கீதாசாரம்



மத்–கர்ம–க்ரூன் மத்–பரமோ மத்3–ப4க்த: ஸங்க3–வர்ஜித:
நிர்வைர: ஸர்வ–பூ4தேஷு ய: ஸ மாம் ஏதி பாண்ட3


மொழிபெயர்ப்பு

எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக் கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துள்ளானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான்.


பொருளுரை: 

பகவானின் எல்லா ரூபங்களிலும் உயர்ந்தவராக விளங்கும் கிருஷ்ணரை ஆன்மீக வானிலுள்ள கிருஷ்ண லோகத்தில் அணுகுவதற்கும், அந்த உத்தம புருஷருடன் நெருக்கமான உறவு கொள்வதற்கும் எவரேனும் விரும்பினால், அந்த பரமனாலேயே இங்கே கூறப்பட்டுள்ள வழிமுறையை ஏற்றுக்கொள்வது அவசியம். எனவே, இப்பதம் பகவத் கீதையின் ஸாரமாகக் கருதப்படுகின்றது. உண்மையான வாழ்க்கையான ஆன்மீக வாழ்வைப் பற்றி அறியாமல், இயற்கையை ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு ஜடவுலகில் ஈடுபட்டுள்ள கட்டுண்ட ஆத்மாக்களுக்கான நூல் பகவத் கீதை. ஆன்மீக மான பரம புருஷருடனான நித்திய உறவைப் பற்றியும், ஆன்மீக இருப்பைப் பற்றியும், ஒருவன் புரிந்துகொள்வதற்கு பகவத் கீதை வழிகாட்டுகின்றது. மேலும், முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வது எப்படி என்பதையும் அது கற்றுத் தருகின்றது. ஒருவன் தனது ஆன்மீகச் செயல்களில் வெற்றியடைவதற்கான வழிமுறை தற்போது இப்பதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது: பக்தித் தொண்டே அந்த வழிமுறையாகும்.

செயலைப் பொறுத்தவரை, ஒருவன் தனது முழு சக்தியையும் கிருஷ்ண உணர்வின் செயல்களுக்கு மாற்ற வேண்டும். பக்தி ரஸாம்ருத சிந்துவில் (1.2.255) கூறப்பட்டுள்ளபடி,

அனாஸக்தஸ்ய விஷயான் யதா2ர்ஹம் உபயுஞ்ஜத:
நிர்ப3ந்த:4 க்ருஷ்ண–ஸம்ப3ந்தே4 யுக்தம் வைராக்3யம் உச்யதே

கிருஷ்ணருடன் தொடர்பில்லாத எந்தச் செயலையும் யாரும் செய்யக் கூடாது. இதுவே க்ருஷ்ண–கர்ம என்று அழைக்கப்படுகின்றது. ஒருவன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் தனது செயல்களின் விளைவில் அவனுக்கு பற்றுதல் இருக்கக் கூடாது; பலனை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். உதாரணமாக, ஒருவன் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அச்செயலை கிருஷ்ண உணர்வாக மாற்றுவதற்கு அவன் கிருஷ்ண ருக்காக வியாபாரம் செய்ய வேண்டும். வியாபாரத்தின் உரிமையாளர் கிருஷ்ணர் என்றால், வியாபாரத்தின் இலாபத்தையும் கிருஷ்ணரே அனுபவிக்க வேண்டும். ஒரு வியாபாரியிடம் இலட்சக்கணக்கான ரூபாய் இருந்து, அவன் அவையனைத்தையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்க வேண்டிய தேவையிருந்தால், அவன் அவ்வாறு செய்ய வேண்டும். இதுவே கிருஷ்ணருக்காகச் செயல்படுவதாகும். தனது புலனின்பத்திற்காக மாபெரும் மாளிகையை கட்டுவதற்குப் பதிலாக, கிருஷ்ணருக்காக ஓர் அருமையான ஆலயத்தைக் கட்ட வேண்டும். அங்கே கிருஷ்ணரின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து, பக்தித் தொண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட புத்தகங் களில் கொடுக்கப்பட்டுள்ளபடி, விக்ரஹ சேவைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவை அனைத்துமே க்ருஷ்ண–கர்ம. தனது செயலின் விளைவு களில் பற்றுதல் இருக்கக் கூடாது, ஆனால் பலனை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்க வேண்டும். மேலும், கிருஷ்ணருக்குப் படைக்கப்பட்ட உணவை அவன் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவன் கிருஷ்ணருக்காக மாபெரும் கட்டிடத்தைக் கட்டி அதில் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தால், அக்கட்டிடத்தில் அவன் வாழ்வதற்கு எவ்வித தடையும் இல்லை, இருப்பினும், அக்கட்டிடத்தின் உரிமையாளர் கிருஷ்ணரே என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு எனப்படும். ஒருவனால் கிருஷ்ணருக்குக் கோயில் கட்ட இயலா விடில், அவன் கிருஷ்ணருடைய கோயிலை தூய்மைப்படுத்துவதில் தன்னை ஈடுபடுத்தலாம்; அதுவே க்ருஷ்ண கர்ம எனப்படும். ஒரு நந்தவனத்தை உண்டாக்கலாம். இந்தியாவில் ஏழை மனிதனிடமும் சற்று நிலம் உண்டு, அவ்வாறு நிலமுள்ளவன் அதில் தோட்டம் வளர்த்து கிருஷ்ணருக்கு மலர்களை அர்ப்பணிப்பதற்கு அதனை உபயோகிக்கலாம். துளசி இலைகள் மிகவும் முக்கியமானவை என்பதால், துளசிச் செடிகளை நடலாம், பகவத் கீதையில் கிருஷ்ணரே இதனை சிபாரிசு செய்துள்ளார். பத்ரம் புஷ்பம் ப2லம் தோயம். இலை, பூ, பழம், அல்லது சிறிது நீர் ஆகியவற்றை தனக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புகின்றார்—அவ்வாறு அர்ப்பணிக்கப்படும்போது அவர் திருப்தியடைகின்றார். இந்த இலை முக்கியமாக துளசி இலையைக் குறிக்கின்றது. எனவே, துளசிச் செடியை வளர்த்து நீர் ஊற்றலாம். இவ்வாறாக மிகவும் ஏழ்மையான மனிதனும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட முடியும். கிருஷ்ணருக்காக செயல்படுவது எவ்வாறு என்பதை விளக்குவதற்காக இந்த உதாரணங்கள் அளிக்கப்பட்டன.

மத்–பரம: என்னும் சொல், கிருஷ்ணருடன் அவரது ஆன்மீக உலகில் உறவு கொள்வதே வாழ்வின் உயர்ந்த பக்குவமாகக் கருதுபவனைக் குறிக்கின்றது. அத்தகு மனிதன், சந்திர லோகம், சூரிய லோகம், ஸ்வர்க லோகங்கள் போன்ற உயர் லோகங்களுக்கு ஏற்றம் பெற விரும்புவதில்லை, இந்த பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த கிரகமான பிரம்ம லோகத்திற்குச் செல்லவும் அவன் விரும்புவதில்லை. அவற்றில் அவனுக்கு எவ்வித நாட்டமும் இல்லை. ஆன்மீக உலகிற்கு மாற்றமடைவதில் மட்டுமே அவன் நாட்ட முடையவனாக இருக்கின்றான். ஆன்மீக வானிலும் கூட, பிரகாசமான பிரம்மஜோதியில் ஐக்கியமாவதில் அவன் திருப்தியடைவதில்லை; ஏனெனில், கிருஷ்ண லோகம் என்றும் கோலோக விருந்தாவனம் என்றும் அழைக்கப்படும் மிகவுயர்ந்த ஆன்மீக கிரகத்தினுள் நுழைய அவன் விரும்புகின்றான். அந்த கிரகத்தைப் பற்றிய முழு அறிவு அவனிடம் உள்ளதால், வேறு எதிலும் அவன் நாட்டம் கொள்வதில்லை. மத்3–ப4க்த: எனும் சொல்லால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, அவன் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டுள்ளான், அதிலும் குறிப்பாக, கேட்டல், கூறுதல், நினைவில் வைத்தல், வழிபடுதல், இறைவனின் தாமரைத் திருவடிகளுக்கு சேவை செய்தல், பிரார்த்தனை செய்தல், இறைவனின் ஆணைகளை நிறைவேற்றுதல், அவருடன் நட்பு கொள்ளுதல், எல்லாவற்றையும் அவருக்கே அர்ப்பணித்தல் ஆகிய பக்தித் தொண்டின் ஒன்பது முறைகளை அவன் கடைப்பிடிக்கின்றான். பக்தியின் இந்த ஒன்பது முறைகளிலும் ஒருவன் ஈடுபடலாம், அல்லது எட்டு, ஏழு, குறைந்த பட்சம் ஒன்றிலாவது ஈடுபடலாம். இது நிச்சயமாக அவனைப் பக்குவப்படுத்தும்.

ஸங்க3–வர்ஜித: எனும் வார்த்தை மிகவும் முக்கியமானது. கிருஷ்ணருக்கு எதிரான நபர்களின் சங்கத்திலிருந்து ஒருவன் தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும். நாத்திகர்கள் மட்டும் கிருஷ்ணருக்கு எதிரானவர்கள் அல்ல, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக் கற்பனைகளில் கவரப்பட்டுள்ளவர் களும் கிருஷ்ணரின் எதிரிகளே. எனவே, பக்தியின் தூய வடிவம் பக்தி ரஸாம்ருத சிந்துவில் (1.1.11) பின்வருமாறு வர்ணிக்கப்பட்டுள்ளது:


அன்யாபி4லாஷிதா–ஷூ2ன்யம் க்ஞான–கர்மாத்3–யனாவ்ருதம்
அனுகூல்யேன க்ருஷ்ணானு– ஷீ2லனம் ப4க்திர் உத்தமா

எவரேனும் களங்கமற்ற பக்தித் தொண்டில் ஈடுபட விரும்பினால், அவர் எல்லாவிதமான ஜடக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும் என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி இப்பதத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். பலன்நோக்குச் செயல்களிலும் மனக் கற்பனையிலும் மயங்கிய நபர்களின் உறவிலிருந்து அவன் விடுபட்டிருக்க வேண்டும். அத்தகு தேவையற்ற உறவுகளிலிருந்தும் பௌதிக ஆசைகளின் களங்கத்திலிருந்தும் விடுபடும் போது, ஒருவன் கிருஷ்ணருக்குச் சாதகமான ஞானத்தை வளர்த்துக் கொள்கிறான், அதுவே தூய பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகின்றது. ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் (ஹரி பக்தி விலாஸ் 11.676). ஒருவன் சாதகமான விதத்தில் கிருஷ்ணரை நினைக்க வேண்டும், சாதகமான முறையில் அவருக்காகச் செயல்பட வேண்டும், பாதகமாக அல்ல. கம்சன் கிருஷ்ணருடைய எதிரிகளில் ஒருவன். கிருஷ்ணருடைய பிறப்பின் ஆரம்பத்திலிருந்தே கம்சன் பல்வேறு வழிகளில் அவரைக் கொல்லத் திட்டமிட்டான். ஆனால் அவனுக்கு எப்பொழுதும் தோல்வியே கிட்டியதால், அவன் எல்லா நேரங்களிலும் கிருஷ்ணரையே எண்ணிக் கொண்டிருந்தான். இவ்வாறாக, வேலை செய்யும்போதும், உண்ணும்போதும், உறங்கும் போதும், அவன் எல்லா விதத்திலும் கிருஷ்ண உணர்வுடன் இருந்தான். ஆனால் அத்தகு கிருஷ்ண உணர்வு சாதகமானதல்ல. எனவே, இருபத்து நான்கு மணி நேரமும் கிருஷ்ணரையே எண்ணிக் கொண்டிருந்தபோதிலும், கம்சன் அசுரனாகக் கருதப்பட்டான். மேலும், அவன் இறுதியில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். கிருஷ்ணரால் கொல்லப்படுபவன் யாராக இருந்தாலும் அவன் உடனடியாக முக்தியடைகிறான் என்பது உண்மையே, இருப்பினும் தூய பக்தர்களின் இலட்சியம் அதுவல்ல. தூய பக்தன் முக்தியைக்கூட விரும்புவதில்லை. உயர்ந்த வாசஸ்தலமான கோலோக விருந்தாவனத்திற்கு ஏற்றம் பெறுவதற்கும் அவன் விரும்புவதில்லை. அவனுடைய ஒரே குறிக்கோள், எங்கிருந்தாலும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே.

கிருஷ்ண பக்தன் அனைவருக்கும் நண்பனாக உள்ளான். எனவே, அவனுக்கு எதிரிகள் கிடையாது (நிர்வைர:) என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இஃது எவ்வாறு? கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றுள்ள பக்தன், கிருஷ்ணருக்குச் செய்யப்படும் பக்தித் தொண்டு மட்டுமே வாழ்வின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் ஒருவனை விடுவிக்க முடியும் என்பதை அறிவான். அவனுக்கு இதில் சுய அனுபவம் உள்ளது. எனவே, கிருஷ்ண உணர்வு எனும் இந்த வழிமுறையை மனித சமூகத்தில் அறிமுகப்படுத்த அவன் விரும்பு கின்றான். இறையுணர்வைப் பரப்புவதற்காகத் தமது வாழ்வில் அபாயங் களை எதிர் கொண்ட பக்தர்கள் பலரின் உதாரணங்கள் சரித்திரத்தில் காணப் படுகின்றன. ஒரு நல்ல உதாரணம் இயேசு கிருஸ்து. அவர் பக்தர் அல்லாதவர் களால் சிலுவையில் அறையப்பட்டபோதிலும், இறையுணர்வைப் பரப்பு வதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்தவர். அவர் கொல்லப்பட்டார் என்று எண்ணுவது மேலோட்டமான எண்ணமே என்பதில் சந்தேகமில்லை. அதுபோலவே, இந்தியாவிலும், ஹரிதாஸ் தாகூர், பிரகலாத மகாராஜர் போன்ற பல உதாரணங்கள் உள்ளன. அவர்கள் அத்தகு அபாயங்களை மேற்கொண்டது ஏன்? ஏனெனில், அவர்கள் கிருஷ்ண உணர்வைப் பரப்ப விரும்பினர், அச்செயல் மிகவும் கடினமானதாகும். ஒரு மனிதன் துன்புறு கிறான் என்றால், கிருஷ்ணருடனான தனது நித்திய உறவை அவன் மறந்திருப்பதே அதற்குக் காரணம் என்பதை கிருஷ்ண பக்தன் அறிகின்றான். எனவே, எல்லா பௌதிகப் பிரச்சனைகளிலிருந்தும் மனித இனத்தை விடுவிப்பதே, மனித சமுதாயத்திற்கு ஒருவன் ஆற்றக்கூடிய மிகப்பெரிய நற்பணியாகும். தூய பக்தன் இறைவனின் சேவையில் இவ்வாறாக ஈடுபட்டுள்ளான். எல்லாவித அபாயங்களையும் கிருஷ்ணருக்காக மேற் கொண்டு, கிருஷ்ண சேவையில் ஈடுபட்டுள்ள பக்தர்களின் மீது அவர் எவ்வளவு கருணையுடன் இருப்பார் என்பதை தற்போது நம்மால் கற்பனை செய்ய முடியும். எனவே, அத்தகையோர் தமது உடலை நீத்தபின் உன்னத மான லோகத்தை அடைவார்கள் என்பது நிச்சயம்.

சுருக்கமாகக் கூறினால், தற்காலிகத் தோற்றமான விஸ்வரூபம், எல்லாவற்றையும் அழிக்கும் கால ரூபம், மற்றும் நான்கு கரங்களையுடைய விஷ்ணு ரூபம் உட்பட அனைத்து ரூபங்களும் கிருஷ்ணரால் காட்டப் பட்டன. எனவே, இவ்வெல்லாத் தோற்றங்களுக்கும் மூலம் கிருஷ்ணரே. கிருஷ்ணர், விஷ்ணுவிடமிருந்து தோன்றியவர், அல்லது மூல விஸ்வரூபத் திடமிருந்து தோன்றியவர் என்பது உண்மையல்ல. எல்லா ரூபங்களுக்கும் கிருஷ்ணரே மூலம். விஷ்ணு நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ரூபங்களில் உள்ளார், இருப்பினும், இரு கரங்களுடன் விளங்கும் மூல ரூபமாகிய சியாமசுந்தர ரூபத்தைவிட கிருஷ்ணரின் வேறு எந்த ரூபமும் ஒரு பக்தனுக்கு முக்கியமானதல்ல. கிருஷ்ணருடைய சியாமசுந்தர ரூபத்திடம் தமது அன்பினாலும் பக்தியினாலும் பற்றுதல் உடையவர்கள், அவரை எப்போதும் தங்களது இதயத்தினுள் காண்கின்றனர் என்றும் வேறு எதையும் அவர்களால் காண இயலாது என்றும் பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணருடைய உருவமே முக்கியமானது, அவரே முதன்மை யானவர் 



( ஶ்ரீமத் பகவத்கீதை 11.55)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.






Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more