ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 6
பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இந்த இருபதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பின்வருமாறு:
பகவான் வாமனதேவர் தம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்தும், பலி மகாராஜன் அனைத்தையும்
அவருக்கு தானமாகக் கொடுத்து விடுகிறார். இவ்வாறாக பகவான் தமது உடலை விரிவடையச் செய்து
பகவான் விஷ்ணுவாக ஒரு பிரம்மாண்டமான உருவத்தை ஏற்றார்.
சுக்ராசார்யரின் அறிவுரைகளைக் கேட்டபின், பலி
மகாராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார். மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம்
ஆகிய கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பஸ்தனின் கடமை என்பதால், பிரம்மச்சாரிக்கு
அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது முறையல்ல என்று பலி மகாராஜன் நினைத்தார்.
ஒரு பிரம்மச்சாரியிடம் பொய் சொல்வதோ அல்லது அவருக்களித்த ஒரு வாக்குறுதியை மதிக்காமல்
நடந்து கொள்வதோ ஒருபோதும் முறையல்ல. ஏனெனில் பொய் சொல்வது மிகப்பெரிய பாவமாகும். பொய்
பேசும் பாவியொருவனின் பாரத்தை பூமித் தாயாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், பொய்
பேசுவதினால் ஏற்படும் பாவ விளைவுகளில் ஒருவன் அச்சம் கொள்ள வேண்டும். ஒரு பேரரசின்
அல்லது சாம்ராஜ்யத்தின் பெருக்கம் தற்காலிகமானதே; அதனால் பாமர மக்களுக்கு நன்மை இல்லையெனில்,
அத்தகைய பெருக்கத்தில் மதிப்பில்லை. முற்காலத்தில், பேரரசர்களும் சக்கரவர்த்திகளும்
தங்களது சாம்ராஜ்யங்களைப் பொது ஜனங்களின் நன்மையை கருத்திற் கொண்டு விரிவடையச் செய்தனர்.
உண்மையில், பொது மக்களின் நன்மைக்குரிய அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில்,
முதல் தரமான மனிதர்கள் சிலசமயங்களில் தங்களது உயிரையும் கூட தியாகம் செய்துள்ளனர்.
பெருமை வாய்ந்த செயல்களைச் செய்துள்ள ஒருவர் ஒருபோதும் மடிவதில்லை. அவர் நிரந்தரமாக
வாழ்கிறார் என கூறப்படுகிறது. ஆகவே, புகழே வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். நற்புகழ்
அடையும் பொருட்டு ஒருவர் மிகவும் ஏழ்மையானவராக ஆகிவிட நேர்ந்தாலும், அது ஓர் இழப்பல்ல.
பிரம்மச்சாரியான இந்த வாமனதேவர் பகவான் விஷ்ணுவாகவே இருந்த போதிலும், தான் அளிக்கப்
போகும் தானத்தை ஏற்றுக் கொண்டபின் தன்னை அவர் கைது செய்தாலும், அவரிடம் தான் பகைமை
பாராட்டப் போவதில்லை என்று பலி மகாராஜன் எண்ணினார். இவ்வெல்லா விஷயங்களைப் பற்றியும்
நன்கு யோசித்த பலி மகாராஜன் முடிவில் தம்மிடமிருந்த அனைத்தையும் தானமாகக் கொடுத்து
விட்டார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 20 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment