக.
பதம் 8
மொழிபெயர்ப்பு
ஓ, செந்தாமரை மலர் போன்ற விழியுடையவரே, புத்திமான்களின் மனதினை ஈர்க்கும் உமது இனிய குரல் ஒலியும் கவர்ச்சி மிகு வார்த்தைகளும் எம்மை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. எங்கள் அன்பிற்குரிய வீரரே, உமது அதரங்களில் உள்ள அமிர்தத்தினால் உமது பணிப் பெண்களுக்கு அருள்கூர்ந்து புத்துயிர் அளிப்பீராக.
பதம் 9
மொழிபெயர்ப்பு
உமது வார்த்தைகளின் அமிர்தமும், உமது செயல்களின் சரிதமும் இப்பௌதீக உலகில் துன்புறுவோர்க்கு ஜீவனும் ஆன்மாவும் ஆகும். கற்றறிந்த முனிவர்களால் பரப்பப்படும் இச்சரிதங்கள், ஒருவனது பாவங்களின் பலன்களை நீக்குவதோடு, அவற்றைக் கேட்பவர்களுக்கு, சர்வ மங்களங்களும் அளிக்கின்றன. இச்சரிதங்கள் உலகமெங்கணும் பரப்பப்படுகின்றன. அவை ஆன்மீக சக்தியுடையவையாக இருக்கின்றன. முழுமுதற்கடவுளின் மேதகு தகவல்களைப் பரப்புகின்றவர்கள், ஞான தான வள்ளல்களாவர்.
பதம் 10
மொழிபெயர்ப்பு
உமது புன்னகை, இனிமையான காதல் மிகுபார்வைகள், உம்முடன் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்த நெருக்கமான லீலைகள் மற்றும் இரகசியப் பேச்சுகள் இவையனைத்தும் தியானிப்பதற்கு மங்கள முடையன என்பதோடு, அவை எமது உள்ளங்களையும் தொடுகின்றன. ஆனாலும் ஓ, ஏமாற்றுக் காரரே அவை எங்கள் மனங்களைப் பெரிதும் கிளர்ச்சியுறச் செய்கின்றன.
பதம் 11
மொழிபெயர்ப்பு
அன்பிற்குரிய நாதரே, அன்புக் காதலரே, பசுக்களை மேய்ப்தற்காக நீர் விரஜத்தைவிட்டுச் செல்லும் பொழுது, தாமரை மலரினும் எழில் மிகு உமது பாதங்களில் தானியக்கதிர்களின் கூர்முனைகளும், முரட்டுப் புற்களும், செடிகளும் குத்துமே என்று நினைத்து எங்கள் மனங்கள் துன்புறுகின்றன.
பதம் 12
மொழிபெயர்ப்பு
பகற்பொழுதின் முடிவில் நீர் அடிக்கடி, கருநீல மயிர்க் குழல்களால் மூடப்பட்டு அடர்த்தியாகத் தூசு படிந்திருக்கும் உமது தாமரைக் திருமுகத்தினை எமக்குக் காட்டுகின்றீர். இவ்வாறு ஓ, வீரரே, நீர் எங்கள் மனங்களில் காம இச்சையினை எழுப்புகின்றீர்.
பதம் 13
மொழிபெயர்ப்பு
பிரம்மதேவரால் வழிபடப்படும் உமது தாமரைத் திருவடிகள், அவற்றை அடிபணிந்து வணங்குவோர் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகின்றன. அவை பூமியின் அணிகலன்களாகும். அவை உயர் திருப்தியை அளிக்கின்றன. ஆபத்துக் காலங்களில் அவையே தியானத்திற்கு உரிய பொருளாகவும் இருக்கின்றன. ஓ, அன்பரே, ஓ, கவலைகளை அழிப்பவரே, அருள் கூர்ந்து அத்தாமரைத் திருவடிகளை எமது மார்பகங்களின் மீது வைப்பீராக.
பதம் 14
மொழிபெயர்ப்பு
ஓ, வீரரே துன்பத்தினை நீக்கிக் காதல் இன்பத்தினை அதிகரிக்கச் செய்யும் உமது அதரங்களிலுள்ள அமிர்தத்தினை அன்புடன் எங்களுக்கு வழங்குவீராக. அந்த அமிர்தமானது இனிமையாக ஒலிக்கும் உமது புல்லாங்குழலால் சுவைக்கப்படுவதோடு மக்களின் பிற பற்றுக்கையும் மறக்கச் செய்கின்றது.
பதம் 15
மொழிபெயர்ப்பு
பகற்பொழுதில் நீர் காட்டிற்குச் செல்லும் வேளையில் உம்மைக் காண முடியாத காரணத்தினால் ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரம் கூட எங்களுக்கு ஓர் யுகம் போல் தோன்றுகின்றது. சுருண்ட குழல் முடிகள் தொங்கும் உமது எழில் முகத்தை நாங்கள் காதலுடன் நோக்குங்காலை, படைப்பவன் என்னும் மூடனால் வடிவமைக்கப்பட்டிருக்கும் எங்கள் கண் இமைகள் எங்கள் இன்பத்திற்குத் தடையாக இருக்கின்றன.
பதம் 16
மொழிபெயர்ப்பு
அன்பிற்குரிய அச்சுதரே, நாங்கள் ஏன் இங்கே வந்திருக்கின்றோம் என்பதை நீர் நன்கறிவீர். உமது புல்லாங்குழலின் இனிய இசையினால் மோகமுற்று உம்மைக் காண்பதற்காக நடு நிசியில் வந்திருக்கும் இளம் பெண்களை உம்மைப் போன்ற ஏமாற்றுக்காரரைத் தவிர வேறு யார் நிராகரிப்பர்? உம்மைக் காண்பதற்காக நாங்கள் எங்கள் கணவர்களையும் குழந்தைகளையும், பெரியோர்களையும், பிற உறவினர்களையும் முற்றிலும் புறக்கணித்திருக்கின்றோம்.
பதம் 17
மொழிபெயர்ப்பு
உம்மோடு இரகசியமாக நாங்கள் நடத்திய உரையாடல்களை எண்ணும் பொழுதும், உமது புன்னகை பூத்த முகத்தினையும், காதல் கனியும் பார்வைகளையும், அதிர்ஷ்ட தேவதையின் உறைவிடமான உமது அகன்ற மார்பையும் நினைந்து எங்கள் உள்ளங்களில் காம இச்சை எழும்பொழுதும் எங்கள் மனம் மீண்டும் மீண்டும் மோகத்திற்காளாகிறது. அதனால் உம்மீதான எங்கள் நாட்டம் அதிதீவிரமாவதை நாங்கள் உணர்கின்றோம்.
பதம் 18
மொழிபெயர்ப்பு
ஓ, அன்பரே, சர்வ மங்களமுடைய உமது தோற்றம் விரஜத்தின் காடுகளில் வசிப்போரின் துன்பங்களை நீக்குகின்றது. உமது உறவினை எண்ணி எங்கள் மனம் ஏங்குகின்றது. உங்கள் பக்தர்களின் உள்ளங்களிலுள்ள நோயினை நீக்கும் அந்த மருந்தில் துளியளவாவது அருள் கூர்ந்து எனக்கு அளிப்பீராக.
பதம் 19
மொழிபெயர்ப்பு
ஓ, அன்பரே, உமது மென்மையான திருவடித்தாமரைகள் எங்கே காயம்பட்டு விடுமோ என்று அஞ்சிக்கொண்டேதான் நாங்கள் அவற்றை மெதுவாக எங்கள் மார்பகங்களின் மீது வைக்கின்றோம். எங்கள் உயிர் உம்மைச் சார்ந்து மட்டுமே இருக்கின்றது. ஆகையினால், நீர் காட்டுப்பாதையில் நடந்து செல்கையில் கூரான கற்களினால் உமது மென்மையான பாதங்கள் காயப்பட்டுவிடுமோ என்ற கவலை எங்கள் மனங்களில் நிரம்பியிருக்கின்றது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment