அங்கீகரிக்கப்பட்ட தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தனது கடமையை ஒருவர் சரிவர செய்ய வேண்டும்
இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும், அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும், உயிர்வாழ்ச் சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன. இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும், தன்னுணர்வையும் பெறுவதற்கு, ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ், பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும்.
பொருளுரை
பரமபுருஷருடைய பிரம்மாண்ட ரூபத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் பிறப்பதால், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும், அப்பரம உடலின் நித்தியத் தொண்டர்களாக இருக்க வேண்டியவர்களாவர். நம் சொந்த உடலிலுள்ள வாய், கரங்கள், தொடைகள், மற்றும் கால்கள் முதலான ஒவ்வொரு அங்கமும் முழு உடலுக்குத் தொண்டு செய்வதற்கென உள்ளன. அதுதான் அவற்றின் உண்மையான நிலை. இழிவடைந்த நிலையிலுள்ள மனிதர்கள் இந்த உண்மை நிலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் மனித வாழ்வைப் பெற்றுள்ள அவர்கள் வர்ணாஸ்ரம முறையின் மூலமாக இதை அறிந்திருக்க வேண்டியவர்களாவர். மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல், பிராமணரொருவர் மனித சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் ஆன்மீக குருவாவார். இவ்வாறாக பகவானின் உன்னத அன்புத் தொண்டில் சங்கமிக்கும் பிராமணப் பண்பாடுதான் ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குரிய அடிப்படைக் கொள்கையாகும்.
ஆத்மா தனது பந்தப்பட்ட நிலையில், பிரபஞ்சத்திற்குத் தான் எஜமானன் ஆகிவிடலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான். எல்லோரையும் விட தான் உயர்ந்தவன் என்ற இந்த தப்பெண்ணம் தான் ஒரு ஜீவராசியின் மிக மோசமான மாயைக்குட்பட்ட நிலையாகும். பரமபுருஷர் மாயையால் பந்தப்படுத்தப்பட முடியாதவர் என்பதை முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா நினைத்துப் பார்ப்பதில்லை. பரமபுருஷரே மாயைக்கு உட்பட வேண்டும் என்றால், அவரது உயர்வு எங்கே? இது உண்மையானால் மாயையல்லவா உயர்ந்ததாக இருக்கும்! எனவே ஜீவராசிகள் பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் உயர்ந்தவர்களாக இருக்க முடியாது. பந்தப்பட்ட ஆத்மாவின் உண்மையான நிலை இப்பதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது: பந்தப்பட்ட ஆத்மாக்கள் இயற்கையின் முக்குணங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால், தூய்மையற்ற நிலையில் உள்ளனர். எனவே தகுதியால் ஒரு பிராமணராகவும் வைஷ்ணவராகவும் உள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தங்களை அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முறையின் கீழ் (தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ்) பகவானை வழிபடுவதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள, தூய்மையடைவதற்குரிய ஒரே வழியாகும். வேறேந்த வழிமுறையும் தகுதியுடையதாக சிபாரிசு செய்யப்படவில்லை. தூய்மையடைவதற்குரிய மற்ற வழிமுறைகள், வாழ்வின் இந்நிலையை அடைய ஒருவருக்கு உதவக் கூடும்; ஆனால் உண்மையான பூரணத்துவத்தை அடையும் முன்பாக இக்கடைசி நிலைக்கு ஒருவன் வந்துதான் ஆகவேண்டும். பகவத்கீதை (7.19) இவ்வுண்மையைப் பின்வருமாறு உறுதி செய்கிறது:
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.6.33 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment