மொழிபெயர்ப்பு
எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக. இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு.
பொருளுரை:
கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன், உலகின் எஜமான னைப் போன்று செயல்படுவதில்லை. அவன் ஒரு சேவகனைப் போன்று, பரம புருஷரின் முழுமையான வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும். சேவகனுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் கிடையாது. அவன் எஜமானரின் கட்டளைப்படி மட்டுமே செயல்படுகின்றான். உன்னத எஜமானருக்காகத் தொண்டு செய்யும் சேவகன், இலாப நஷ்டங்களினால் பாதிக்கப்படுவ தில்லை. அவன் தனது கடமையை பகவானது கட்டளையின்படி நம்பிக்கையுடன் நிறைவேற்றுகிறான். அர்ஜுனன் கிருஷ்ணருடைய சொந்த வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தான், ஆனால் கிருஷ்ணர் இல்லாதபோது ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தற்போது விவாதிக்கலாம். இந்தப் புத்தகத்தில் கிருஷ்ணரால் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுவதாலும், கிருஷ்ணருடைய பிரதிநிதியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதாலும், ஒருவன் அதே பலனை அடைய முடியும். மத்–பர: என்னும் சமஸ்கிருதச் சொல் இப்பதத்தில் மிகவும் முக்கியமானது. கிருஷ்ண உணர்வில், கிருஷ்ணரைத் திருப்திப்படுத்து வதற்காக மட்டும் செயலாற்றுவதைத் தவிர வாழ்வில் எந்த நோக்கமும் ஒருவனுக்கு இல்லை என்பதை இது குறிப்பிடுகின்றது. மேலும், அவ்வாறு செயல்படும்போது, அவன் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்: “இந்தக் குறிப்பிட்ட கடமையை ஆற்றுவதற்காக நான் கிருஷ்ணரால் நியமிக்கப்பட்டுள்ளேன்.” இந்த எண்ணத்தில் செயல்படும் போது, அவன் இயற்கையாகவே கிருஷ்ணரைப் பற்றி நினைத்தாக வேண்டும். இதுவே பக்குவமான கிருஷ்ண உணர்வு. இருப்பினும், மனம் போன போக்கில் எதையாவது செய்துவிட்டு, அதன் பலனை முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணித்தல் கூடாது. அத்தகு கடமை கிருஷ்ண உணர்வின் பக்தித் தொண்டல்ல. ஒருவன் கிருஷ்ணருடைய ஆணைக்கேற்ப செயல் பட வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம். கிருஷ்ணரின் அந்த ஆணை, சீடப் பரம்பரையின் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிட மிருந்து வருகின்றது. எனவே, ஆன்மீக குருவின் கட்டளையினை வாழ்வின் முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அடைந்து அவரது அறிவுரைகளுக்கு ஏற்ப செயல்பட்டால், ஒருவன் வாழ்வின் பக்குவத்தை கிருஷ்ண உணர்வில் அடைவது நிச்சயம்.
( ஶ்ரீமத் பகவத் கீதை 18.57 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment