பௌதீக வாழ்க்கைக் காட்டின் நேரடி பொருள் இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது, வணிகர்கள் நகரங்களில் நல்ல விலைக்கு விற்பதற்காகக் காட்டிற்குள் சென்று பல அரியப்பொருட்களைச் சேகரிக்கின்றனர். ஆயினும் அக்காட்டுப்பாதை மிகவும் ஆபத்து நிறைந்ததாகும். பௌதீக உலகில் அனுபவித்து மகிழ்வதற்காக ஒரு தூய ஆத்மா பகவானின் தொண்டினைக் கைவிட விரும்பும் பொழுது கிருஷ்ணர் பௌதீக உலகினுள் நுழைவதற்கான வாய்ப்பினை நிச்சயம் அவனுக்கு அருள்வார். “பிரேம விவர்தத்தில்,” “க்ருஷ்ண பஹிர் முக ஹனா போக வாஞ்சா கரே” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பௌதீக உலகில் ஒரு தூய ஆத்மா வீழ்வதற்கு இதுவே காரணமாகும், ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பின் கீழ் அவனது செயல்பாடுகள் இருப்பதினால் உயிர்வாழி பல்வேறு உயிர்க்குலங்களிடையே பல்வேறு நிலைகளை அடைகிறான். சிலநேரம் அவன் தேவலோகத்தில் ஒரு தேவகுமாரனாகப் பிறக்கிறான், சிலநேரம் கீழ் உலகில் ஒர் இழிந்த ஜந்துவாகப் பிறக்கிறான். இது தொடர்பாக ஸ்ரீல நரோத்தம தாஸ தாக்கூர, “நானா யோனி ஸதா பிரே:” உயிர்வாழி பல்வேறு உயிர்க்குலங்களின் மூலம் கடந்து செல்கிறான் என்றும் “கர்தர்ய பக்ஷண கரே:” அருவருப்புடையவற்றை உண்டு மகிழ்கின்றானென்றும் “தார ஜன்ம அத: பாதே யயா:” இவ்வாறு அவனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் அழிக்கப்படுகிறது என்றும் கூறுகிறார். கருணை நிறைந்த வைணவனின் பாதுகாப்பின்றி பந்தப்பட்ட ஆத்மா மாயையின் பிடியிலிருந்து வெளியேற முடியாது, பகவத்கீதையில் குறிப்பிட்டுள்ளபடி (மன ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தானிக கர்ஹதி) உயிர்வாழி தனது பௌதீக வாழ்க்கையினைத் தனது மனம் மற்றும் ஐந்து அறிவுப் புலன்களுடன் தொடங்குகிறான். இவற்றுடன் பௌதீக உலகில் வாழ்க்கைக்காகப் போராடுகிறான், இப்புலன்களே காட்டிலுள்ள துஷ்டர்கள் மற்றும் திருடர்களுடன் ஒப்பிடப்படுகின்றன, இவை மனிதனின் அறிவை எடுத்துக் கொண்டு அறியாமை வலையில் அவனைச் சிக்க வைக்கின்றன. இதற்கும் மேலாக மனைவி, மக்கள் என்னும் குடும்ப உறுப்பினர்கள் இவர்கள் காட்டிலுள்ள கொடிய விலங்குகளைப் போன்றோர். இக்கொடிய விலங்குகளின் ஒரே தொழில் மனிதன் சதையைத் தின்பது தான். உயிர்வாழி தான் நரிகள் மற்றும் குள்ளநரிகளால் (மனைவி மக்கள்) தாக்கப்படுவதற்கு அனுமதியளிக்கிறான். இவ்வாறு அவனது உண்மையான ஆன்மீக வாழ்க்கை முடிவடைகிறது. பௌதீக வாழ்க்கைக் காட்டில் அனைவரும் கொசுக்களைப் போன்று காழ்ப்புணர்ச்சி உடையவர்களே, எலிகளும், சுண்டெலிகளும் எப்போதும் இடையூறு விளைவித்துக் கொண்டே இருக்கின்றன. பௌதீக உலகில் உள்ள ஒவ்வொருவனும் இதுபோன்ற மோசமான நிலையில் இடப்பட்டு காழ்ப்புணர்ச்சியுடைய மனிதர்களாலும், இன்னல் விளைவிக்கும் விலங்குகளினாலும் சூழப்பட்டிருக்கிறான். இதன் விளைவாக பௌதீக உலகில் உள்ள உயிர்வாழி ஏராளமான பல உயிர்வாழிகளினால் எப்போதும் கொள்ளையடிக்கவும் கடிக்கவும் படுகிறான். இவ்வளவு இடைஞ்சல்கள் இருந்தும் அவன் தன் இல்வாழ்வினைத் துறக்க விரும்புவதில்லை, என்பதோடு எதிர்காலத்தில் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவன் தனது பலன்தரும் செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். இவ்வாறு அவன் கர்மத்தின் விளைவுகளில் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறான், அதனால் அவன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகிறான். அவனுக்குச் சாட்சியாகப் பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் இருக்கின்றனர். தேவர்களும் சாட்சிகளாக இருக்கின்றனர். ஆனால் பந்தப்பட்ட ஆத்மா புலன்நுகர்ச்சிகளுக்காகத் தான் செய்யும் முயற்சிகளை எவரும் கவனிப்பதில்லை என்று கருதுகிறான். சிலசமயம் அவன் கண்டு பிடிக்கப்பட்டானென்றால் அவன் எல்லாவற்றையும் தற்காலிகமாகத் துறக்கிறான். ஆயினும் உடல்மீது அவன் கொண்ட பற்றுதலின் காரணமாக அவன் நிறைவு அடைவதற்கு முன்பாகவே தனது துறவினை விட்டுவிடுகிறான்.
இப்பௌதீக உலகில் ஏராளமான காழ்ப்புணர்ச்சியுடைய மனிதர்கள் இருக்கின்றனர், வரிவிதிக்கும் அரசாங்கம் ஒன்று இருக்கிறது. அது ஆந்தையுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் கண்ணுக்குப் புலனாகா சில்வண்டுகள் இருக்கின்றன. அவை தாங்கமுடியாத அளவிற்கு நாராச ஒலி எழுப்பும். பந்தப்பட்ட ஆத்மா நிச்சயம் ஜட இயற்கையின் பிரதிநிதிகளால் மிகவும் துன்புறுத்தப்படுகிறான் ஆயினும் விரும்பத்தகாத அவனது தொடர்பின் காரணமாக அவனது புத்தியும் இழக்கப்படுகிறது. பௌதீக வாழ்வின் இன்னல்களிலிருந்து விடுதலை பெறும் அவனது முயற்சியின் காரணமாக, பக்தித் தொண்டினைப் புரிந்துகொள்ளாது மந்திர தந்திரங்கள் செய்யும் “யோகிகள், சாதுக்கள், அவதாரங்கள்” போன்றோரிடம் பலியாகிறான். சில சமயம் பந்தப்பட்ட ஆத்மா தனது பொருள் முழுவதையும் இழந்து விடுகிறான், இதனைத் தொடர்ந்து அவன் தனது குடும்ப உறுப்பினர்களிடம் அன்பில்லாதவனாகிறான். பௌதீக உலகில் உண்மையில் ஒரு துளியளவு இன்பமும் இல்லை, இதற்காகத்தான் பந்தப்பட்ட ஆத்மா பிறவிகள் தோறும் அலைந்து கொண்டிருக்கிறான். அரசாங்க அலுவலர்கள் கொடிய அரக்கர்களைப் போன்றவர்கள் ஆவர். இவர்கள் அரசாங்கத்தை நடத்துவதற்கு ஏராளமான வரிகள் விதிக்கின்றனர். இத்தாங்க முடியாத வரித்தொல்லையினால் பந்தப்பட்ட ஆத்மா மிகுந்த வருத்தமடைகிறான்.
பலன்தரும் செயல்களின் பாதை கடினமான மலைகளிடத்து அழைத்துச் செல்கின்றது. ஆயினும் அவன் வெற்றி பெறுவதே இல்லை. இதனைத் தொடர்ந்து அவன் மேலும் மேலும் துன்பத்திற்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகிறான். பௌதீகம் மற்றும் பணத் தொல்லைக்கு ஆளாகி பந்தப்பட்ட ஆத்மா தேவையின்றி தன் குடும்பத்தினர் மீது எரிந்து விழுகிறான். இப்பௌதீக நிலைமையில் நான்கு தலையாயத் தேவைகள் இருக்கின்றன. இவற்றுள் உறக்கம் என்பது ஒரு மலைப்பாம்புடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. விழித்திருக்கும்போது பந்தப்பட்ட ஆத்மா தனது உண்மைத் தோற்றத்தினை முற்றிலும் மறந்து விடுகிறான், உறங்கும் போது பௌதீக வாழ்க்கையின் துன்பங்களை அவன் உணர்வதில்லை. ஆன்மீக வளர்ச்சிக்காக அவன் பக்தர்களுடன் தொடர்புடையவனாகத் தோன்றிய போதிலும் பந்தப்பட்ட ஆத்மா சில சமயம் திருடவும், ஏமாற்றவும் செய்கிறான், மாயையின் பிடியிலிருந்து வெளிவருவதே அவனது ஒரே தொழிலாக இருக்க தவறான வழிகாட்டுதலினால் அவன் மேலும் மேலும் பௌதீக விஷயங்களில் சிக்கிக் கொள்கிறான். இப்பௌதீக உலகம் தொல்லைக்குரியது என்பதோடு இன்பம், துன்பம், பற்று, பகை, காழ்ப்பு போன்றவை குறைந்த இன்னல்கள் உடையதுமாகும். மொத்தத்தில் இது வேதனையும் துன்பமும் நிறைந்ததாகும். ஒருவன் தன் மனைவி மற்றும் பாலியல் மீது கொண்ட மோகத்தின் காரணமாகத் தனது புத்தியினை இழக்கும் பொழுது அவனது உணர்வு முற்றிலும் மாசுடையதாகிறது. அதனால் அவன் பெண்களுடன் உள்ள தொடர்பு ஒன்றைப் பற்றியே நினைக்கிறான். சர்ப்பத்தைப் போன்றிருக்கும் காலம் பிரம்மதேவனிலிருந்து, சிற்றெரும்பு உள்ளிட்ட அனைவரின் உயிர்களையும் எடுத்துக் கொள்கிறது. சில சமயம் பந்தப்பட்ட ஆத்மா தடுக்கமுடியாத காலத்திலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக சில போலி மீட்பவர்களைச் சரணடைகிறான். பிறகு எவ்வாறு அவனால் பிறரைக் காப்பாற்ற முடியும்? இப்போலி மீட்பவர்கள் வேதங்கள் மற்றும் தகுதிவாய்ந்த அந்தணர்களிடமிருந்து பெறும் ஞானத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களது ஒரே தொழில் பாலியல் நாட்டம் மற்றும் விதவைகளுக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டுமென்று பரிந்துரைப்பதாகும். இதனால் அவர்கள் காட்டிலுள்ள குரங்குகளைப் போன்றவர்களாவர். ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி இவ்வாறு பௌதீகக் காடு மற்றும் அதன் கடினமான பாதைபற்றி மகாராஜா பரீக்ஷித்துவிற்கு விளக்குகிறார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 5.14)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment