பகவத் கீதையில் (9.25) “பித்ரூன் யாந்தி பித்ரு
வ்ரதா:” என்று கூறப்பட்டிருக்கிறது. குடும்ப நலத்தில் அக்கறை கொண்டவர்கள் “பித்ரு வ்ரதா:”
என்று அழைக்கப்படுகின்றனர். பித்ரு லோகம் என்றொரு உலகம் இருக்கிறது. அதன் தலைவன் அர்யமான்
ஆவான். அவனும் ஒரு தேவனைப் போன்றவன்தான். மேலும் அவனை திருப்திப்படுத்துவதின் மூலம்
ஒருவன் பேய்களாய்த் திரியும் தனது குடும்ப உறுப்பினர்கள் பூத உடல் பெறுமாறு உதவலாம்.
தனது குடும்பத்திடமும், கிராமத்திடமும், நாட்டிடமும் மிகுந்த பற்றுக் கொண்டு, பாவமும்
செய்தவர்கள் பஞ்சபூதங்களினாலான பூத உடலைப் பெறுவதில்லை. மாறாக மனம், புத்தி, ஆணவம்
என்பவற்றினாலான நுண்ணுடலையே பெறுகின்றனர். இந்நுண்ணுடல்களில் இருப்பவர்களே பேய்கள்
எனப்படுவர். இந்தப் பேய்களின் நிலை மிகவும் துன்பமானது, அவர்களிடம் மனம், புத்தி, ஆணவம்
போன்றவை இருந்தும் பூதஉடல் இல்லாததினால் அவர்கள் பௌதீக இன்பங்களை விரும்பி தொல்லைகள்
கொடுக்கின்றனர். அக்குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக மகன் அர்யமான் தேவன் அல்லது பகவான்
விஷ்ணுவிற்கு நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். காலங்காலமாகவே இந்தியாவில் ஒரு குடும்பத்தின்
மூத்த மைந்தன் கயா என்ற ஊருக்குப் போய் அங்கிருக்கும் விஷ்ணு கோவிலில் பேயாக அலையும்
தன் தந்தையின் நன்மைக்காக பொருள்களைப் படைக்கிறான். அதற்காக எல்லோரின் தந்தையரும் பேய்களாக
அலைகின்றனர் என்று அர்த்தமல்ல. பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளுக்கு பிண்டங்களை
அர்ப்பணிப்பதின் மூலம் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் பேய்களாக மாறியிருந்தால்
அவர்கள் பூதஉடல் பெறுவதற்கு அவன் உதவி செய்கிறான். ஆயினும் ஒருவன் பகவான் விஷ்ணுவின்
பிரசாதத்தினை வழக்கமாக உண்டு கொண்டிருந்தான் என்றால் அவன் பேயாக அல்லது இழிபிறவியாக
மாறும் வாய்ப்பே இல்லை. வேத நாகரீகத்தில் “சிரார்த்தம்” என்றழைக்கப்படும் ஒரு விழா
இருக்கிறது. அதில் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் உணவுகள் அளிக்கப்படுகின்றன. ஒருவன்
நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பகவான் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளுக்கோ அல்லது அவரது
பிரதிநிதியான பித்ரு லோகத்தைச் சேர்ந்த அர்யமானுக்கோ பிண்டங்களைப் படைத்தல், அவனது
மூதாதையர்கள் மீண்டும் பூதஉடல்களைப் பெற்று அவர்கள் அனுபவிக்க வேண்டிய உலக இன்பங்களை
எல்லாம் அனுபவிப்பர். அதாவது அவர்கள் மீண்டும் பேய்களாக மாறமாட்டார்கள் என்று கூறலாம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment