துளசி தேவியின் தோற்றம்

 



துளசி தேவியின் தோற்றம்


தருமத்வஜன் என்கிற அரசனுக்கும் அவரது மனைவி மாதவிக்கும் கார்த்திகை மாதம் பௌர்ணமியும், சுக்ரவாரமும் கூடிய சுபதினத்தில் லக்ஷ்மிதேவியின் அம்சமாக துளசி தேவி அவதரித்தார்.


பருவ வயது வந்தவுடன் துளசி தேவி பதரிகாச்ரமம் சென்று பகவான் ஸ்ரீமந் நாராயணரையே நாயகனாக அடைய வேண்டுமென்று பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரியலானார்.


பிரம்மதேவர் அவர் முன் தோன்றி,"துளசி நீ விரைவில் சங்கசூடனை மணப்பாய்" என்று வரமருள, அதற்கு துளசி, "நான் தங்களிடம் நாராயணனை அடைய வேண்டுமென்றுதான் தவமிருந்தேன் ஆனால்..." என்றதும், பிரம்மா "நீ முன் ஜென்மத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை மோகித்ததால் ஸ்ரீமதி ராதாராணி உன் மீது கோபம் கொண்டு உன்னை பூவுலகில் மானிட யோனியில் பிறக்குமாறு சபித்திருக்கிறாள். அதனால்தான் நீ இங்கு பிறந்திருக்கிறாய். கிருஷ்ணரின் அருளால் விரைவில் அவரையே பதியாக அடைவாய். ஆனால் அதற்கு முன்பு, முற்பிறவியில் கிருஷ்ணரின் அங்கத்தில் தோன்றிய சுதர்மாவும், கிருஷ்ணருக்காக ஸ்ரீமதி ராதாராணியிடம் ராக்ஷஸத்தனமாக வாதாடியதால் ராதாராணியின் சாபத்திற்குள்ளாகி சங்கசூடன் என்னும் ராக்ஷஸனாக பூமியில் பிறந்துள்ளான். அதுமட்டுமல்ல அவன் சுதர்மாவாக இருந்தபோது உன் மீது கொண்ட காதலை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் தெரிவிக்க, பக்தவாத்ஸல்யனான அவரும் அவ்வாறே வரமளித்துள்ளார். ஆகையால் பூர்வஜென்ம வாசனையுடன் அவன் உன்னைக் காணவரும்போது அவனை மணந்து கொள்வாயாக" பிறகு இந்த ஜன்மம் முடியும் தருவாயில் நீ அந்த வைகுண்ட நாதனை அடைவாய் என்றருளி ராதிகா மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து விட்டு மறைந்தார்.


துளசிதேவியும் அம் மந்திரத்தை உச்சரித்தபடி இருக்கையில் ஒருநாள், ஜைகீஷ்யவ்யர் எனும் முனிவரிடம் கிருஷ்ண மஹாமந்திரத்தை உபதேசம் பெற்றதன் பலனாய் கிடைத்த நாராயண கவசத்தை கழுத்தில் தரித்துக் கொண்டு அவ்வழியே வந்த சங்கசூடன், துளசி தேவியைப் பார்த்து மையல் கொள்ள இருவருக்கும் காதல் கைகூடி திருமணமானது.


மிகுந்த பலசாலியான சங்கசூடன், தனது வலிமையால் மூவுலகங்களையும் ஆட்டிப் படைக்கத் துவங்கினான். அவனால் விரட்டியடிக்கப்பட்ட தேவர்கள் பகவான் விஷ்ணுவை சரணடைந்த போது, நீங்கள் சிவபெருமானை சரணடையுங்கள்" என்று கூற அவர்களும் சிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமானும் அவர்களைக் காக்க திருவுளம் கொண்டு, முதலில் சித்திரரதன் என்னும் கந்தர்வனை அவனிடத்தில் தூதுவனாக அனுப்பி வைத்தார். அவன் அதற்கு மசியாமல் போகவே இருவருக்குமான யுத்த தேதி முடிவானது.


துளசிதேவியிடம் இச் செய்தியை சங்கசூடன் கூறியபோது பயந்த அவள், "ஸ்வாமி இன்று காலை கெட்ட கனவு கண்டேன்". அதற்கு ஏற்ப இந்த செய்தியை தாங்கள் கூறுகிறீர்கள். யுத்தத்தில் உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்..." என்றதும், அவன், உண் பதிவிரத தன்மைக்கு பங்கம் நேரிடாத வரை எனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது" என்று தேற்றி விட்டு யுத்தத்திற்குப் புறப்பட்டான்.


யுத்தகளத்தில் சிவபெருமானைப் பார்த்ததும் பூர்வஜென்ம நினைவு வந்தவனாய் அவரை வணங்கி, "ஐயனே! உங்களை தரிசித்ததும் நான் தங்களால் வதைக்கப்பட வேண்டியவன் என்பதை உணர்ந்தேன். ஆதலால் விதிப்படி நடப்பதை எதிர்பார்க்கிறேன்" என்று கூறி அவரை வணங்கி போரை தொடங்கினான்.


நாட்கணக்காக நீடித்த யுத்தத்தில் யாருக்கும் வெற்றி. தோல்வி கிடைக்கவில்லை. அவனை ரக்ஷிப்பதில் அவனது மந்திர கவசத்திற்கும் பங்கு உண்டு என்பதால் சிவபெருமான் மறுபடியும் மஹாவிஷ்ணுவிடம் செல்ல, அவர் "கவலை வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். சங்கசூடனின் இந்தப் பிறவி முடியும் நேரம் வந்து விட்டது. அவனது கவசத்தைப் பெறுவதோடு துளசியின் பதிவிரதா தர்மத்திற்கும் பங்கம் ஏற்படுமாறு செய்து விட்டு வருகிறேன்" என்று கூறி, சிவபிபெருமானிடம் சூலத்தைக் கொடுத்து அதனைக் கொண்டு அவனை வதைக்குமாறு கூறி அனுப்பினார்.


மறுநாள் போருக்குச் செல்வதற்கு முன் சங்கசூடன் பிராம்மணர்களுக்கு தானதர்மங்களை வழங்கும் சமயம் ஒரு பிராமணர் வடிவில் அங்கு சென்ற மஹாவிஷ்ணு அவனிடம் நாராயண கவசத்தை யாசகம் கேட்டுப் பெற்றார். அவனும் மறுப்புச் சொல்லாது அதை அவருக்கு கொடுத்து விட்டான்.


மந்திர கவசத்தை பெற்றுக் கொண்ட பகவான் பச்சைவிஷ்ணு அதன் மஹிமையால் சங்கசூடனாகி, துளசியின் அரண்மனைக்குச் சென்றார். பதியைக் கண்டு மகிழ்ந்த துளசி, ”போர் முடிந்து விட்டதா? என்று ஆச்சர்யமாக வினவ, அதற்கு அவர், "இல்லை. எங்களுக்குள் ஒரு மாதகாலம் தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்ளலாம் என்று உடன்படிக்கை எடுத்திருக்கிறோம்" என்றதும் மகிழ்ந்த அவள், அவனை ஆலிங்கனம் செய்து கொண்டபோது அவனது ஸ்பரிசத்தில் வேறுபாடை உணர்ந்து, கோபத்துடன் அவரைப் பார்த்து, நீ யார் உண்மையைச் சொல்" என்று வினவினாள்.


பகவான் விஷ்ணு அவளுக்கு தம் சுயவுருவைக் காட்டினார். அதைப் பார்த்ததும் உள்ளம் குமுறிய துளசி," என் பதிவிரதா தர்மத்திற்கு களங்கம் விளைவித்த நீர் கல்லாக போகக் கடவீர்" என சபித்தாள். ஆனால் பகவான் விஷ்ணு அமைதியாக," ஹே துளசி! நீ என்னை அடைய வேண்டுமென்று தவம் செய்தாய். என் அம்சமான சங்கசூடனும் உன்னை மண முடிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் என்னை நோக்கி தவம் செய்தான். நானும் அவனது விருப்பத்தை நிறைவேற்றினேன். உங்கள் இருவருடைய பிறவி நோக்கமும் முடிந்து இருவரும் என்னை சேரும் நேரம் வந்துவிட்டது. நீ உயிரைத் துறந்தவுடன் இப்போதுள்ள உன் உடல் இப்பூமியில் கண்டகி நதியாகி, மனிதர்களை பரிகத்தமடையச் செய்வாய். உன்னுடைய ரோமங்கள் துளசி செடியாகி மூவுலகங்களிலும் நிறைந்திருக்கும். நீ என்னை கல்லாக போகுமாறு சபித்ததால் நான் கண்டகி நதியில் மலையாக இருப்பேன். கிருமிகள் என்னை துளைத்து பற்பல உருவங்களில் சிறு சிறு கற்களாக நதியில் தள்ளும். அவற்றை சாளக்ராமம் என்ற பெயரில் பக்தர்கள் பூஜிப்பர்' என்று மஹாவிஷ்ணு அருளியதும் துளசி தன் உடலைத் துறந்து திவ்ய ரூபத்தோடு பகவான் விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். சாளக்ராமமும், துளசியும் இருக்குமிடத்தில் சகல செல்வங்களும் நிறைந்திருக்கும்.


துளசி மனதால் மஹாவிஷ்ணுவை தனது பதியாக ஒரு கணம் நினைத்ததனால் அவளது பதிவிரததர்மத்திற்க்கு பங்கம் ஏற்பட்டு சங்கசூடனின் பலம் குறைந்தது. இதை உணர்ந்த சிவபெருமான் பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை எடுத்து அவன் மீது பிரயோகித்தார். முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவன் இரு கரங்களையும் கூப்பி ஸ்ரீ கிருஷ்ணரை தியானித்து அதை ஏற்றுக் கொண்டான். சூலாயுதம் அவனைத் தாக்கி அவனது அஸ்தியுடன் சேர்ந்து சங்குகளானது. சங்கசூடன் திவ்ய தேகத்தை அடைந்து, கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அன்றிலிருந்து சங்கானது மஹாவிஷ்ணுவிற்கும், அனைத்து தேவர்களுக்கும் மிகவும் பிரியமானதாயிற்று. சங்கநாதம் எங்கு கேட்கிறதோ, அங்கு லக்ஷ்மி தேவி வாசம் செய்வார். சங்கு தீர்த்தத்தால் நீராடுபவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுவான். சங்காபிஷேகம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.



துளசியின் 8 நாமங்கள்

******************


விருந்தாவனி : விருந்தாவனத்தில் தோன்றுபவள்


விருந்தா: பல செடிகளிலும், மரங்களிலும் தோன்றுபவள்.


விஸ்வ-பூஜிதா: பிரபஞ்சங்களில் பூஜிக்கப்படுபவள்


புஸ்ப-சாரா: புஷ்பங்களில் சாரமானவள்.


நந்தினி: நம்பிக்கையும், மகிழ்வும் தருபவள்


கிருஷ்ண-ஜீவனி: கிருஷ்ணரின் ஜீவனாய் இருப்பவள்


விஸ்வ-பாவனி: பிரபஞ்சங்களைத் தூய்மைப்படுத்துபவள்.


துளசி : ஒப்பிட இயலாதவள்



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 





Comments

  1. Hare Krishna 🙏🙇‍♀️Thank you so much prabhuji 🙏🙇‍♀️

    ReplyDelete

Post a Comment

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more